அம்மா உன்னை நேசிக்கிறேன்..

இந்த பூவுலகில் எத்தனையோ உறவுகள் பேனப்பட்டாலும், நேசிக்கப்பட்டாலும் அதில் ஏதோ ஒரு ஆதாயம் நேசிப்பவருக்கும், நேசிக்கப்படுபவருக்கும் இயற்க்கையாகவே இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இந்த உலகில் எந்த எதிப்பார்ப்பும் இல்லாமல், உள்ளார்ந்த அன்பின் வெளிப்பாடாய் இருப்பது ஒரு தாய் தன் சேய் மீது காட்டும் அன்பு..

இன்று இந்த அன்பிற்க்காக ஏங்கும் பலரைப் பார்க்க முடிகின்ற இவ்வேளையில், இந்த அன்பு கிடைக்கப்பெற்றும் நம்மில் எத்தனைப்பேர் நமது தாயை நேசித்து இருக்கிறோம்..? ஆங்கிலத்தில் ஒரு தத்துவமுண்டு ( Father is a Faith but Mother is a Fact ) அதாவது தந்தை என்பது ஒரு நம்பிக்கை அடிப்படையிலான விடயம்.

நமது தாய் சொன்னால்தான் தந்தை யார்ரென்பது நமக்கே தெரியும். ஆனால் தாய் என்பது ஒரு நிதர்சனமான உண்மை. தாய்க்கும், சேய்க்கும் இயற்க்கையாகவே ஒரு பினைப்பு இருக்கிறது. இந்த வேளையிலே நான் என் தாயை நினைத்துப் பார்கிறேன். அவள் எனக்காகப் பட்ட துன்பங்களையும், ஏற்றுக் கொண்ட தியாகங்களையும் என் விழியில் நிழலாடுகின்றது..

எத்தனை முறையோ நான் பள்ளிக்கு போக ஆரம்பித்த நாட்களில் கேள்விக் கனைகளால் துளைத்து எடுத்திருக்கிறேன். அப்போதெல்லாம் ஒவ்வொரு முறையும் சலிப்படையாமல் என் உச்சி முகர்ந்து முத்தமிட்ட்டு எனக்கு விடையளிப்பாள், அப்போது அவளிம் ஸ்பரிசம் எனக்கு விளங்கவில்லை.

கடையில் பார்க்கும் பொருட்கள் அனைத்தும் வேண்டும் என்று அங்கேயே கதறி அடம் பிடிப்பேன், தன்க்கென்று எதுவும் சேர்க்காத தாய் என் தந்தையனுப்பும் சிறு தொகையில் எங்கள் குடுப்பத்தையும் கவனித்து அதில் சேமிக்கும் சிறு தொகையை நான் கேட்டு அடம்பிடிக்கும் பொருளுக்காக செலவளிப்பாள் எங்கள் வீட்டின் பொருளாதார மேதை. அப்போதும் கூட கேட்ட பொருல் கிடைத்த மகிழ்ச்சித்தான் என்னை சுற்றிக்கொண்டதே தவிற என் தாயின் உள்ளார்ந்த அன்பு விளங்கவில்லை..

தென்மேற்க்கு பருவ மழையும், தென்கிழக்கு பருவமழையும் கோரத்தாண்டவமாடும் மழைக்காலங்களில் என் தாயோடு பயனித்திருக்கிறேன். அந்த மழையின் கடுமையில் மாட்டிக் கொள்ளும் தருவாயில் நான் நனைத்துவிடக் கூடாது என்பதற்காக அவள் போர்த்தியிருக்கும் முக்காட்டை எனக்குப் போர்தி, தனது குஞ்சுகளை அடைகாக்கும் கோழியைப் போல என்னை காத்து நின்று எனக்கு வரவேண்டிய ஜீரத்தையும், ஜலதோஷத்தையும் அவள் ஏற்றுக் கொண்டு அவதிப்படுவாள். அப்போது கூட மழையில். தப்பித்த ஆனந்தம்தான் மேலோங்கியதே தவிர எனக்காக துன்பத்தை ஏற்ற அந்த கருணையின் வடிவம் தெரியவில்லை..

ஆண்டுகள் கழிந்தன நானும் பெரியவனானேன். நண்பர்கள் வட்டாரமும் அதிகரித்தது. நாடோடிப்போல ஊர் சுற்றுவது. இரவில் ஊர் சுற்றிவிட்டு இரவு நடுநிசியில் தந்தையின் ஏசலுக்கு பயந்து பயந்து கதவைத் தட்டும்போது எனக்காக கண்னுறங்காமல் காத்திருந்து கதவைத் திறப்பாள். அப்போது கூட தந்தையின் ஏசலிலிருந்து தப்பித்த பெருமூச்சுத்தான் வந்தததே தவிர என்னை ஒரு போர் வீரன்போல் காத்த என் அன்னையின் வீரம் விளங்கவில்லை..

வந்தது என் கல்லூரி நாட்கள் ஊரைவிட்டு, என் குடும்பத்தை பிரிய நேறும் வேளை. இதுவரை என்னை நிமிடம் கூட பிரியாமல் என்னையே சுற்றிக் கொண்டிருந்த என் அன்னையின் கண்கள் குழமாகியது அதைக்கூட புரிந்துக் கொள்ள முடியா வண்ணம் கல்லூரிக் கனவுகள் என் கண்னை மறைத்துவிட்டது.

கல்லூரியில் படிக்கும் நாட்களில் என் அம்மா தினந்தோறும் போன் போட்டு பேசுவாள்… ” தங்கம், ராஜா, என் கண்மனி எப்படிப்பா இருக்கே…. சாப்டியா..? உடம்பு நல்லா இருக்காமா…? ரோட்ல நறையா வண்டிகள் வரும் பாத்துப் போடி ராஜா…. சிலவுக்கு பணம் இருக்கா…??? ” இப்படி கணிவின் முகவரியாய் என் தாய்.. நானோ.. ” இருக்கேம்மா….. எரிச்சல் பட்டுக் கொண்டு….. சரி.. சரி.. பணம் மட்டும் பேங்க்ல போட்டு விடுங்க… அப்புறம் பேசுறேன்…” என்று வெடுகெண்டு போனை கட் செய்யும்போது, பணத்தின் வருகைக்காகத்தான் மனம் காத்திருந்ததே தவிர என் அன்னையின் உள்ளார்ந்த அன்பு தெரியவில்லை..

ஆண்டுகள் கடந்தது… கல்லூரியையும் முடித்தேன்… எல்லோருக்கும் இடமலித்த வளைகுடா.. என்னையும் ஆரத்தழுவி அனைத்தது…. அப்போதுதான் நான் மனிதனாக ஆனேன்.. இந்த பாலைவனப் பிரதேசம் என்னுள் தேங்கிக் கிடந்த பாச ஊற்றுகளை வெளிக்கொனர்ந்தது.. நல்ல சோற்றுக்கு அலைந்து திரியும் போது தான் என் அன்னை பாசத்துடன் ஊட்டிவிட்ட உணவின் சுவைத் தெரிந்தது..

கடும் குளிரில் இங்கு நடுநடுங்கி படுக்கும்போதுதான் என்னை போர்த்தி விட்டு என்னைத் தாலாட்டிய என் அன்னையின் ஸ்பரிசம் தெரிந்தது. நோய்வாய் பட்டு கவனிக்க நாதியில்லாமல் இங்கு கிடக்கும் போதுதான் என் அன்னையின் அரவனைப்பின் ஆழம் தெரிந்தது… இப்படி பல பல நிகழ்வுகளில் என் அன்னையின் அரவனைப்பை இந்த வெந்த மணலில் நினைத்து நினைத்து ஏங்கியிருக்கிறேன்…

என்னுள் பல மாற்றங்களை ஏற்படுத்திய என் இன்றும் கிஞ்சிற்றுக்கூட மாறாமல் அதே அன்போடு என்னை ஆரத் தழுவுகிறாள் தன்னுடைய பேச்சுக்களால். அதே விசாரிப்புகளோடு என் அன்னையின் தொலைப்பேசி அழைப்பு.. அதே நேசிப்பின் வார்த்தைகள் அவளிடத்தில்… நெஞ்சை அடைக்கும் அழுகையில் கண்கள் கண்ணீரைத் வெளிக்கொணற ” அம்மா உன்னை நேசிக்கிறேன் ” என்று சொல்ல வார்த்தை வராமல்… கண்ணீர் தோய்ந்த கண்களோடு இறுக்கி கட்டி அனைக்கிறேன் தொலைப்பேசியை…. – தமிழ்சாரல்

4 thoughts on “அம்மா உன்னை நேசிக்கிறேன்..

  1. […] அன்பு என்பது ஓர் அற்புதமான உணர்வு. இது பல விதங்களில் வெளிப் படுகின்றது. அன்பு மனிதனிடம் மட்டும் காணப் படுகின்ற உணர்வு  அல்ல. இந்த பிரபஞ்சத்தில் படைக்கப் பட்டுள்ள எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. அதாவது எல்லா உயிர்களிடத்திலும் அன்பு காணப் படுகின்றது. என்னதான் அன்பு மனிதகுலத்தில்  நிரம்பி காணப் பட்டாலும் பெரும்பாலும் அவை எல்லாம் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகவே காணப் படுகின்றது. […]

தங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்..