களை கட்டும் ‘கல்வி விளம்பரங்களும்’ , கண்ணீரோடு காத்திருக்கும் ‘கனவு விண்ணப்பங்களும்’ !

KK5‘அம்மா, ஆடு, இலை’ என்று துவங்கிய கல்வியின் ஆணி வேர்கள் 14 ஆண்டு கால வனவாசமாய், (LKG + UKG + முதலாம் வகுப்பு முதல் மேனிலை வகுப்புகள் வரை பன்னிரண்டு ஆண்டுகள்) புத்தகம் சுமக்கும் கூலிகளாய், நேரம் தவறாது பள்ளி சென்ற இயந்திரங்களாய், படித்து முடித்தும் ஆகி விட்டது. தேர்வெழுதி, தேர்வு முடிவுகளை எதிர் நோக்கி தூக்கம் தொலைத்த இராப் பொழுதுகளும் காணாமல் போய் விட்டது. அறிவிக்கப்பட்ட தேர்வு முடிவுகளால் பலருக்கு கை மேல் பலன் மதிப்பெண்கள் வாயிலாக கிடைத்தும் விட்டது. சிலருக்கோ தேர்ச்சி பெற மதிப்பெண்கள் மறுத்தும் விட்டது.

இப்பொழுது என்ன? கல்லூரி செல்ல வேண்டும். அது மருத்துவ கல்லூரியோ, பொறியியல் கல்லூரியோ, கலைக் கல்லூரியோ அல்லது டுடோரியல் கல்லூரியோ… ஆக இனி பள்ளி வாழ்க்கை முற்றுப் பெற்று கல்லூரி வாயில்கள் வரவேற்கத் தயாராகி விட்டது.

அதே வேலையில் தற்போதைய சூழலில் கல்வி வியாபரமாக்கப்பட்டு விட்டதா ? என்ற கேள்வியும்,

தங்கள் பிள்ளைகளின் வளமான எதிர் காலத்திற்காக, ஓடாய் உழைத்து சேமித்த பொருளாதாரத்தை தாரை வார்க்க துணியும் பெற்றோர்களின் ஆசைகள் நிறைவேறுமா ?

எதிர் காலத்தில் பணம் குவிப்பதை மட்டுமே இலட்சியமாய் கொண்டு இவர்கள் கற்கும் கனவுக் கல்விகள் கை கொடுக்குமா?

என்ற புதிர்களும், எங்கு நோக்கினும் இலாப நோக்கில் கல்விக்கான விளம்பரங்களும் விண்ணப்பங்களும் விண்ணில் பறந்து கொண்டு இருக்கும் இந்த தருணத்தில், இப்படி ஒரு பதிவு அவசியம் என்று எண்ணுகிறோம். இன்னும் நமது மனதில், எங்கோ ஒரு முலையில் ஓர் கேள்வி ஓயாது ஒலித்துக்கொண்டே இருக்கின்றது. அது என்னவென்றால், “எப்படி ஓர் குறிப்பிட்ட சமுதாயம் எப்பொழுதும் கல்வியில் மேலோங்கியே இருக்கின்றது, ஏன் எமது பிள்ளைகளால் சாதிக்க முடியவில்லை? என்பதையும் நாம் அலசி ஆராய்வோம்.

வெளுத்து வாங்கும் கல்வி வியாபார சீசன்

தமிழகத்தில் கல்வி வியாபாரமாகி விட்டது என்று உரத்த குரல்கள் தொடர்ந்து கேட்டவண்ணம் உள்ளன. இருந்தாலும் இதுகுறித்து யாரும் அலட்டிக் கொள்வதாகவே தெரியவில்லை. இந்தியாவில் 1600 பொறியியல் கல்லூரிகள் உள்ளது. அதில் தமிழ்நாட்டில் மட்டும் 503 பொறியியல் கல்லூரிகளும், ஆந்திராவில் 680ம், கர்நாடகாவில் 400ம், உத்திரபிரதேசத்தில் 70 பொறியியல் கல்லூரிகளும் மாணவர்களுக்கு கல்வியை வழங்கி வருகிறது. கொளுத்தும் கோடை வெயிலிலும் வீழ்ச்சியே இல்லாத பங்குச்சந்தையாக கல்வி வியாபாரம் தற்போது சூடு பிடித்திருக்கிறது. கல்வி வியாபாரப் போட்டியில் தினசரி நாளிதழ்களின் முதல் பக்க தலைப்பு செய்தியையே பின்னுக்குத் தள்ளி அதிரடி விளம்பரங்களாய் முன்னணியில் நிற்கிறது.

வெளுத்து வாங்கும் கல்வி வியாபார சீசன்
வெளுத்து வாங்கும் கல்வி வியாபார சீசன்

எங்கள் கல்வி நிறுவனத்தில் “நீச்சல் குளம் இருக்கிறது. குதிரை சவாரி இருக்கிறது. 25 ஆயிரம் சதுர அடியில் உள்விளையாட்டு அரங்கம் இருக்கிறது. நானூறு மீட்டர் ஓடு தளம் இருக்கிறது. தங்கும் விடுதியில் சுவையான சாப்பாடு கிடைக்கிறது”, என்றெல்லாம் விளம்பரம் வெளியாகிறது. இதுவெல்லாம் எந்த வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு என்று தெரியுமா? மழலையர் பள்ளியில் இருந்து 5ம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு… அவ்வாறென்றால் கல்லூரிகளின் விளம்பரங்கள் எப்படி இருக்கும் என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். இந்த வியாபாரப் போட்டியில் தனியார் கல்லூரிகளின் விளம்பரங்கள் பெரும்பாலும் சொல்வதெல்லாம் 5 நட்சத்திர சொகுசு விடுதிகளுக்கு இணையான வசதிகளை நாங்கள் செய்திருக்கிறோம். எங்கள் கல்லூரியில் பிள்ளைகளை அனுப்பி வையுங்கள் என அழைப்பு மேல் அழைப்பு வந்த வண்ணமிருக்கிறது. இவர்கள் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் எல்லாம் இந்நாளில் என்னவாக இருக்கிறார்கள் ? என்பது படைத்தவனுக்குத் தான் வெளிச்சம்.

கல்வி – ‘பணம் கொழிக்கும்’ தொழில் பார்முலா

கல்வி என்பது அறிவுநுட்பத்திற்கான, வாழ்க்கை தர மேம்பாட்டிற்கான அடித்தளமாக இருந்து, எதிர்காலத்தை வழி நடத்திட ஏதுவாக இருக்க வேண்டும் அதுதான் சிறந்த கல்வியாக இருக்கும் என்ற கோட்பாடு இன்று தலைகீழாக மாற்றப்பட்டிருக்கிறது. கல்வி என்பது பணம் சம்பாதிக்கும் தொழில் சூத்திரமாக மாற்றப்பட்டுள்ளது. எவ்வளவு பணம் சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணுகிறோமோ அந்த அளவிற்கு அந்த கல்விச் சூத்திரத்தின் விலையும் உயர்த்தி நிர்ணயிக்கப்படுகிறது. ஒட்டுமொத்தத்தில் கல்வி என்பது பொருளீட்டுகிற முதலீடாக முன் நிறுத்தப்படுகிறது. அதற்கேற்றவாறு ஆசிரியர்களும் கல்வியை காசுக்கு விற்பனை செய்யும் தொழிலாளிகளாக மாற்றப்பட்டு இருக்கின்றனர்.

கல்வி - 'பணம் கொழிக்கும்' தொழில் பார்முலா
கல்வி – ‘பணம் கொழிக்கும்’ தொழில் பார்முலா

மத்திய, மாநில அரசுகளும் இந்த அவலத்தை அரங்கேற்ற எல்லாவிதமான அடித்தளத்தையும் அமைத்து சீராட்டி பாராட்டி வருகின்றன. அதன் ஒரு பகுதியே புற்றீசல்களாய், கொடுங்கோலாட்சி புரியும் தனியார் கல்வி நிறுவனங்கள் புயலாய் புறப்பட்டுள்ளன. திரைகடல் ஓடி திரவியம் தேடியவர்களெல்லாம், தான் தேடிய பண மூட்டைகளை இன்று கல்வி தொழிலில் முதலீடு செய்து கடைவிரித்து உடாந்திருந்து கல்லாக் கட்டுகின்றனர். அரசு பதவிகளில் இருக்கும் புண்ணியவான்கள் முதல் சாராய வியாபாரிகள் வரை கூட்டுச் சேர்ந்து ‘லாபம்’ வற்றாத ஜீவநதிகளாக கல்வி வாணிபத்தை நிலைநிறுத்தியுள்ளனர்.

கல்வியை காசாக்கிய தனியார் மயம்

நமது அரசியலமைப்புச் சட்டம், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் 14 வயது வரை கல்வியை இலவசமாகவும் தரமாகவும் தரவேண்டும் என்று சொல்கிறது. ஆனால் அந்த அரசியலமைப்புச் சட்டத்திற்கும் கட்டுப்படாத உலகமயம் இந்தியாவிற்குள் புகுந்து கல்வியை கடைச்சரக்காக மாற்றியிருக்கிறது. கல்வியை விலைக்கு வாங்க ரூபாய் நோட்டுகள் வரிசையில் நிற்கின்றன. கந்தல் பையோடு வரும் காசில்லாதவனுக்கு ஏக்கப் பெருமூச்சே மிஞ்சுகிறது.

கல்வியை காசாக்கிய தனியார் மயம்
கல்வியை காசாக்கிய தனியார் மயம்

தனியார்மயம்தான் வளர்ச்சியின் தாரக மந்திரம் என பாடம் எடுக்கும் அமெரிக்காவில் கூட 15 சதவிகிதம் கல்வி மட்டுமே தனியார் கையில் உள்ளது. ஆனால் இந்தியாவிலோ 96 சதவிகிதம் தனியாருக்குத்தான் அனுமதி. இருக்கும் கதவை அகலத் திறந்து விட்டு, மத்திய அரசு அவர்களுக்கு கை கட்டி காவலுக்கு நிற்கிறது. அனைவருக்கும் பேதமின்றி சமமான கல்வி கிடைத்திட உலகமயக் கொள்கைகளை அடியோடு அகற்றிட வேண்டும். அப்போதுதான் எட்டா உயரத்தில் இருக்கும் கல்வி, சாதாரண மக்களின் கைகளுக்கு எட்டும் நிலை வரும்.

ஜூன் மாத ஜுரத்தில் சாமனியர்கள்

தமிழகத்தில் ஜூன் மாதம் துவங்கி விட்டாலே பெற்றோர்களின் கவலைக்குரிய மாதமாகவே உருவெடுக்கிறது.. கல்வி நிலையங்களில் தங்களது பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர்கள் பண மூட்டையுடன் அலையும் காட்சியை சர்வ சாதாரணமாய் காண முடியும். சர்வ சாதாரணமாய் எல்.கே.ஜி சேர்க்கக்கூட 30 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கும் பள்ளிகள் தமிழகத்தில் உள்ளது. கொடைக்கானல் போன்ற இடங்களில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளிகளில் ஒரு ஆண்டு கட்டணமாக இரண்டு லட்சம் ரூபாய் வரை வசூல் செய்யப்படுகிறது. அத்தகைய கல்வி நிறுவனங்களில் உயர் அதிகாரிகள் முதல் தொழிலதிபர்கள் வரை வரிசையில் நிற்பது பெருமையாக பேசப்படும் விஷயமாகிவிட்டது.

ஜூன் மாத ஜுரத்தில் சாமனியர்கள்
ஜூன் மாத ஜுரத்தில் சாமனியர்கள்

 ஆனால், பணம் கொடுத்தால்தான் தரமானக் கல்வி கிடைக்கும் என்பது நாம் பிறந்த இந்த புண்ணிய பூமியில் விதைக்கப்பட்ட, வெட்ட வெட்ட வளரும் தீவினை கருவேலம் மரம். தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு சமச்சீரான கல்வி என்பது கானல் நீராகவே இன்றும் தொடர்கிறது. தமிழக அரசிடம் சமச்சீர் கல்வி கேட்டால் பாடத்திட்டங்களில் ஒன்று போல் மாற்றுவதே சமச்சீர் கல்வி என்று ஆளும் கட்சியினர் மந்திர தந்திர வேலைகளில் ஈடுபடுகின்றனர். இது ஒருபக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் கல்வியை விலைபேசும் பழக்கம் நமது தமிழ்நாட்டில் துவங்கி பல வருடங்களாகிறது. நர்சரிபள்ளி, மெட்ரிகுலேசன் பள்ளி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி என பேதம் இல்லாமல் தனியார்கள் நடத்தும் கல்வி நிலையங்களில் பணம் அநியாயமாய் கொள்ளையடிக்கப்படுகிறது. இது அரசாங்கத்தின் ஆசியுடன் தான் தொடர்கிறது என்பது வேதனையான ஒன்று.

தனியார் கல்வி நிறுவனங்களின் பகல் கொள்ளை

தமிழகத்தின் தனியார் கல்வி நிறுவனங்கள் பல, கல்வி கட்டணங்களை தாறு மாறாக உயர்த்தி, யார் யாருக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு கறக்கின்றனர். ஒரு மாட்டுக்கொட்டகையில் துவக்கப்படும் நர்சரி பள்ளி கூட சில ஆண்டுகளில் விண்ணைத் தொடும் பிரமாண்டமான கட்டடமாய் எழுந்து நிற்கிறது. அந்த கட்டடத்தினுள் உழைப்பாளி மக்களின் உதிரம் அடி உரமாய் கிடக்கிறது என்பது மட்டும் யாருக்கும் தெரிவதில்லை. இந்த கொடூரத்தை தடுக்க வேண்டிய கட்டாயம் அரசு எந்திரங்களுக்கு இருப்பதை உணர்ந்து, ஆட்சியாளர்கள் செயல்பட வேண்டும்.

தனியார் கல்வி நிறுவனங்களின் பகல் கொள்ளை
தனியார் கல்வி நிறுவனங்களின் பகல் கொள்ளை

தமிழகத்தில் கல்வி கட்டணத்தை அரசே தீர்மானிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்ததும், தமிழக அரசு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் ஒரு குழு அமைத்தது. இதுநாள் வரை கல்வி கட்டண நிர்ணயத்தில் நிரந்தர முடிவு எட்டப்படாமல், கமிஷன் வழங்கிய தீர்மானங்கள் நினைவிழந்து, அரை மயக்கத்தில் கோமாவிலேயே கிடக்கிறது.

அந்த குழு விரிவான ஆய்வு நடத்தி துவக்கக் கல்விக்கு 3500 முதல் 5000 ரூபாயும், நடுநிலை கல்விக்கு 6000 முதல் 8000 ரூபாயும், உயர்நிலை கல்விக்கு 9000 ரூபாயும், மேல்நிலை கல்விக்கு 11000 ரூபாயும் என தீர்மானித்து. இந்தக் குழு தீர்மானம் செய்த தொகை அடிப்படையில் அதிகம்தான். இருப்பினும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் கொதித்தெழுந்தன. இத்தனை நாள் தங்கள் இஷ்டம் போல கொள்ளையடித்தவர்கள் இந்த கட்டண அறிவிப்பால் கோபம் அடைந்து நீதிமன்றக் கதவுகளை தட்டினர்.

கல்வி வழிகாட்டுதல்களில் பெற்றோர்களின் பங்கு

சாதனை என்பது ஓர் குறிப்பிட்ட துறையில் அடையும் வெற்றியே தவிர, பாட புத்தகத்தில் உள்ளதை மூளையில் ஏற்றிக்கொண்டு, எழுது மையால் புறம தள்ளுவது இல்லை. உங்கள் பிள்ளைகள் எந்த துறையில் சிறந்தவர்களாக விளங்க விருக்கிறார்கள் என்பதை, அவர்களுடன் அமர்ந்து அறிந்து கொள்ளுங்கள். பின்னர் அந்த துறையில் அவர்கள் வெற்றி பெறுவதற்கு ஊன்றுகோலாய் இருந்தால். அவர்களது வெற்றி நிச்சயம். சர்வதிகாரி ஹிட்லர் போல் இல்லாமல், ஜனநாயக நாட்டின் பிரதமராய் செயல்படுங்கள்.

கல்வி வழிகாட்டுதல்களில் பெற்றோர்களின் பங்கு
கல்வி வழிகாட்டுதல்களில் பெற்றோர்களின் பங்கு

நம்மில் சிலரது வீட்டு குழந்தைகள் மருத்துவம், பொறியியல் துறையில் தான் படிக்க வேண்டும் என்று விரும்புவது தவறில்லை. ஆனால் கட்டாயப் படுத்துவது முற்றிலும் தவறு. மனித மூளை மாற்று சிந்தனை கொண்டது என்பது நிறைய பேருக்கு தெரியும். நாம் ‘செய்யாதே’ என்று சொல்வதை ‘செய்து பார்’ என்று சொல்வது தான் மனித மூளை. அதன் அடிப்படையில், நீ இதனை ‘செய்’ என்று கூறும் பொழுது, அதனை ‘செய்யாதே’ என்று மூளை விளங்கிக் கொள்கின்றது. அதனால் நாம் நம் குழந்தைகளிடம் எதிர்பார்ப்பது கிடைக்காமல் போய் விடுகின்றது. இந்த கருத்தை கூறியவுடன் ஒருவர் என்னிடம் கேட்டார் “ அப்போ குழந்தைகளிடம் நாம் எதிர்மறையாக சொன்னால் அவர்கள், சரியானதை செய்வார்களா? அப்படி அல்ல.. மூடப்பட்டு இருக்கும் பொருட்களுக்கு மதிப்பு அதிகம், எவை மறைவாக இருக்கின்றதோ அதை தான் மனம் நாடுகின்றது. அப்படிதான் இறைவன் மனிதனை வடிவமைத்திருக்கின்றான்.

தேர்வில் தோற்றவர்களை தேற்றுங்கள்

உங்கள் குழந்தை இந்த தேர்வில் தோற்று இருக்கலாம், ஆனால் அவன் தோல்வியை எதிர்பார்த்து தேர்வு எழுதி இருக்கமாட்டார். உங்கள் குழந்தையை அடித்து அடக்கிவிடலாம் என்று நினைத்தால் அது தவறாகவே முடியும். அன்புக்கு இணை அன்பு மட்டுமே. ஒருவன் ஒரு முறை ஏமாற்றப்பட்டால், அவன் ஓர் முட்டாள் என்று எடுத்துக்கொள்வது தவறு. அதே போல் ஓர் மாணவனின் தேர்வு முடிவு சரியாக வரவில்லை என்றால், அதற்காக அவன் எதற்கும் தகுதி அற்றவன் என்று கரித்துக் கொட்டக் கூடாது. உங்கள் ஆதரவு உங்கள் குழந்தைகளுக்கு குருதி போன்றது. சிறிது துணை செய்யுங்கள், அவர்கள் சிகரத்தை அடைவது நிச்சயம். இன்ஷால்லாஹ் !

தேர்வில் தோற்றவர்களை தேற்றுங்கள்
தேர்வில் தோற்றவர்களை தேற்றுங்கள்

போட்டிகள், சவால்கள் நிறைந்த இந்த உலகில் கல்வி என்பது அத்தியாவசிய தேவையான ஒன்று. கற்ற கல்வியைக் கொண்டு அனுபவ அறிவும், பொது அறிவுடன் கூடிய கல்வி அறிவும் என ஒருங்கே இணைந்து எத்தனையோ பேர்கள் ஜாம்பவான்களாக சாதனை புரிந்துள்ளனர். இந்த ஜாம்பவான்களை உருவாக்குவது கல்விக் கூடங்கள் தான். அந்த கல்விக் கூடங்கள் இந்திய அளவில் எப்படி செயல்படுகிறது. மாணவர்களை உருவாக்கி வேலை வாய்ப்பை எப்படி ஏற்படுத்தி கொடுக்கிறது என்று அலசி ஆராயத் தலைப்படும் போது சற்று தலை கிறுகிறுக்கிறது.

இன்றும் ஏழைகளுக்கு கல்வி என்பது எட்டாக் கனியாகவே இருக்கிறது. கல்விக் கட்டணம் நிர்ணயம் தொடர்பாக கமிஷன் அமைக்கப்பட்டது கூட எத்துனை மக்களுக்கு தெரியும் என்பது முக்கியமான கேள்வி. இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் 6 முதல் 14 வரை இலவசக் கல்வி என்று பறைசாற்றும் கல்வி உரிமை சட்டம் அமலாகும் நேரத்தில், கல்வி எங்கள் பிறப்புரிமை அதை அடைந்தே தீருவோம் என்ற ஜனநாயக இயக்கங்களின் போர் குரல் வெல்லும் போது தான் நிரந்தரத் தீர்வு கிடைக்கும். கொள்ளை இலாபம் சம்பாதிக்க துடிக்கும் தனியார் கல்வி நிறுவனங்களை நடத்தும் ‘கல்வி வியாபாரிகள்’, கொஞ்சமாவது சமுதாய அக்கறை கொண்டு, மனிதாபிமான முறையில் கல்வி வழங்க முன் வர வேண்டும் என்பது தான் சாமானியர்களின் எண்ண ஓட்டங்கள்…

(கட்டுரையாளர்கள் அஹமது அஸ்பாக் மற்றும் முஹம்மது அபு பைசல் ஆகியோருடன் கீழை இளையவன் )

File Source : http://keelaiilayavan-keelaiilayavan.blogspot.in

Advertisements

தங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்..

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s