ப்ரண்டன் வியந்த இஸ்லாம்

பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்

ஆன்மிகத் தேடலில் எகிப்திற்குச் சென்ற பால் ப்ரண்டன் கெய்ரோ நகரத்தில் தங்கிய நாட்களில் இஸ்லாமியர்களின் தொழுகை முறையால் மிகவும் கவரப்பட்டார். கிறிஸ்துவராக இருந்தாலும் மதங்களுக்கு அப்பாற்பட்ட ஆன்மீக ஞானத்தைத் தேடிய அவருக்கு எல்லா இடங்களில் இருந்தும் கிடைத்த மேன்மையான விஷயங்களை அறியவும், மதிக்கவும் முடிந்தது.

மசூதிகளில் தொழுகை நேரத்தில் ஒரு பரம தரித்திரனுக்கு அருகில் ஒரு பெரும் செல்வந்தன் உட்கார்ந்து தொழுவதை அவர் பல இடங்களிலும் சர்வ சாதாரணமாகப் பார்க்க முடிந்தது. புனிதக் குரானின் வாசகங்களை உச்சரித்தபடி அவர்கள் செய்த தொழுகை முறையில் பல்லாண்டு காலமாக பின்பற்றப்படும் ஒரே மாதிரியான ஒழுங்கு அவரைக் கவர்ந்தது. தொழுகை என்பது தினசரி வாழ்க்கையில் பின்னிப் பிணைந்த விஷயமாக இருப்பது அவரை வியக்க வைத்தது.

ரயிலில் பயணம் செய்கையில் ப்ளாட்ஃபாரங்களில் கூட குறிப்பிட்ட நேரமானால் சிறிய பாய்களை விரித்து இறைவனுக்காக ஆறேழு நிமிடங்கள் ஒதுக்க முடிந்த இஸ்லாமியர்களின் சிரத்தையை அவரால் சர்வ சாதாரணமாகக் காண முடிந்தது. ஒரு மதிய வேளையில் ஓட்டலுக்குச் சாப்பிடப் போன போதும் பரிமாறிக் கொண்டிருந்த சர்வர் தொழுகை நேரமானவுடன் தொழுகையை ஓட்டலிலேயே ஒரு ஓரத்தில் செய்ய ஆரம்பித்ததையும், இன்னொரு சமயம் ஒரு உயர் போலீஸ் அதிகாரியுடன் அவர் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் அவரது அனுமதி வாங்கிக் கொண்டு அந்த உயர் அதிகாரி தொழுகையை நடத்தியதையும் தன் நூலில் பால் ப்ரண்டன் குறிப்பிடுகிறார்.

தொழுகை என்பது வழிபாட்டுத்தலங்களில் என்று ஒதுக்கப்பட்டு விடாமல் அந்தந்த நேரங்களில் எந்த இடமானாலும் சரி அந்த இடத்தில் நடத்தப்படும் உறுதியான விஷயமாய் இருப்பது இஸ்லாத்தின் தனித்தன்மையாக பால் ப்ரண்டன் கண்டார். கெய்ரோவில் கண்டது போல் லண்டன், நியூயார்க் போன்ற மேலை நாடுகளில் காணமுடியாதென்பதை ஒப்புக் கொண்டார். இந்த வழிபாட்டு ஒழுங்குமுறையும், உறுதிப்பாடும் இஸ்லாத்திடம் இருந்து மற்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டியவை என்று அவர் நினைத்தார்.

எகிப்தில் இருந்த நாட்களில் இஸ்லாத்தையும் ஆழ்ந்து படித்த பால் ப்ரண்டன் அவர்களது தொழுகை முறையையும் கற்றுக் கொண்டு கெய்ரோ நகர பழமையான மசூதிகளில் தானும் தொழுதார். இறை சக்தி ஒன்றே என்பதில் மாற்றுக் கருத்து இல்லாதிருந்த பால் ப்ரண்டனுக்கு அப்படித் தொழுவதில் எந்தத் தயக்கமும் வரவில்லை.

தன்னைப் பின்பற்றுவோர் மனதில் பெருமையான ஒரு இடத்தைப் பெற முகமது நபி தேவையற்ற அற்புதங்களை நிகழ்த்திக் காட்டவும் முனையவில்லை என்பதனை இஸ்லாத்தைப் பற்றி விரிவாகப் படிக்கையில் அவர் அறிந்தார். அரேபியாவில் இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் அதிகரிக்கையில் சிலர் அவரிடம் சென்று “நீங்கள் ஏதாவது அற்புதம் நிகழ்த்தி நீங்கள் தெய்வத்தன்மை வாய்ந்தவர் என்று நிரூபியுங்கள்” என்று வற்புறுத்திய போது முகமது நபி வானை நோக்கி பார்வையைச் செலுத்தியவராய் ”இறைவன் என்னை அற்புதங்கள் நிகழ்த்த அனுப்பவில்லை. நான் அல்லாவின் செய்தியை மனிதகுலத்திற்குக் கொண்டு வந்திருக்கும் தூதன் மாத்திரமே” என்ற செய்தி அவரை வெகுவாகக் கவர்ந்தது.

இஸ்லாம் பற்றிய தன் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளவும், மேலும் அறிந்து கொள்ளவும் எகிப்து இஸ்லாமியர்களின் தலைவரும், இஸ்லாமிய கல்விக்கூடங்களின் தலைமைப் பேரறிஞருமான ஷேக் முஸ்தபா எல் மராகியை சந்தித்துப் பேசினார். இறைவன் ஒருவனே என்ற இஸ்லாத்தின் மிக உறுதியான, முக்கியக் கொள்கையில் ஆரம்பித்து எல்லா முக்கிய அம்சங்களையும் ஷேக் முஸ்தபா விளக்கினார். இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே வேறொரு நபர் தேவையில்லை என்பதை இஸ்லாம் நம்புகிறது என்றார் ஷேக் முஸ்தபா.

இஸ்லாம் இறைவனை அறிந்து கொள்ளவும், பிரபஞ்சத்தை அறிந்து கொள்ளவும் அறிவியல் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கிறது. திறந்த மனத்துடன் தொடர்ந்து செய்யும் ஆராய்ச்சிகளும், புரிந்து கொள்ளலுமே மூட நம்பிக்கைகளையும், புனிதக் கோட்பாடுகளுக்குத் தங்களுக்குத் தேவைப்படும்படி பொருள் கொள்ளும் போக்கையும், அவ்வப்போது விலக்கி ஒரு மதத்தை கலப்படமற்ற புனிதத்துடன் வைத்துக் கொள்ள முடியும் என்று உறுதியாகத் தெரிவித்தார் ஷேக் முஸ்தபா.

அவரிடம் நீண்ட நேரம் உரையாடிய போது பால் ப்ரண்டன் இஸ்லாம் பற்றிய தன் சந்தேகங்களைத் தயக்கமில்லாமல் கேட்டார். அவர் கேட்ட முக்கிய கேள்விகளும் ஷேக் முஸ்தபா சொன்ன பதில்களும் இதோ-

”ஆத்மாவைப் பற்றி தங்கள் கருத்து என்ன?”

“குரான் ஆத்மா பற்றி எதையும் குறிப்பிடவில்லை. பிற்காலத்திய சில இஸ்லாமிய மகான்களும், அறிஞர்களும் சில அறிவுபூர்வமான கருத்துக்களைத் தெரிவித்திருக்கின்றனர் என்றாலும் அதை குரானில் சொன்னதாக ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் நியாயத் தீர்ப்பு நாளில், செய்த நன்மைகளுக்கு வெகுமதியும், செய்த தீமைகளுக்குத் தண்டனையும் கிடைப்பது உறுதி என்பதை குரான் தெரிவிக்கிறது. அல்லா கூறுகிறார். “எவனொருவன் அணு அளவு நன்மை செய்திருந்தாலும் அதற்குத் தகுந்த வெகுமதியைப் பெறுவான். அதே போல அணுவளவு தீமை செய்திருந்தாலும் அதற்கேற்ற தண்டனையை அடைவான்.”

“இஸ்லாத்தில் மசூதிகள் முக்கியமா?”

“இல்லை. மக்கள் பிரார்த்திக்கும் இடங்கள் அவை, வெள்ளிக்கிழமை அன்று பிரசங்கங்கள் கேட்கச் செல்லும் இடங்கள் அவை என்றாலும் இஸ்லாத்தை பின்பற்ற மசூதிகள் அத்தியாவசியம் என்று சொல்ல முடியாது. இஸ்லாமியர்கள் எங்கு வேண்டுமானாலும் பிரார்த்தனை செய்ய முடியும். சுத்தமான தரை இருந்தால் போதும்….. மசூதிகளைக் கட்டுவது பிரார்த்திப்பதில் சகோதரத்துவத்தையும், சமூக ஒற்றுமையையும் வளர்த்தவே. அந்த வகையில் தான் மசூதியில் பிரார்த்திப்பதற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.”

“தினமும் ஐந்து முறைத் தொழுகை என்பது அதிகமில்லையா?” என்று பால் ப்ரண்டன் கேட்ட போது ஷேக் முஸ்தபா பொறுமையாக பதில் சொன்னார்.

“இல்லை. தொழுகைகள் இறைவனைப் பிரார்த்திக்கும் கடமை மட்டுமல்ல, அவன் ஆன்மிக முறைப்படி தன்னை நெறிப்படுத்திக் கொள்ள உதவும் அவசியமும் கூட. திரும்பத் திரும்ப இறைவனையும், இறைவனது செய்தியையும் சொல்லும் மனிதன் மனதில் இறை குணங்கள் தானாக ஆழப்படுகின்றன. உதாரணத்திற்கு இறைவனிடம் தொடர்ந்து கருணையை வேண்டும் மனிதன் அதன் அவசியத்தை உணர்ந்தவனாக இருப்பதால் தானும் கருணையுள்ளவனாக சிறிது சிறிதாக மாற ஆரம்பிக்கிறான். எனவே தொழுகைக்காகக் குறித்து வைத்திருக்கும் நேரங்களில் தொழுகை செய்வது வற்புறுத்தப்படுகிறது. ஏதாவது அவசர சூழ்நிலை அந்த நேரத்தில் தொழுகை செய்வதைத் தடுக்குமானால் அந்த சூழ்நிலை முடிந்தவுடனேயே தொழுகை செய்ய வேண்டும்.”

“நோய்வாய்ப்பட்டால் என்ன செய்வது?”

“நிற்கவோ, மண்டியிடவோ முடியாத நிலையில் ஒருவன் இருந்தால் பிரார்த்தனையைப் படுத்த நிலையிலேயே கூட செய்யலாம். அவனால் கைகளை நெற்றிப் பொட்டு வரை மடக்க முடிந்தால் கூட போதும்….”

“மெக்காவிற்கு செல்வதன் நோக்கம் என்ன?”

“மசூதிக்கு செல்வது எப்படி உள்ளூர் சமூக சகோதரத்துவத்தை மேம்படுத்துவதற்கோ அப்படித்தான் மெக்கா செல்வது உலகளாவிய மனிதகுல சகோதரத்துவத்தை மேம்படுத்துவதற்கு. எல்லோரும் இஸ்லாத்தில் சரிசமமானவர்களே. அல்லாவை நம்பி மசூதியில் கூடினாலும் சரி, ஹஜ் யாத்திரையில் கூடினாலும் சரி அங்கு அவர்கள் சமமாகவே கருதப்படுகிறார்கள். மசூதியிலும் சரி யாத்திரையிலும் சரி ஒரு அரசனுக்கருகில் ஒரு பிச்சைக்காரன் பிரார்த்தனை செய்யலாம். எல்லா வேறுபாடுகளையும் ஒதுக்கி வைத்து விட்டு ஒருமித்துப் போகும் இடமாகவும் சந்தர்ப்பமாகவும் கருதப்படுகிறது. இஸ்லாத்தைப் பொறுத்த வரை அவரவர் நற்செயல்களால் மட்டுமே ஒவ்வொருவரும் உயர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்”

உண்மையான இஸ்லாம் உண்மையை அறிய ஊக்குவிப்பதாகவும், கண்மூடித்தனமான பின்பற்றுதலை கண்டிப்பதாகவும் ஷேக் முஸ்தபா கூறி புனித நூலில் வரும் ஒரு வாசகத்தையும் கூறினார். “இறைவன் சொன்னதைப் பின்பற்றுங்கள் என்று சொல்லப்படும் போது அவர்கள் நாங்கள் எங்கள் தந்தையர் செய்ததைப் பின்பற்றுகிறோம் என்கிறார்கள்…. உங்கள் தந்தையரே அறியாதவர்களாக இருந்தால், வழிநடத்தப்படாதவர்களாய் இருந்தால் என்ன செய்வீர்கள்?”

உண்மை தானே!

நீண்ட நேரம் தொடர்ந்த அவருடைய விளக்கங்களில் பால் ப்ரண்டனுக்கு இஸ்லாத்தை வித்தியாசமான புதுமையான கோணங்களில் அறியவும், முன்பு கொண்டிருந்த சில தவறான அபிப்பிராயங்களைக் களைந்து கொள்ளவும் முடிந்தது.

நன்றி : enganeshan

Advertisements

தங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்..

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s