கற்பனை படுத்தும் பாடு

கற்பனைக் குதிரையைத் தட்டி விடும் முன் சற்று சிந்திப்போமா?

கற்பனை போல் ஒரு வரப்பிரசாதம் இல்லை. அதைப் போல் ஒரு சாபக்கேடும் இல்லை. அது கதையாய், கவிதையாய், காவியமாய் வடிவுகள் எடுத்து நம்மை சந்தோஷப்படுத்தவும் முடியும். இல்லாததை எல்லாம் எண்ண வைத்து, சந்தேகப்பட வைத்து நம்மை அது பாடாய் படுத்தவும் முடியும்.

இதோ ஒரு நிகழ்வு.

ப்ளாட் ஒன்றில் குடி இருக்கும் ராமசாமி ஆபிஸ் வேலை முடிந்து களைத்துப் போய் இரவில் வீடு திரும்புகிறார். அவர் குடும்பத்தினர் எல்லாம் வெளியூர் சென்றிருக்கிறார்கள்.

பக்கத்து ப்ளாட் ஒன்றில் இருந்து சத்தமாக FM ரேடியோ பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறது. முன்பு அங்கு குடியிருந்தவர்கள் காலி செய்து போய் விட்டிருந்தார்கள்.

இப்போது புதிதாக யாரோ வந்திருக்கிறார்கள் என்பதை இந்த பாட்டு சத்தம் அறிவித்தது. தங்களுக்கு மட்டும் கேட்கும் படியாக வைத்துக் கொள்ள மாட்டார்களோ என்று முணுமுணுத்துக் கொண்டே ராமசாமி தன் பளாட்டினுள் நுழைந்தார்.

கதவை சாத்தினாலும் பாட்டின் ஓசை பெரிதாகக் குறைந்து விடவில்லை. அவருக்கு லேசாக தலை வலித்தது. ஒரு வேளை இளைஞர்கள் குடி வந்து இருக்கிறார்களோ என்று அவருக்கு சந்தேகம் வந்தது. ஊருக்கே கேட்பது போல் ஒலியை அதிகப்படுத்தி பாட்டைக் கேட்டு ரசிப்பது இளைஞர்கள் தான். மற்றவர்களுக்குத் தொந்திரவு ஆகும் என்று நினைத்துப் பார்க்க மாட்டார்களோ?

நேரம் சென்று கொண்டே இருந்தது பாட்டு நிற்பதாகக் காணோம். அதுவும் நேரமாக நேரமாக பாட்டின் ஒலியும் கூடி காதில் நாராசமாக ஒலித்தது. மணி பார்த்தார் பத்து. தூங்கவும் மாட்டார்களா இந்த சனியன்கள். முன்பு குடியிருந்தவர்களால் இந்த மாதிரி தொந்திரவுகள் ஒரு நாளும் வந்ததில்லை. இந்த சனியன்கள் தூங்கும் நேரம் பத்தரையோ என்னவோ?

ராமசாமி பத்தரை வரை பொறுத்தார். பாட்டு நிற்கவில்லை. இந்த சைத்தான்கள் பதினோரு மணிக்குத் தான் தூங்குவார்களோ. 24 நேரமும் தொடர்ந்து இசையருவியை கொட்டுவதாக FM பெருமை அடித்துக் கொண்டு விளம்பரம் செய்தது.

தூங்க முடியாமல் தவித்த ராமசாமி பதினோரு மணி எப்போது ஆகும் அன்று கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். அதுவரை இந்த பொறுப்பில்லாத இளைஞர் சமுதாயத்தை மனமார வசை பாடினார். இந்த மாதிரி இளைஞர்களுக்கு ·ப்ளாட்டை வாடகைக்குக் கொடுத்து விட்டு தூரத்தில் ஹாயென்று இருக்கும் ·ப்ளாட் உரிமையாளரை மனதாரத் திட்டித் தீர்த்தார். நாளைக்கு முதல் வேலையாக புகார் கொடுக்க வேண்டும் என்று எண்ணினார்.

11 மணிக்கும் பாட்டு நிற்கவில்லை. இரவின் நிசப்தத்தில் பாட்டு சம்மட்டியாக அடித்தது. கொஞ்சம் பஞ்சை எடுத்து இரண்டு காதுகளிலும் வைத்துப் பார்த்தார். பதினொன்றரை மணிக்கு ராமசாமியால் தாங்க முடியவில்லை. கொதித்துப் போய் எழுந்தார். இன்று அந்தப் பையன்களை உண்டு இல்லை என்று செய்து விட வேண்டும் என்று ஆவேசமாக பக்கத்து ·ப்ளாட்டிற்குப் போனார்.

கதவைத் தட்டினார். கதவு திறக்கப்படவில்லை. ‘இப்படி சத்தமாய் பாட்டு வச்சா தட்டறது கேட்குமா செவிட்டு முண்டங்களா?’ என்று மனதில் அவர்களிடம் கேட்டுக் கொண்டார். கதவின் கைப்பிடியைத் திருப்ப கதவு திறந்து கொண்டது. உள்ளே ஓரிரு பெயிண்ட் டின்களைத் தவிர வேறு சாமான்கள் இல்லை. ஆள்களும் இல்லை. ஒரு செல்பில் இருந்த ரேடியோ மட்டும் மிக சத்தமாகப் பாடிக்கொண்டிருந்தது. மெள்ள ராமசாமிக்கு உண்மை விளங்கியது.

மீண்டும் வாடகைக்கு விடுவதற்கு முன் வீட்டை பெயிண்ட் அடித்து விட நினைத்த வீட்டுக்காரர் பெயிண்டர்களிடம் வேலையை விட்டிருக்கிறார். அவர்கள் தங்கள் ரேடியோவில் பாட்டு கேட்டுக் கொண்டு பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். இடையில் மின்வெட்டால் பாட்டு நின்றிருக்கிறது.

மாலையில் செல்லும் போது ரேடியோவை மறந்து விட்டு பெயிண்டர்கள் சென்றிருக்கிறார்கள். அவர்கள் போன பிறகு மின் இணைப்பு மீண்டும் வந்ததில் இருந்து பாட்டு தொடர்ந்திருக்கிறது. ஆவேசம் அடங்கிய ராமசாமி ஸ்விட்ச் ஆ·ப் செய்து விட்டு ஒரு அசட்டுச் சிரிப்புடன் தன் ·ப்ளாட்டுக்குத் திரும்பினார்.

இரவு எட்டு மணியில் இருந்து உண்மை அறிந்த கணம் வரை ராமசாமியின் எண்ண ஓட்டங்களை எண்ணிப் பாருங்கள். கற்பனையில் சில இளைஞர்களை சிருஷ்டித்து, அவர்களை அடுத்தவர்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாத சைத்தான்களாக எண்ணி, மனம் வெந்து, நொந்து, திட்டி, சபித்து பட்ட பாட்டைப் பாருங்கள்.

பல நேரங்களில் உண்மை என்ன என்று எளிதாக சம்பந்தப்பட்டவர்களைக் கேட்டு அறிந்து கொள்வதற்கு பதிலாக நாம் நம் கற்பனைக் குதிரையைத் தட்டிப் பறக்க விடுகிறோம். இந்த நிகழ்வில் ராமசாமி ஆரம்பத்திலேயே பக்கத்து ப்ளாட்டில் ஆளில்லை என்று அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பது உண்மையே.

ஆனால் ஆளிருப்பதாக எண்ணியிருந்தால் கூட ஆரம்பத்திலேயே சென்று அவர்களை அறிமுகப்படுத்திக் கொண்டு ‘ரேடியோ வால்யூமை மட்டும் குறைத்துக் கொள்ளுங்களேன்’ என்று இயல்பாகச் சொல்லி சுமுகமாக விஷயத்தை முடிக்க முனைந்திருக்கலாம். இந்த எளிய வழிக்குப் பதிலாக அந்த இரைச்சல் தொந்தரவை அனுபவித்து இல்லாத நபர்கள் மீது கோபத்தைக் குவித்துக் கொண்டு தன் தூக்கத்தையும் நிம்மதியையும் கெடுத்துக் கொண்டிருக்கத் தேவையில்லை.

இது போல நம் தினசரி வாழ்வில் எத்தனையோ நிகழ்வுகள் நடக்கின்றன. வீட்டிலும் சரி வெளியிலும் சரி நேரடியாக கேட்டு சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்வதற்குப் பதிலாக ‘அவர்கள் இப்படி நினைத்துத் தான் அப்படி நடந்து கொண்டிருப்பார்கள்’, ‘இவர்கள் நம்மை முட்டாள் என்று நினைத்திருப்பார்கள்’, ‘அவர்கள் வேண்டும் என்றே தான் அப்படி நடந்து கொள்கிறார்கள்’ என்று எண்ண ஆரம்பித்து நம் கற்பனையால் ஏதேதோ எண்ணி, மற்றவர் சொல், செயல்களுக்கெல்லாம் எப்படி எப்படியோ அர்த்தம் கண்டு நம் நிம்மதியையும், அடுத்தவர் நிம்மதியையும் கெடுத்து விடுகிறோம்.

இனி கற்பனைக் குதிரையைத் தட்டி விடும் முன் சற்று சிந்திப்போமா?

நன்றி : நண்பர் என்.கணேசன் வலைத்தளம்.

 

 

 

Advertisements

தங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்..

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s