ஆன்மாவும் உண்ணா நோன்பும்

நூ. அப்துல் ஹாதி பாகவி

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உயிர்வாழும் ஆன்மா எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்கிறது. கடிகார முள்ளைப்போல் ஓய்வின்றி ஓடிக்கொண்டே இருக்கிறது. நாம் பணி செய்து கொண்டிருந்தாலும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாலும் நம் ஆன்மா உறங்குவதேயில்லை.

இதனால்தான் நாம் உறங்கினாலும் தொடர்ந்து மூச்சு விடுவதும், கனவுகள் காண்பதும் நடந்து கொண்டிருக்கின்றன.

பொதுவாக, ஆன்மா இறப்பதில்லை என்று அனைவரும் கூறுவர். இன்றைய விஞ்ஞானிகளும் அதைத்தான் சொல்கின்றனர். ஒரு மனிதன் நல்வினையையும் தீவினையையும் செய்யக் காரணமாக அமைவது இந்த ஆன்மாதான். அதை எப்படி நாம் பழக்குகின்றோமோ அப்படியே அது மாறிவிடுகின்றது.

நல்வினைகள் பக்கம் அதைத் திருப்பினால் நற்கருமங்கள் புரியத் தூண்டும். தீவினைகளின் பக்கம் திருப்பிவிட்டால் தீச்செயல்கள் புரியத் தூண்டும். ஆக, இரண்டினுள் இரண்டாவதற்கு எந்தவிதப் பயிற்சியும் தேவையில்லை. ஏனெனில் மனிதன் தவறு செய்யக்கூடிய இயல்பிலேயே படைக்கப்பட்டுள்ளான். எனவே முதலாவதற்குத்தான் பயிற்சி தேவை.

அந்த ஆன்மாவைத் தூய்மைப்படுத்த மேற்கொள்கின்ற பற்பல பயிற்சிகளுள் முதலிடம் வகிப்பது உணவுக்கட்டுப்பாடுதான். ஒருவன் தன் உணவு முறையில் மிகுந்த கட்டுப்பாட்டைக் கடிப்பிடித்தால் அவன் தன் ஆன்மாவைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம். மாறாக உணவு உட்கொள்வதில் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் வரம்பு மீறி உணவுகளை உண்ணத் தொடங்குபவன் தன் உள்ளுணர்வுகளால் உந்தப்படுகின்றான்.

அதன் விளைவாக அவனது ஆன்மா தூண்டக்கூடிய எல்லாத் தீவினைகளையும் தன் சுய விருப்பத்தோடு செய்யத் தொடங்கிவிடுகின்றான். இறுதியில் அவனுடைய ஆன்மா தன் அகஒளியை இழந்து அழுக்குகளால் நிரம்பிவிடுகின்றது.

ஒருவேளை உண்பான் யோகி

இருவேளை உண்பான் போகி

முன்போது உண்பான் ரோகி

எப்போதும் உண்பான் துரோகி

-எனும் தமிழ்ப்பாடல் மிகமிகக் குறைவாக உண்பவனை யோகி-துறவி என்றும் எப்போதும் உண்பவனை துரோகி என்றும் குறிப்பிடக் காரணம், அந்த உணவுதான் ஒருவனை நல்வழிப்படுத்தவும் தீச்செயல்களைச் செய்யுமாறு தூண்டவும் துணைபுரிகிறது என்பதேயாம். ஏனெனில் அதிகமாக உண்ணும்போது மனிதனின் சிந்தனைத்திறன் மங்கி, அவனது ஆன்மா தன் அகஒளியை இழந்துவிடுகின்றது. சோம்பேறித்தனமும் மந்தநிலையும் ஆட்கொண்டு விடுகின்றன.

உணவுக் கட்டுப்பாட்டை வ-யுறுத்துமுகமாக இறைவன் தன் திருமறையில், “உண்ணுங்கள்; பருகுங்கள்; விரயம் செய்யாதீர்” (7: 31) என்று கூறுகின்றான். அளவோடு, சுத்தமானதை மட்டுமே உண்ண வேண்டும் என்பது இதன் உட்பொருளாகும். மேலும், “மனிதன் நிரப்புகின்ற பைகளுள் மிகக் கெட்ட பை அவனது இரைப்பைதான்” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். ஆகவே உணவுதான் மனிதனின் முதல் எதிரி என்றால் மிகையில்லை.

நோன்பைப் பற்றிக் கூறுகின்ற இறைவசனத்தின் தொடக்கத்தில், இறைநம்பிக்கை கொண்டோரே! என்று தொடங்குகின்ற அல்லாஹ் அதன் முடிவில், நீங்கள் இறையச்சம் உடையோராகலாம் என்று முடிக்கின்றான். ஒருவன் நோன்பு நோற்பதன் மூலம் இறையச்சம் ஏற்பட வேண்டும். நோன்பு நோற்றுக்கொண்டே தகாத செயல்களைச் செய்யத் தலைப்பட்டால், அவனுடைய நோன்பு அவனுக்குள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்று பொருள். அதாவது நோன்பின் மூலம் ஏற்படவேண்டிய இறையச்சம் அவனுக்கு ஏற்படவில்லை என்று பொருளாகும்.

முஸ்லிம்களாகிய நாம் மேற்கொள்கின்ற உண்ணா நோன்புக் காலங்களில் அதிகாலையில் சிறிதளவு உணவுண்டபின் அந்தி மாலை வரை அல்லாஹ் ஒருவனுக்காகப் பசித்திருந்து, தாகித்திருந்து, நம் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி ஆன்மிகப் பயிற்சிபெறுகின்றோம். மாலையில் சூரியன் மறைந்ததும் நோன்பைத் துறந்து களைப்பை நீக்கிக்கொள்கிறோம். இவ்வாறே நாம் முப்பது நாள்கள் தொடர்ந்து மேற்கொள்கின்ற ஆன்மிகப் பயிற்சியால் நம் ஆன்மா அகஒளி பெற்றுவிடுகின்றது. பின்பு அஃது இறைவனை அஞ்சத் தொடங்கிவிடுகின்றது. தீச்செயல்களைச் செய்யத் தயங்குகிறது. இதுதான் ஆன்மிகப் பயிற்சியின் பலன்.

குறிப்பிட்ட காலத்தில் நாம் மேற்கொள்கின்ற இப்பயிற்சியால் நாம் செய்யும் நல்லறங்கள் அதிகம். மற்ற மாதங்களில் செய்யாத நல்லறங்களை இம்மாதத்தில் செய்கிறோம். காரணம், உண்டி சுருங்கினால் உள்ளம் பக்குவப்படும் என்பதேயாம். இதன் பிரதிப-ப்பை மற்ற மாதங்களில் நாம் பெற வேண்டுமெனில் நம் உணவில் ஒரு வரைமுறையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். உணவுத் தேவை குறைந்துவிட்டால் மற்றெல்லா நற்பண்புகளும் தாமாக நம்மை வந்து சேரும்.

ஆக, நாம் மேற்கொள்கின்ற இந்த உண்ணா நோன்பு கடமைக்காக மட்டும் இல்லாமல் நம் ஆன்மாவைக் கட்டுப்படுத்துவதாகவும் அதன் போக்கை மாற்றக்கூடியதாகவும் நாம் எண்ணியதை அடையக்கூடியதாகவும் மாற்ற வேண்டும். அத்தகைய முறையில் நம்முடைய நோன்பை ஆக்கிக்கொள்வோம். நம் நோன்பின் மூலம் இறைவனிடம் நன்மைகளை அடைவதோடு, நம் ஆன்மாவுக்கு அகஒளியை ஏற்படுத்திக்கொள்ள முனைவோம்!

நன்றி : நீடூர் இணையதளம் .

Advertisements

தங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்..

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s