வாருங்கள் உலகை வெல்லலாம்..

Set Your Target
  • இலக்கை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்

மாணவச் செல்வங்களே உங்களின் வாழ்க்கை லட்சியம் தான் என்ன?

  • சாக்ரடீஸ், கன்பூசியஸ், புத்தர், மகாத்மா, போன்ற மகான்களாக விரும்புகின்றீர்களா, இல்லை பிஸ்மார்க், வின்ஸ்டன் சர்ச்சில், கோகலே, ராஜாஜி, அறிஞர் அண்ணா போன்ற அரசியல் மேதையாக விரும்புகின்றீர்களா?
  • பெர்னாட்ஷா, எச்.ஜி,வெல்ஸ், டால்ஸ்டாய், லின்யுடாங், பேர்ல்பக், தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களான சுஜாதா ஜெயகாந்தன், அகிலன், கல்கி, ஜெகசிற்பியன், ராஜேஷ்குமார், போன்ற பெரிய எழுத்தாளர்களாக எண்ணமா?
  • அல்லது ஷேக்ஸ்பியர், மில்டன், பாரதி, இக்பால், தாந்தே, தாகூர், போன்ற கவிதாமணிகளாக ஆசைப்படுகின்றீர்களா?
  • அல்லது பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கண்ணதாசன், வாலி, வைரமுத்து, பழநிபாரதி, கபிலன், முத்துக்குமார், பா.விஜய் போன்ற திரைப்படப்பாடலாசியர் ஆக விருப்பமா?
  • ரூசோ, வால்டர், கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ் போன்ற புரட்சி நோக்கமுள்ள பேரறிஞர்களாகப் பிரியப்படுகின்றீர்களா?
  • அல்லது ஹென்றி போர்டு, லார்ட் நப்பீல்ட், டாட்டா , கார்னீஜ், லிப்டன், ராக்பெல்லர், ஜி.டிநாயுடு, டிவிஎஸ் போன்ற வணிக மன்னர்களாக விருப்பமா?
  • அல்லது டார்வின், நியூட்டன், போஸ், சி.வி, இராமன், நமது முன்னால் ஜனாதிபதி மாண்புமிகு அப்துல்கலாம் போன்ற அறிவியல் அறிஞர்களாக ஆசைப்படுகிறீர்களா?
  • அல்லது சங்கராச்சாரியார், விவேகானந்தர், மாரட்டின் லூதர் கிங், அப்துல் அலீம் சித்திகீ போன்ற மதப்பிரச்சாரகர்களாக விருப்பமா?

நீங்கள் யாராக விரும்புகிறீர்களோ? உங்கள் மனத்தை யார் கொள்ளை கொண்டர்களோ அவர்களையே உங்கள் முன் மாதிரியாக ஆக்கிக் கொள்ளுங்கள். அவர்களே உங்கள் மனத்தில் கொலு வீற்று ஆட்சி செலுத்தட்டும்.

வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலையை அடைய விரும்பும் அனைவருக்கும் தங்கள் இலக்கை அடையும் வரையிலும் குறிதவறாமல் இருப்பது மிகவும் அவசியம். குறிதவறாத பண்பு காலவிரயத்தை தடுக்கும், உழைப்பு வீணாகாமல் காப்பாற்றும். கொண்ட குறிக்கோளை அடிக்கடி மாற்றிக் கொள்ளாமல் நெடுங்காலம் உழைப்பவர்களே சாதனைச் செம்மல்களாக உயர்ந்திருப்பதை சரித்திரம் காட்டுகிறது.

ஸ்பெயின் நாட்டில் நீக்ரோ தந்தைக்கும், வெள்ளையின தாய்க்கும் பிறந்த கலப்பு இனத்தவன் ஒருவன் இருந்தான். அவன் பெயர், செபஸ்டியன் கோமஸ் என்பது. அவனுக்கு இளவயது முதலே ஓவியம் கற்க வேண்டும் என்பதில் தணியாத தாகம் இருந்தது. அதற்கு உண்டான பொருள்வசதி அவனிடம் இல்லை. அவனுடைய தாயும் தந்தையும் சுரங்க வேலையில் ஈடுபட்டு நாள்தோறும் மிகச் சொற்பமான பணத்தையே ஊதியமாகப் பெற்று குடும்பம் நடத்தி வந்தனர்.

கோமஸ் மிகுந்த இடைஞ்சல்களைத் தாண்டி அந்த ஊரில் இருந்த ஒரு பெரிய ஓவியரை அணுகி, அவரிடம் தனது விருப்பதைக் கூறினான். அவர் தன்னிடம் வேலை எதுவும் இல்லை என்று கூறிவிட்டார். ஆனாலும் அவருடைய பக்கத்தில் இருந்து அவர் எப்படி ஓவியம் வரைகிறார் என்பதையும், எப்படி வண்ணங்களை கலந்து பயன்படுத்துகிறார் என்று நுணுக்கத்தையும் கற்க வேண்டும் என்ற குறிக்கோளில் சிறிதும் நழுவாமல் இருந்தான் கோமஸ். எனவே அவன் தனது வறுமையைப் போக்க அவர் ஊதியம் எதுவும் தராத போதிலும் அவரது வீட்டில் எடுபிடி வேலைகளைச் செய்ய விரும்புவதாகத் தெரிவித்தான்.

கூலி இல்லாமலே தான் சொல்லும் வேலைகளை வீட்டோடு இருந்து செய்வதற்கு ஒரு ஆள் கிடைத்ததில் அந்த ஓவியர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். வீட்டு வேலைக்கு அவனை அமர்த்தி, நாள்முழுவதும் அடிமையைப் போல வேலை வாங்கினார்.

இதனால் எல்லாம் கோமஸ் மனம் தளரவில்லை. அவன் மிகுந்த ஈடுபாட்டோடு ஓவியரின் வீட்டு வேலைகளை மிக நேர்த்தியாகச் செய்தான். வேலைகளுக்கு நடுவே அவர் படம் வரைவதையும், அதற்கு பயன்படுத்தும் பென்சிலையும், தூரிகைகளையும், வண்ணங்களையும் நன்றாக கவனித்து மனதில் பதித்துக் கொண்டான். இரவு நேரத்தில் வேலையை முடித்துக் கொண்டு தன் வீட்டிற்கு வந்ததும், தான் காலையில் கற்ற ஓவியங்களை வரைந்து பயிற்சி செய்தான்.

ஓவியரிடம் பயிற்சி பெற வந்தவர்கள், கோமஸின் கரிய நிறத்தையும், உருவ அமைப்பையும் பார்த்து கேலி செய்து சிரித்தனர். அவர்கள் ஓவியப் பாடங்களை கற்பதை விட, கோமஸை கிண்டல் செய்வதிலேயே காலத்தை வீணாக்கி வந்தனர் என்பதே உண்மை.

பயிற்சி பெற வந்த மாணவர்கள் கற்ற ஓவியப் பாடங்களை கோமஸ் கற்கவில்லை. ஆனால் அவர்களது நடைவடிக்கைகளை, கவனித்து வந்தான். ஓவியர் பயிற்சியின் போது மாணவர்களுக்கு அளித்து வருகின்ற பயிற்சியை உற்று நோக்கி மனதில் இருத்திக் கொண்டான். பகலில் கவனித்து வருவதை இரவில் நீண்ட நேரம் தனியாக இருந்து பயிற்சி செய்தான்.

தொடர்ந்த உழைப்பு, தணியாத ஆர்வம், குறிக்கோளை அடையும் வெறி இவற்றின் காரணமாக கோமஸ் அந்த ஓவியரிடம் முறையாகப் பயிற்சி பெற்று வந்தவர்களை விட அதி விரைவில் ஓவியக்கலையைக் கற்றுக் கொண்டான்.

அதோடு மட்டும் அல்ல, பயிற்சி மாணவர்கள் வரையும் ஓவியங்களில் காணப்படும் குறைகளை திருத்துகின்ற அளவிற்கு திறமையும், தகுதியும் பெற்றான்.

ஓவியர் கோமசிடம் காணப்பட்ட ஆர்வத்தைப் புரிந்துகொண்டார், அவனையும் தன் மாணவர்களில் ஒருவனாக எண்ணி, ஓவியம் வரைவதில் உள்ள நுணுக்கங்களை சொல்லிக் கொடுத்தார்.

கோமஸ் வெகு விரைவில் அதி அற்புதமான வண்ண ஓவியங்களை வரைந்து மக்களின் பாராட்டுக்களைப் பெற்றான். மாத சம்பளம் கூட இல்லாத வீட்டு வேலைக்காரனாக இருந்த அவன் மக்கள் பாராட்டும் மிகச்சிறந்த ஓவியனாக மாற்றம் பெற்றது எப்படி? குறிக்கோளில் தீவிரம், மனஉறுதி, கடுமையான உழைப்பு ஆகியவற்றின் காரணமாகவே கோமஸ் அந்த உயர் நிலையை அடைந்தான்.

இந்த உலகத்தில் தோன்றியது அத்தனையும் மடிந்து போகும். ஆனால் இலட்சியம் மடியாது. ஒருவன் தனது இலட்சியத்திற்காக தன் உயிரைக்கூட இழந்து விடலாம். ஆனால் அந்த இலட்சியமோ பல ஆயிரக்கணக்கான மக்களின் மனங்களில் விதையாக விழுந்து, செடியாக முளைத்து, மிகப் பெரிய மரமாக நிலைத்து விடும். சோதனையும் தியாகமும் இல்லாமல் உலகில் எந்த இலட்சியமும் நிலைப்பதோ, அல்லது புகழ் அடைவதோ இல்லை என்பதை மனதில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

எனவே மாணவர்களே நீங்களும் உங்கள் குறிக்கோளில் உறுதியாக நில்லுங்கள். எத்தனை தடங்கல்கள் வந்தாலும் அஞ்சாமல் எதிர்த்து நின்று வெற்றி பெறுங்கள்.

நன்றி : திரு. வேணுசீனிவாசன் மற்றும் சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்.

Advertisements

தங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்..

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s