“நம்மை சரி செய்து கொண்டே இருப்பது தான் உண்மையான முன்னேற்றத்திற்கு உதவும்”

விளைவை மாற்ற செயலை மாற்றுங்கள்!

எதை விதைக்கிறோமோ அதைத் தான் அறுவடை செய்ய முடியும் என்பது விதி. துவரையை விதைத்து அவரை விளைச்சலை எதிர்பார்க்க முடியாது. தாவரவியலில் மட்டுமல்ல இந்த உண்மை மனிதனின் வாழ்வியலிலும் கூட மாற்ற முடியாத அடிப்படை விதியாக இருக்கிறது. எதையெல்லாம் செய்கிறோமோ அதற்கான விளைவுகளை நாம் சந்தித்தே ஆக வேண்டும்.

விதைகளின் தன்மை விளைச்சலில் தெரிவது போல செயல்களின் தன்மை அதன் விளைவுகளில் தெரியும். நடும் போது யாரும் பார்க்கவில்லையே என்று ஒருவன் கோணல் மாணலாக நாற்றுகளை நடலாம். ஆனால் அவை வளர்ந்த பின் என்ன நட்டிருக்கிறீர்கள் என்பதையும் எப்படி நட்டிருக்கிறீர்கள் என்பதை உலகிற்குக் காட்டாமல் விடாது. அதனால் தவிர்க்க முடியாத இந்த விதிக்கு விதிவிலக்காக இருக்க வேண்டும் என்று ஆசைப்படாதீர்கள். அப்படி நடக்க வாய்பேயில்லை. ஏனென்றால் இந்த அடிப்படை விதியிலேயே உலகம் அன்றிலிருந்து இன்று வரை இயங்குகிறது. இந்த விதியே இயற்கை. இந்த விதியே இறைவன்.

எனவே நன்மைகளை தன் வாழ்க்கையில் சந்திக்க விரும்பும் மனிதன் தன் செயல்களில் நன்மை இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தீமைகளைச் செய்து விட்டு தனக்கு நன்மை நடக்கும் என்று நம்புபவன் கிழக்கு திசையில் உள்ள ஊருக்குச் செல்ல ஆசைப்பட்டு மேற்கு திசை நோக்கி நடக்கும் முட்டாளுக்கு இணையாகிறான். உங்கள் செயல்களைக் கண்டு கொள்ளாமல் இருக்க இறைவன் மாமூல் வாங்கும் அரசு அதிகாரி அல்ல. ஆகையால் கோயில் உண்டியல்களில் கோடி கோடியாய் கொட்டினாலும் உங்கள் கணக்கு சரியாகி விடாது. உங்கள் கணக்கு சரியாவது அதற்குத் தகுந்த விளைவோடு தான்.

சில சமயங்களில் நல்ல செயல்களுக்கு நல்ல விளைவுகளும், தீய செயல்களுக்கு தீய விளைவுகளும் கிடைப்பதற்குத் தாமதமாகலாம். அந்த தாமத காலத்தில் இந்த விதி பொய்ப்பது போன்ற தோற்றம் பலருக்கும் தோன்றலாம். ஆனால் தாமதமானாலும் விளைவுகள் வட்டியோடு வந்து சேரும் என்பதில் சந்தேகம் தேவையில்லை. இடைவெளி எவ்வளவாக இருந்தாலும் செயலும் விளைவும் பிரிக்க முடியாத ஜோடி என்பதால் ஒன்றின் பின்னாலேயே மற்றது வந்து சேர்ந்து தானாக வேண்டும்.

எனவே விளைவுகளை மாற்ற விரும்பினால் மனிதன் செயல்களை மாற்ற வேண்டும். அதைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை. இந்த விதி நன்மை, தீமைகளுக்கு மட்டும் பொருந்துவது அல்ல. செயலின் சிறப்புத் தன்மைக்கும் இதே விதி தான்.

விளைவைப் பார்க்கையிலேயே அந்த செயல் எப்படி செய்யப்பட்டு இருக்கிறது என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெரிந்து விடும். கவனமாகச் செய்தீர்களா, ஈடுபாட்டுடன் செய்தீர்களா, முழு மனதோடு செய்தீர்களா, அந்த செயலுக்குத் தேவையான அறிவுபூர்வமாகச் செய்தீர்களா என்பதை எல்லாம் நீங்கள் சொல்ல வேண்டியதில்லை. உங்கள் செயலின் விளைவு சொல்லி விடும். விளைவைப் ’போஸ்ட் மார்ட்டம்’ செய்தால் சின்னத் தவறு கூட இல்லாமல் செயல் செய்த விதத்தைச் சொல்லி விடலாம். சிறப்பாகச் செய்யும் செயல்கள் சிறப்பான விளைவுகளாக மலர்ந்து வாழ்க்கையை சோபிக்கும். வேண்டா வெறுப்பாகவோ, திறமைக் குறைவாகவோ செய்யும் செயல்கள் அதற்குத் தகுந்தாற் போல மோசமான விளைவுகளாக வெளிப்பட்டு களையிழந்து காட்சி அளிக்கும்.

இந்த அடிப்படை உண்மையைத் தெரிந்து கொள்ளாமல் பலர் காலம் முழுவதும் கஷ்டப்படுகிறார்கள். ’நான் என்ன தான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் முன்னேற்றமில்லை’ என்று பலர் புலம்புவதை நாம் கேட்கிறோம். குறிப்பட்ட வகையில் எத்தனை உழைத்தாலும் முன்னேற்றமில்லை என்றால் அந்த உழைப்பில், உழைக்கும் விதத்தில் ஏதோ குறைபாடு இருக்கிறது என்றல்லவா அர்த்தம். அப்படி இருக்கையில் அப்படியே தொடர்ந்து உழைத்துக் கொண்டு போவது முட்டாள்தனம் அல்லவா? எங்கே என்ன தவறு இருக்கிறது அல்லது என்ன குறைபாடு இருக்கிறது என்று கண்டுபிடித்து அதன்படி சரி செய்து கொண்டு உழைத்தாலல்லவா நாம் நல்ல விளைவுகளைக் காண முடியும். இந்த அடிப்படை உண்மையை வாழ்க்கையில் உணர பலரும் மறப்பது தான் பரிதாபம்.

செய்கின்ற வேலையில் முன் யோசனையும், திட்டமிடுதலும், தேவையான திறமையும் இருந்தால் அந்த வேலை சீக்கிரமாக முடியும், சிறப்பாகவும் முடியும். ஆனால் உழைப்பு மட்டும் இருந்து முன் சொன்ன மூன்றும் இல்லா விட்டால் வேலையும் முடியாது, வேலை சிறப்பாகவும் இருக்காது. வேலை எதுவாக இருந்தாலும் விதி இது தான்.

செயலின் முடிவே விளைவு என்ற உண்மையே மிகப்பெரிய பாடம் என்று சொல்லலாம். இப்போது இருக்கும் நிலைமையில் உங்களுக்குத் திருப்தி இல்லையா? நீங்கள் அடைய நினைத்த வெற்றிகளை அடையவில்லையா? உலகம் உங்களை சரியாக மதிப்பிடவில்லை என்ற வருத்தமா? இதில் எதற்காவது ஆம் என்பது பதிலாக இருந்தால் முதலில் உங்களுடைய செயல்பாடுகளை ஆராய்ந்து பாருங்கள். செயல்படும் முறையிலும், செயல்படும் நேரத்திலும் குறைபாடுகள் இருக்கலாம். அல்லது செய்ய வேண்டிய ஏதோ முக்கியமானது விடுபட்டுப் போயிருக்கலாம். செய்யக் கூடாத ஏதோ ஒன்றை நீங்கள் செய்து கொண்டும் இருக்கலாம். சரியான கூட்டல், கழித்தலை உங்கள் செயல்களில் புகுத்தினால் கண்டிப்பாக விளைவுகள் மாற ஆரம்பிப்பதைப் பார்க்கலாம். அதை விட்டு விட்டு வருந்துவதும், குமுறுவதும், புலம்புவதும் மாற்றத்திற்கு உதவாது.

இப்படித்தான் இருப்பேன், இப்படித்தான் வேலை செய்வேன், இப்படி எல்லாம் நடக்க வேண்டும் என்று சொல்பவன் தோற்கத் தன்னைத் தயார் செய்து கொள்கிறான். செயலின் விளைவு எதிர்பாராததாக இருந்தால் ஏன் என்று சிந்தித்து மாற்ற வேண்டியதை மாற்றி விட்டு மறுபடி செயல்பட வேண்டும்.

அவ்வப்போது நம்மை சரி செய்து கொண்டே இருப்பது தான் உண்மையான முன்னேற்றத்திற்கு உதவும். அதுவே நம் வாழ்க்கையை மெருகுபடுத்திக் கொண்டே செல்லும். எல்லா மகத்தான மனிதர்களும், எல்லா வெற்றியாளர்களும், தாங்கள் வேண்டும் விளைவுகளுக்கேற்ப தங்கள் செயல்களை சரிப்படுத்திக் கொண்டே வந்தவர்கள் தான். உலகம் அவர்களை அதிர்ஷ்டக்காரர்கள் என்று சுருக்கமாக அழைத்தாலும் சரியான நேரத்தை, சரியானதை, சரியான விதத்தில் செய்தது தான் அந்த அதிர்ஷ்டத்தின் ரகசியம்.

இதுவே வாழ்க்கையில் படிக்க வேண்டிய மிகப்பெரிய பாடம். இதில் தேர்ச்சி பெற்றால் ஒருவன் சாதிக்க முடியாத இலக்குகள் இல்லை, அடைய முடியாத சிகரங்களும் இல்லை.

நன்றி:-என்.கணேசன் / வல்லமை

Advertisements

தங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்..

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s