உங்கள் நட்பை உரசிப் பார்க்க…

நட்பு பேணுங்கள் நல்லவையெல்லாம் கூடும்

ஒரு நல்ல நண்பன் இருந்தாலும் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்” – ஆங்கிலப் பழமொழி.

அன்பாக இரு” அனைத்து மதங்களின் போதனை இது. அன்புடன் இருப்பது என்பது பொறுப்புடன் கூடிய ஒரு முடிவு.

இன்றைய நட்புகளை எடை போட்டால் பெருமூச்சுதான் பெரிதாய் வரும். ‘உல்லாசத்துக்காக ஒன்று சேர்ந்தவையே நட்பாக இருக்கின்றன’ என்ற ஒருவரின் விமர்சனம் இன்றைய நட்புலகத்துக்கு வெகுவாகப் பொருந்தும்.

இன்று பெரும்பாலானவர்களின் அன்பு பாரபட்சம் பார்த்தே ஏற்படுகிறது. தேவையானபோது தொடர்பு கொள்வதும், தேவைக்காக பழகுவதும், கூடிப் பொழுதுபோக்குவதுமே நட்பென்று புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நிஜத்தில் அது நட்புமல்ல, அன்புமல்ல, வெறும் சுயநலமே!

பிறரைப் பார்த்து நீ புன்னகைப்பது கூட ஒரு அறச்செயல்” என்று நபிகள் நாயகம் சொல்கிறார். ஆனால் வாய்விட்டுச் சிரித்தாலோ, அனைவரிடமும் சிரித்துப் பழகினாலோ சமூக வழக்கில் தப்பாய்ப் பார்க்கும் கண்ணோட்டம் பரவி இருக்கிறது. அப்படி இருக்கும்போது நாமே வலியவந்து எல்லோரிடமும் சிரித்துப் பழகி தொடர்ந்து அன்புறவில் ஈடுபடுவது சாத்தியமற்ற ஒன்றுதான். இருந்தாலும் நாம் எத்தனை பேருடன் நட்புறவுடன் இருக்கிறோமோ, அதுவே நாம் அர்த்தமுள்ள வாழ்வு வாழ்ந்ததற்கான அடையாளம்.

“என்னை நேசிப்பவரை நான் நேசிப்பேன், எனக்கு உதவி செய்தவருக்கு நான் உதவி செய்வேன்” என்பதுவே பலரின் எழுதப்படாத அன்பு இலக்கணம். பழிக்குப் பழி என்பதற்கும், இதற்கும் வித்தியாசமே இல்லை.

“மற்ற எல்லோருமே வெளியே செல்லும்போது உள்ளே வருபவன் தான் உண்மையான நண்பன்” என்று அறிஞர் டாக்டர் பில் மெக்கிராவ் சொல்வார். ஆமாம், உங்களிடம் எதைஎதையோ எதிர்பார்த்துப் பழகியவர்கள் எல்லாம் உங்களிடம் ஏதுமில்லை என்று அறிந்து விலகிச் செல்லும்போது, உங்களுடன் கரம் கோர்க்க, உங்களின் துயர் போக்க வருபவனே உண்மையான நண்பன் ஆவான். இதைத்தான் “இடுக்கண் களைவதே நட்பு” என்று வள்ளுவர் இலக்கணப்படுத்துகிறார்.

நீங்கள் நட்பு நிறைந்தவரா? என்பதை சோதிக்க உங்களை நீங்களே கேட்டுக் கொள்ள வேண்டிய சில கேள்விகள்…

  1. உங்களிடம் எதுவுமே சரியில்லை என்கிறபோதும் அணுகிப் பேசும் நண்பனை பெற்றிருக்கின்றீர்களா?
  2. ஒத்துப்போகாத விஷயங்களின்போது அவனுக்கு தனித்தன்மை இருப்பதை ஆமோதிக்கின்றீர்களா?
  3. வருத்தத்தில் இருக்கும் நண்பனின் சூழலை சமாளிக்க உங்களுக்குத் தெரிகின்றதா?
  4. நண்பனின் சில பழக்கவழக்கங்கள் பிடிக்காதபோது அதைப்பற்றி அவனிடம் வெளிப்படையாக பேசுகின்றீர்களா?
  5. தேவையென்றால் நண்பனிடம் தயக்கமின்றி உதவி கேட்கின்றீர்களா? உதவிக்கு நன்றி கூறுகின்றீர்களா?
  6. நண்பனின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் நடக்கின்றீர்களா?
  7. நண்பன் ஒரு புதிய நண்பனைச் சந்திக்கும்போது, நம் நட்புக்கு இடைïறு வந்துவிட்டது என்று எண்ணுகின்றீர்களா?

கடைசி இரு கேள்விகளைத் தவிர மற்ற கேள்விகளுக்கு ‘ஆம்’ என்ற பதில் வராவிட்டால் நீங்கள் உண்மையான நண்பனை அடையவோ, உண்மையான நண்பனாக மாறவோ இன்னும் நிறைய பயணிக்க வேண்டும்.

உங்கள் நட்புறவை பரிசீலிக்க விரும்பினால் உங்கள் வாழ்வின் முக்கியமான 3 உறவுகளை பட்டியலிடுங்கள். அவர்கள் ஏன் உங்களுக்கு முக்கியமானவர்கள்? அவர்களுக்கு அந்த விசேஷ இடத்தைப் பெற்றுத் தந்த குணங்கள் என்ன? அவர்களின் கஷ்டங்களைப் போக்க நீங்கள் என்ன செய்ய தயாராக இருக்கிறேன்? என்று பட்டியலிடுங்கள். அவர்களின் சிறப்பு குணங்கள் உங்களுக்கு ஏற்படவும், அதே குணத்துடன் பிறருடன் நேசமாகப் பழகவும் முயற்சி செய்யுங்கள்.

ஒருவரோடு ஒருவருக்கு உள்ள உறவில் மட்டுமே நாம் முழுமையாக நாமாக இருக்கிறோம். நாமிலிருந்து பிரிந்த ‘நான்’ அழிந்து விடும். அப்படியென்றால் நட்பு எப்படி இருக்க வேண்டும் என்று கேட்கிறீர்களா?

முகம் மலர பேசுவதல்ல, அகம் மலர பழகுவதே நட்பு என்கிறார் வள்ளுவர்.

ஒருவனுக்கு எப்படிப்பட்ட நண்பன் தேவை என்பதை ஆங்கிலக் கவிதை ஒன்று இப்படி வரையறுக்கிறது…

“தன் மனத்தை அப்படியே வெளிப்படுத்த முடிந்தவன்;

எப்போது வாயை மூட வேண்டும் என்று அறிந்தவன்;

அன்புடன் உணவையும், நல்ல நகைச்சுவைகளையும், சூரிய அஸ்தமனத்தையும் பகிர்ந்து கொள்பவன்;

உங்களுடன் பெரியவனாகவோ, சிறியவனாகவோ நடிக்காமல் தோழமையுடன் இருப்பவன்;

நீங்கள் நீங்களாகவே இருக்க அனுமதிப்பவன் எவனோ அப்படிப்பட்ட நண்பனே உங்களுக்குத் தேவை”

நட்பு பேணுங்கள் நல்லவையெல்லாம் கூடும்!

Advertisements

தங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்..

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s