மற்றவர்கள் முன்பு நீங்கள் திறமையானவர்களாக திகழ வழிகள்

காலத்தின் மாற்றத்திற்கேற்ப – நமது
கருத்திலும் வளர்ச்சி வேண்டும்!
புதுப்புது திறன்களை கற்றால் – நெஞ்சில்
புத்துணர்ச்சி என்றும் தவழும்

தொழில் வாழ்க்கையில் தொடர்ந்து வெற்றி பெறுவதற்கும், பாராட்டு மழையில் நனைவதற்கும் நீங்கள் எப்பொழுதும் திறமையானவராகத் திகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும்.கடந்த காலங்களில் நீங்கள் சிறப்பாக பணி செய்திருக்கக் கூடும்.ஆனால் அது மட்டுமே போதாதது.வாழ்க்கை என்பது ஒரு வளர்ச்சி. அந்த வளர்ச்சியின் தேவைக்கு ஈடு கொடுக்கும் விதத்தில் உங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். மேலும் நீங்கள் எந்த அளவிற்குத் திறமையானவர் என்பதை நிகழகாலத்தில் நீங்கள் செய்யும் பணித்திறனை வைத்துத்தான் முடிவு செய்கின்றார்கள். ஆகவே நிகழ்காலப் பணியின் தேவையையும் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள மாற்றத்தையும் கணக்கிட்டு, அவற்றிற்குத் தேவையான திறமைகளை வளர்த்துக் கொண்டே இருங்கள். உங்களுடைய செயல் திறனை அதிகரிக்க உங்களுடைய திறமைகளின் வளர்ச்சி மிகமிக முக்கியம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். வளர்ச்சியே வாழ்வின் வெற்றி.

செயல்திறனை அதிகரியுங்கள்

உங்களுக்கு உள்ள திறமைகளைச் (Skills) செயல்திறனாக (Productivity) மாற்றும் போதுதான் பணியில் நீங்கள் எதிர்பார்க்கும் முன்னேற்றமும் பதவி உயர்வும் கிடைக்கின்றது. மேலும் செயல்திறனை காட்டும் அளவீடுகள் என்னென்ன என்பதைப் பார்க்கும்போது கீழ்க்காணுபவைகளை மிகவும் முக்கியமானைகளாகக் கருத வேண்டியுள்ளது.

1. வேகமாகச் செயல்படுதல்
2. எப்பொழுதும் சரியாகவே செயல்படுதல்
3. தொடர்ந்து கற்றுக்கொண்டே இருத்தல்
4. அனுபவப்படுதல்
5. ஆக்கப்பூர்வமாகச் சிந்தித்துச் செயல்படுதல்
6. தீர்வாகத் திகழுதல்
7. விரயத்தைக் குறைத்தல்
8. தரத்தை மேம்படுத்துதல்
9. உற்பத்தி இலக்கை அடைதல்
10. முன்னேற்றத்திற்கான ஆலோசனைகளை வழங்குதல்

வேகமாகச் செயல்படுதல்

உங்களுடைய செயல்களை வேகமாகவும்,விவேகமாகவும் செய்ய வேண்டும்.சோம்பேறித்தனத்திற்கு மனதில் மட்டுமல்ல செயலிலும் இடந்தராதீர்கள். ஏனென்றால் செயல்களின் விளைச்சலே வெற்றியாகும். உங்களிடம் ஒப்படைக்கப்படுகின்ற பணிகளை வேகமாக செய்து முடிக்க வேண்டும்.ஆனால் அவசரப்படக்கூடாது. வேகமாகச் செயல்படுவதற்கும், அவசரமாகச் செயல்படுவதற்கும் ஒரு வேறுபாடு உண்டு. அது என்னவென்றால், வேகம் என்பது வலிமையின் வெளிப்பாடு, அவசரம் என்பது தயாரிப்பின்மையின் பிரதிபலிப்பு. மேலும், திட்டமிட்டு முழுத்திறனும் வெளிப்படும் விதத்தில் விழிப்புணர்வோடு செயல்படுவதே வேகமாகச் செயல்படுவதலாகும். போதிய தயாரிப்பும், திட்டமும், பயற்சியும் இல்லாமல், எடுத்தேன்,கவிழ்த்தேன் என்ற ரீதியில் விளைவுகளைப் பற்றிய எச்சரிக்கையும்,விழிப்புணர்வும் இல்லாமல் செயல்படுவதே அவசரமாகச் செயல்படுவதாகும்.

வேகமும் விவேகமும் கலந்ததாக உங்கள் செயல் இருக்கும்போதுதான் நீங்கள் பணிபுரியும் நிறுவனமும் நீங்கள் முனேற்றக்காற்றை மூச்சுக்காற்றாகச் சுவாசித்துக்கொண்டே இருக்க முடியும். ஏதோ மனம்போன போக்கிலே பணிகளைச் செய்யாமல் அனைவரின் பாராட்டப் பெறும் விதத்தில் கவனமாகவும் வேகமாகவும் செய்து கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு பணிகளைச் சிறப்பாகவும், வேகமாகவும் செய்வதற்குத் தேவையான திறமைகளைத் தொடர்ந்து வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.

எப்பொழுதும் சரியாகவே செயல்படுதல்

எதைச் செய்தாலும் அதைச் சரியாவே செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். ஏனென்றால் உங்களுடைய செயல்களே உங்களை உலகிற்கு அறிமுகம் செய்கின்றது. மேலும் எதையும் முதல்முறையே சரியாகச் செய்வது (Right First) என்ற கொள்கையையும் கடைப்பிடிக்க வேண்டும். மற்றவர்களிடமிருந்து உங்களத் தனித்துக் காட்டும் விதத்தில் உங்களுடைய திறமைகளை செயல்களாக மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். வேலையில் ஆர்வமும் ஈடுபாடும் இருக்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் செய்யும் பணிதான் உங்களுடைய வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள உதவுகின்றது. ஆகவே, அப்பணியைச் சிறப்பாகச் செய்வதுடன் சரியாகவே செய்ய வேண்டும். பணிகளைச் சிறப்பாகவும் சரியாகவும் பொறுப்புணர்ச்சியுடனும் செய்யும் பண்பாடுடையவராக நீங்கள் திகழ வேண்டும். பணியை அரையும் குறையுமாகச் செய்தால் நமக்கு எந்த வித நன்மையும் இல்லை என்பதையும் நீங்கள் உணர்ந்து கொண்டு, பணி சரியாகச் செய்ய முயலுங்கள்.

கற்றுக்கொண்டே இருத்தல்

தொழில்துறையில் நிகழும் மாறுதல்களுக்கு ஈடுகொடுத்து வெற்றியடைவதற்கு புதிய புதிய திறமைகள் தேவைப்டுகின்றன. நீங்கள் செய்யும் பணியில், இயக்கும் இயந்திரத்தில், உற்பத்தி முறைகளில், தரமேம்பாட்டு முறைகளில், தினசரி ஏற்படும் மாறுதல்களும் வளர்ச்சியும் உங்களிடமிருந்து அதிகப்படியான திறமைகளை எதிர்பார்கின்றது. ஆகவே புதிய புதிய திறமைகளைக் கற்றுக் கொள்ளும் ஆர்வத்துடனும் திறந்த மனதுடனும் இருங்கள். புதுக்கருத்துகள் மனதினுள் நுழையும்போதுதான் புதிய சிந்தனைகள் தோன்றுகின்றன. புதிய எண்ணங்களே முன்னேற்றத்திற்குத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ளச் செய்கின்றன. மேலும் ஏற்கனவே நேற்றைய பட்டதாரி இன்று படிப்பதை நிறுத்தி விட்டால் நாளை படிக்காதவர் ஆகிவிடக்கூடும் என்கின்றார்கள். ஆகவே தொடர்ந்து கற்றுக்கொண்டே இருங்கள். அப்பொழுதுதான் உங்கள் திறமைகள் வளர்ந்து கொண்டே இருக்கும்.

அனுபவப்படுதல்

எதையும் உத்வேகத்துடனும் விழிப்புணர்வுடனும், அனுபவப்பட்டு தெரிந்துகொள்ளும் ஆர்வம் வேண்டும். அறிவின் வளர்ச்சிக்கு அனுபவமே ஆசான். புதிய இயந்திரங்கள். புதிய உற்பத்தி முறைகள் போன்றவை நடைமுறைக்கு வரும்போது அவற்றை ஏற்றுப்பணி செய்யும் ஆர்வமும், அவற்றிலுள்ள நுணுக்கங்களை அறந்து கொள்ளும் முனைப்பும் உங்களுக்கு இருக்க வேண்டும். மேலும் காலத்தின் தேவைக்கு ஏற்ப புதியனவற்றைக் கற்றுக்கொள்ளும் புத்துணர்வு நெஞ்சில் தவழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். புதியனவற்றை கற்று என்ன செய்யப்போகின்றோம் என்ற மனநிலையுடன் இருந்தால் வேலையில் சலிப்பும் செயலில் சோர்வும்தான் ஏற்படும். எதுவாயினும், கற்றுக்கொள்கின்றேன், கற்றது காலத்திற்கு உதவும் என்ற மனநிலையைக் கொண்டவர்களே தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

தீர்வாகத் திகழ்தல்

நீங்கள் ஒரு பிரச்னையின் அங்கமாக அமையாமால் அதன் தீர்வாகத் திகழ வேண்டும். சிக்கல்கள் ஏற்படும்போது அதை மேலும் சிக்கலாக்காமல், அதன் தீர்வாகத் திகழ வேண்டும். சிக்கல்கள் ஏற்படும்போது அதை மேலும் சிக்கலாக்காமல்,அதைத் தீர்க்கும் யோசனைத் தருபவராகவும், மற்றவர்கள் கூறும் சரியான யோசனைகளை ஏற்றுக் கொள்பவராகவும் நீங்கள் இருக்க வேண்டும். தொழில் நிறுவனத்தில் உங்களைப் பணிக்கு அமர்த்தி இருப்பது, பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அல்ல. எல்லாப் பிரச்சனைகளையும் உங்களால் தீர்க்க முடியாதுதான், என்றாலும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உதவலாம் அல்லவா? ஆகவே ஆக்க சிந்தனையுடன், பிரச்சனைகளைத் தீர்க்கும் வழிகளை எண்ணுபவராக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் உங்களுடைய பணியில் உங்களுக்குப் பெருமையும், உங்களால் உங்கள் பணிக்குப் பெருமையும் கிடைக்கும்.

விரயத்தை குறைத்தல்

பொருள்களின் விரயத்தை குறைக்கும் ஆற்றலும், சிக்கனமும் தேவை. அப்பொழுதான் பொருள்களின் உற்பத்திக்காகும் செலவுகளைக் குறைக்க முடியும். பொருள்களின் விரயத்தைக் குறைக்க முயல்வதுடன் கால விரயத்தையும் குறைக்க முயல வேண்டும். அதற்கு, சரியான நேர நிர்வாகத் திட்டம் உங்களிடம் இருக்க வேண்டும்.அதாவது ஒவ்வொரு நாளும் உங்களுடைய பணி நேரத்தை முழுப்பயனுள்ள பணிகளைச் செய்யக்கூடிய விதத்தில் திட்டமிட வேண்டும். அத்துடன், பிறருடைய தலையீடு, வீண் விவாதம் போன்றவற்றை தவிர்த்து விடும் கலையையும் கற்றுக்கொள்ள வேண்டும். நேரமே நமது வாழ்க்கை. நேரத்தை விரயம் செய்வது என்பது நமது வாழ்நாளை விரயம் செய்வதற்குச் சமம் என்பதுடன், வேலை நேரத்தை விரயம் செய்வதென்பது நமக்கு வேலையளிப்பவர்க்கு செய்யும் தீங்கு மட்டுமல்ல., நமது முன்னேற்றத்திற்கு நாமே போட்டுக்கொள்ளும் முட்டுக்கட்டை என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

உற்பத்தியாகும் பொருள்களின் தரத்தை உயர்த்துவதற்கு ஆலோசனை வழங்கக் கூடியவராகவும் நீங்கள் விளங்க வேண்டும். செய்யும் தொழில் மீதும், பணியாற்றும் நிறுவனத்தின் மீதும் நீங்கள் கொண்டுள்ள ஈடுபாடும், பற்றும், உங்ளை மேலும் திறமையும், ஆற்றலும் உள்ளவராக மாற்றும் என்பது உண்மை. ஆகவே ஈடுபாட்டுடன் வேலை செய்யும் பண்புடையராகவும், திறமைகளை வளர்த்துக் கொள்ளும் ஆர்வமுடையவராகவும் விளங்குங்கள். அதுவே தொழில் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு உதவும் எளிய வழியாகும்.

திறமை தீபம் ஏற்றினால்
கடமை முடிப்பது எளிதாகும்
தொடர்ந்து கற்பதை பழக்கமாக்கினால்
தோல்வி என்பது வாழ்க்கையிலில்லை.

நன்றி: தன்னம்பிக்கை

Advertisements

தங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்..

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s