“இதுவரை சூரியனை 83 முறை சுற்றி வந்துவிட்டேன்” – டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.

15-apj-abdul-kalam-600நமது இளைஞர்கள் சக்தி வாய்ந்தவர்கள், பொறாமைக் குணம் இல்லாதவர்கள், வளர்ந்த இந்தியாவில் வாழ வேண்டும் என்ற கனவுடன் இருப்பவர்கள் என்று இந்திய இளைஞர் சமுதாயம் குறித்து பெருமையுடன் பேசுகிறார் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.

மக்களின் ஜனாதிபதி என்ற பெருமை கொண்டவரும், இந்திய இளைஞர்கள், மாணவர் சமுதாயத்தின் ஊக்க சக்தியாக திகழ்பவருமான அப்துல் கலாம், இன்று தனது 83வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதை அவர் தனது பாணியில் எப்படிச் சொல்கிறார் தெரியுமா… “சூரியனை 83 முறை சுற்றி வந்துவிட்டு இன்று 84வது சுற்றுக்குள் நான் நுழைகிறேன்”. அதாவது தான் பிறந்து 83 வருடத்தில் சூரியனை பூமி 83 சுற்றி வந்துவிட்டதை சொல்கிறார் நமது கலாம்.

அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கையில் எதுவுமே மாறவில்லை. எல்லாமே அப்படியேதான் இருக்கிறது. நள்ளிரவைத் தாண்டி 1 மணி வரை விழித்திருக்கிறார். படிக்கிறார், தனக்கு வரும் மெயில்களுக்குப் பதில் அனுப்புகிறார்.

டெல்லியின் ராஜாஜி மார்க்கில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் தன்னைப் பார்த்து பிறந்த நாள் வாழ்த்துக் கூற வந்த விசிட்டர்களுடன் பிசியாக இருந்த சமயத்திலும், “ஒன்இந்தியா” வாசகர்களுக்காக பிரத்யேகமான பேட்டி அளித்தார் கலாம்.

” ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தருணமும் எனக்கு முக்கியமானது. ஒவ்வொரு ஜனவரி 1ம் தேதியும், அந்த ஆண்டில் எனது பணி என்ன, எனது இலக்கு என்ன என்பதை நான் நிர்ணயிக்கிறேன். அதை நோக்கி நான் செயல்படத் தொடங்குகிறேன். எனது அனுபவத்தின் அடிப்படையில், நான் திட்டமிடுவதில், 60 முதல் 70 சதவீதம் வரை நான் நினைத்ததை செய்து விடுகிறேன். எனது இலக்கு என்றுமே நிற்பதில்லை என்று புன்னகையுடன் கூறுகிறார் கலாம்.

வாழ்க்கையின் வருத்தங்கள் இந்திய விமானப்படையில் சேராமல் போனது வருத்தமானது என்று கூறியுள்ள (தனது My Journey: Transforming Dreams in Actions என்ற நூலில் இதைக் குறிப்பிட்டுள்ளார் கலாம்) அப்துல் கலாமிடம், அதைத் தாண்டி

உங்களை வருத்தப்பட வைத்த வேறு ஏதாவது இருக்கிறதா என்று கேட்டபோது, “குடியரசுத் தலைவர் மாளிகையில் நான் சூரிய சக்தி கட்டமைப்பை நிறுவ நினைத்திருந்தேன். அதை என்னால் முழுமை செய்ய முடியவில்லை. இது வருத்தமானது என்றார்.

மேலும் அவர் கூறுகையில், எனது பதவிக்காலத்தின் முடிவின்போதுதான், ராஷ்டிரபதி பவனில் 5000 மெகாவாட் மின் திறன் கொண்ட சூரிய சக்தித் திட்டத்தை தீட்டினோம். எல்லாமே நன்றாகப் போனது. நிதிப் பிரச்சினை கூட சரி செய்யப்பட்டு விட்டது. ஆனால் திட்டம் சுற்றுச்சூழல் அதிகாரிகளிடம் போனபோது, இந்தத் திட்டத்தால் பாரம்பரியமான, வரலாற்றுச் சிறப்புவாய்ந்த மொகல் கார்டன் பாதிக்கப்படும் என்று கவலை தெரிவித்தனர்.

மொகல் கார்டனின் ஒரு பகுதி இந்தத் திட்டத்தால் பாதிக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். அவர்களுக்கு விளக்கம் தெரிவித்து கடிதம் எழுத வேண்டிய தருணத்தில் எனது பதவிக்காலம் முடிவுக்கு வந்து விட்டது. எனவே என்னால் அந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் போனது. இன்று வரை அது எனக்கு வருத்தம்தான்” என்றார் கலாம்.

ஏன் திருமணம் செய்யவில்லை?

ஏன் திருமணமே செய்யவில்லை. இது 2006ம் ஆண்டு சிங்கப்பூருக்கு கலாம் போயிருந்தபோது ஒரு மாணவன் கேட்ட கேள்வி. அதே கேள்வியை நானும் அவரிடம் இப்போது கேட்டேன். என்ன காரணம் என்று கூடுதலாக கேட்டேன். அதற்கு இந்தியாவின் ஏவுகணை விஞ்ஞானியான கலாம் அவர்கள், எனக்குத் துணை வேண்டும் என்று ஒருபோதும் தோன்றியதே இல்லை என்று கூறிச் சிரிக்கிறார்.

“இந்தக் கேள்வி 50 வருட பழமையானது! இந்தியாவிலும் சரி, வெளிநாடுகளிலும் சரி பலரும் என்னைக் கேட்ட கேள்வி இது. ஆனால் இந்தக் கேள்விக்கு நான் எப்போதுமே சவுகரியமான முறையில் பதிலளித்துள்ளேன். நான் கூட்டுக் குடும்பத்தில் பிறந்தவன். எனது அண்ணனுக்கு எள்ளுப் பேத்தியே உள்ளார். இப்படிப்பட்ட மாபெரும் குடும்பத்தில் ஒரே ஒருவருக்குத் திருமணமாகாமல் போனது பெரிய பிரச்சினை இல்லை” என்றார் கலாம்.

இளைஞர் சக்தி கடந்த 20 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 10.6 கோடி இளைஞர்களை இந்தியாவில் சந்தித்துள்ளார் கலாம். இந்தியாவின் எதிர்காலத்தை வளமாக்கப் போவது இந்த இளைஞர்கள்தான் என்று திடமாக நம்புகிறார் கலாம். ” இந்திய இளைஞர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள். பொறாமை குணம் இல்லாதவர்கள், பாரபட்சம் பார்க்காதவர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, வளர்ந்த, செழுமையான, பாதுகாப்பான, அமைதியான இந்தியாவில் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள்.

இந்தியாவை வளர்ந்த நாடாக்க நான் என்ன செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு இளைஞரும் கேட்கிறார். இது மாபெரும் மாற்றத்திற்கான அறிகுறி என்று எனக்குத் தெரிகிறது என்றார் கலாம்

வளர்ந்த இந்தியா 2020க்குள் இந்தியாவை வளர்ந்த சக்தி வாய்ந்த நாடாக்க அனைவரும் சேர்ந்து செயல்படுவது அவசியம். அப்போது இது சாத்தியமாகும் என்று நம்புகிறார் கலாம். “விஷன் 2020 என்ற திட்டத்தை நாம் நமது நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினோம். அமைச்சரவையும் அதை திட்டமிட்டுள்ளது. இந்தியாவை வளர்ந்த, பொருளாதார ரீதியில் சுய சார்பு உடைய நாடாக மாற்ற நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தி, அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.

2020க்குள் நாம் இதைச் சாதிக்க, நாம் எப்படி ஒருங்கிணைந்து செயல்படுகிறோம் என்பதையும் பொறுத்து உள்ளது. முதலில் நாம் ‘புரா’ (PURA – Providing Urban amenities in Rural Areas) எனப்படும் ஊரகப் பகுதிகளுக்கு நகர்ப்புற வசதிகளை அளிப்பதை உறுதி செய்ய வேண்டும். 2வது, நமது விவசாயிகள் 250 மில்லியன் டன் உணவு தானியங்களை உற்பத்தி செய்கிறார்கள். ஆனால் அதன் மதிப்புக் கூட்டலை (value addition) நாம் சரியாக செய்வதில்லை. மதிப்பு கூடும்போது, அது நாட்டின் பொருளாதாரத்திற்குப் பேருதவியாக இருக்கும். ஏற்றுமதியும் பெருகும். பழங்கள், காய்கறிகள் போன்றவற்றில் நாம்தான் முன்னணி உற்பத்தியாளர்கள். ஆனால் ஜூஸ் அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுத்துறையில் நாம் பின் தங்கியுள்ளோம். அதை நாம் சரி செய்ய வேண்டும்.

3வது, சிறு தொழில்துறையின் பங்கு நமது பொருளாதார வளர்ச்சியில் 40 சதவீதமாக உள்ளது. கிராமங்களிலும், நகரங்களிலும் லட்சக்கணக்கான சிறு தொழில் நிறுவனங்கள் விரவிக் கிடக்கின்றன. இவர்களுக்குத் தேவையான, இவர்களின் முன்னேற்றம், மேம்பாட்டுக்குத் தேவையான தொழில்நுட்பத்தை நாம் அளிக்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான கடன் உதவியை குறைந்த வட்டியில் அளிக்க வேண்டும். விதிமுறைகளில் சற்று விலக்கு அளிக்க வேண்டும். அவர்களுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த வளர்ச்சியுடன் கூடிய முதலீடுகளுக்கு வகை செய்ய வேண்டும். இதனால் உற்பத்தியும் பெருகும், ஏற்றுமதியும் அதிகரிக்கும் என்றார் கலாம்.

இளைஞர்களுக்காக ஒரு கவிதை தனது பேட்டியின் முடிவில், டாக்டர் அப்துல் கலாம் தனது விருப்பத்திற்குரிய கவிதை ஒன்றை நம்முடன் பகிர்ந்து கொண்டார். “ஒவ்வொரு நாளும் செயல்கள் மிகுந்த தினமாகவே உள்ளது. இன்றைய இளைஞர்களுக்காக என்னிடம் ஒரு கவிதை உள்ளது. Indomitable Spirit என்பது அதன் தலைப்பு.

இதை நான் 2010ம் ஆண்டு, ஆகஸ்ட் 28ம் தேதி டெல்லியிலிருந்து பெங்களூருக்கு விமானத்தில் போய்க் கொண்டிருந்தபோது எழுதினேன். என்னை நோக்கி ஏராளமான கேள்விக் கணைகளை வீசும் இளைஞர்களுக்கான பதில் இதில் உள்ளது. பல பிரச்சினைகளுக்கு இந்த கவிதை பதில் சொல்லும்.

இளைஞர்கள் மனதை வாட்டி வரும் வறுமை, குடும்பத்தில் சிக்கல், இந்திய கலாச்சாரத்தின் மீதான ஊடுறுவல், அவ நம்பிக்கை, ஊழல், வன்முறை, தீவிரவாதம், நம்பிக்கையின்மை, பயம் போன்ற பல பிரச்சினைகளுக்கு இது பதில் சொல்லும். இந்தக் கவிதை இந்திய இளைஞர்களின் மனதில் உழலும் பல அச்சங்களைப் போக்கி நம்பிக்கையைப் பரிசாக அளிக்கும் என்று நான் திடமாக நம்புகிறேன் என்றார் கலாம்.

இதோ அந்தக் கவிதை…

Indomitable Spirit

“I was swimming in the sea, Waves came one after the other I was swimming and swimming to reach my destination. But one wave, a powerful wave, overpowered me; It took me along in its own direction, I was pulled long and along. When I was about to lose amidst the sea wave power, One thought flashed to me, yes, that is courage Courage to reach my goal, courage to defeat the powerful force and succeed; With courage in my mind, indomitable spirit engulfed me, With indomitable spirit in mind and action, I regained lost confidence I can win, win and win Strength came back to me, overpowered the sea wave I reached the destination, my mission. “

டாக்டர் அப்துல் கலாமுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

– டாக்டர் எம். அனந்தகிருஷ்ணன் – தட்ஸ்தமிழ்

Advertisements

தங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்..

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s