மறுமலர்ச்சி தரும் ரமளான்

ரமதான் கரீம்

ரமதான் கரீம்

புண்ணியம் பூத்துக் குலுங்கும், நன்மையும் நற்செயலும் செழிக்கும், இறையச்சமும் தியாகமும் வளர்க்கும் புனித ரமளான் வந்துவிட்டது. ஈடு இணையற்ற நன்மைகளை வாரிச் சொரியும் ரமளான் கிடைத்து விட்டது. மனிதருள் ரமளான் தரும் வாழ்க்கை மாற்றங்கள் எண்ணிலடங்காதவை. அல்லாஹ் தந்த அருட்கொடைகளில் ரமளான் மாதம் மறக்க முடியாததாகும்.

ரமளானின் மேன்மையையும், சிறப்பையும் அறிந்தவர்களெல்லாம் காலம் முழுதும் ரமளானாக இருக்கக் கூடாதா? என ஏங்கித் தவித்தார்கள். ஸஹாபாக்களும், இறை நேசர்களும், ஞானிகளும் ரமளானில் நோன்பு வைப்பத்திலும் திருக்குர்ஆன் ஓதுவதிலும் இரவெல்லாம் நின்று வணங்குவதிலும் அவர்களுக்கிருந்த பேரானந்தமும், பேராசையும் சொல்லில் வடிக்க முடியாதவையாக இருந்தன.

ரமளான் மனிதனுடைய செயல்பாடுகளையும், அவனுடைய நித்திய வழக்க முறைகளையும் அல்லாஹ்வின் அன்பிற்காக மாற்றி அமைக்கிறது. தினமும் நேரம் தவறாமல் மிகச்சரியாக உண்டு பருகியவன், சாப்பிட்டு மகிழ்ந்தவன்; மற்ற காலங்களில் மறந்தும் சாப்பிடாத, பருகாத ஒரு நேரத்தில் உண்ணுகிறான் பருகுகிறான் என்றால் யாருக்காக – அல்லாஹ்வின் கட்டளைக்காகத் தானே …!

ஸஹர் நேரம் என்ற அந்த அதிகாலை வைகறைப் பொழுது என்பது மனிதரெல்லாம் ஆழ்ந்து உறங்குகின்ற அதி அற்புத நேரம். இரவெல்லாம் உறங்காதவர் கூட தன்னை மறந்து மறந்தே உறங்கிப் போகின்ற நேரம். உலகின் எந்த மூலையில் வாழுகின்ற மனிதனும் சாப்பிடாத – சாப்பிடப் பிடிக்காத – மனம் ஒப்பாத ஒரு நேரத்தில் அல்லாஹுவுக்காக – அல்லாஹ்வின் ரஸுலுக்காக – அவர்களின் கட்டளைக்காக தங்களை முழுமையாக அர்பணித்தவனாக சாப்பிடுகிறான்.

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
“அல்லாஹுதஆலாவும், அவன் மலக்குகளும், ஸஹர் சாப்பிடுவோரின் மீது அருள் புரிகின்றனர்”.
அறிவிப்பாளர் ஹள்ரத் இப்னு உமர் (ரளி) அவர்கள்
நூல் : அத்தர்ஙீப்

Read the rest of this entry »

%d bloggers like this: