பி.எட். கல்லூரிகள் காட்டில் பணமழை….. யாருக்கு லாபம்

“பணம் கொடுத்தால் போதும் பட்டம் பெற்று விட முடியும்” என்ற நிலை, பி.எட்., கல்லூரிகளில் நடக்கும் தில்லுமுல்லு காரணமாக உருவாகியுள்ளது. கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்கள், தனியார், பி.எட்., கல்லூரிகளின் பண மழையில் நனைகின்றனர். பணத்தை மட்டும் கொடுத்து பி.எட்., பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், எதிர்கால ஆசிரியர்களின் தரம் கேள்விக்குறியாகியுள்ளது.

பொதுவாக ஆசிரியர் பணியை, சேவை செய்ய கிடைத்த உன்னதப் பணியாகக் கருதிய காலம் மாறிவிட்டது. இன்று, அரசு ஆசிரியர் பணியில் சேர்ந்து விட்டால், மாதத்துக்கு 20 ஆயிரத்துக்கும் குறையாத சம்பளம், இதர சலுகைகள், அதிக விடுமுறை என, வாழ்க்கையில் செட்டிலாகி விடலாம் என்ற எண்ணமே அனைவரிடமும் காணப்படுகிறது.இதன் காரணமாக, சில ஆண்டுகளாக ஆசிரியர் பணிக்கு அடிப்படை தேவையான, பி.எட்., பட்டப்படிப்பை படிக்க விரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்ட பின், புதிதாக 2,000 உயர்நிலைப்பள்ளிகளும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களும் உருவாக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.

இதனால், பி.எட்., படிக்க விரும்புவோரின் எண்ணிக்கையும் இரு மடங்காக அதிகரித்துள்ளன. தமிழகத்தில், 650க்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லூரிகள், கல்வியியல் பல்கலையின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், அரசு மற்றும் உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள இடங்கள் மட்டும் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படுகின்றன. சுயநிதி கல்லூரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களாக பூர்த்தி செய்து வருகிறது.ஓராண்டு பி.எட்., படிப்புக்கான கட்டணமாக, 1 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்யப்படுகிறது. அரசு சார்பில் எவ்வித கட்டணமும் நிர்ணயிக்காததால், ஒவ்வொரு கல்வி நிர்வாகமும், அவரவர் இஷ்டத்துக்கு கட்டணத்தை நிர்ணயித்து வசூல் செய்து வருகின்றனர்.அதிக வசூலுக்கு ஆசைப்படும் கல்லூரி நிர்வாகங்களில் ரெகுலர், இர்ரெகுலர் என, இரண்டு முறைகளை கடைபிடிக்கின்றனர். இதில் ரெகுலர் முறையில், கல்லூரி வேலை நாள் அனைத்திலும் வகுப்புக்கு முழுமையாக வர வேண்டும் எனவும், இர்ரெகுலர் முறையில், வகுப்புக்கு வரத் தேவையில்லை எனவும் கேன்வாஸ் செய்கின்றன.

ஆய்வு மற்றும் தேர்வு நேரங்களில் மட்டும் கல்லூரிக்கு வந்தால் போதும் என்ற நிபந்தனையுடன் இச்சேர்க்கை நடத்தப்படுகிறது. இதற்கு ரெகுலர் முறை மாணவர்களை விட, 50 ஆயிரம் ரூபாய் முதல், 1 லட்சம் ரூபாய் வரை அதிகமாக வசூல் செய்யப்படுகிறது.வேறு இடங்களில் வேலை செய்து வரும் பலரும், இம்முறையில் பணத்தைப் பற்றி கவலைப்படாமல், சேர்ந்து வருகின்றனர். இவற்றையெல்லாம் தெரிந்த அரசு அதிகாரிகள் இவற்றை கண்டு கொள்ளாமல் இருக்க தனி, “ரேட்’ நிர்ணயித்துக்கொண்டனர்.பி.எட்., பட்டப்படிப்பில் ஒவ்வொரு மாணவ, மாணவியரும், 40 நாள் அரசுப் பள்ளிகளில் நேரடி ஆசிரியர் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்காக பி.எட்., கல்லூரிகள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும். இவற்றை பெற வேண்டும் எனில், மாணவ, மாணவியரின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஒவ்வொரு கல்வி நிறுவனமும், 50 ஆயிரம் முதல், 1 லட்சம் ரூபாய் வரை கல்வி அலுவலர்களுக்கு லஞ்சம் வழங்கினால் மட்டுமே அனுமதி கிடைக்கிறது. பி.எட்., கல்லூரிகள் மூலம் மட்டுமே ஆண்டுக்கு, 15 லட்சம் ரூபாய்க்கும் மேல் கல்வித் துறை அலுவலர்களுக்கு, “பரிசாக’ கிடைக்கிறது.

இப்பயிற்சி பெறவில்லை எனில், மாணவ, மாணவியர் பல்கலைத் தேர்வுகளில் கலந்து கொள்ள முடியாது என்பதால், கல்வி அதிகாரிகளுக்கு வழங்கும் தொகையையும் சேர்த்து மாணவ, மாணவியரிடம் கல்லூரிகள் வசூலித்து விடுகின்றன. பள்ளிகளில் பயிற்சி எடுத்ததற்கான சான்றிதழில் தலைமை ஆசிரியர் கையெழுத்திடவும், 5,000 முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை தர வேண்டியுள்ளது. பயிற்சிக்கு வராமலேயே சான்றிதழ் பெற, அதற்கு தனி ரேட் நிர்ணயித்துள்ளனர்.தனியார் கல்லூரியில், பி.எட்., படிப்பின் ஒவ்வொரு அங்கமும், இப்படி பணத்தையே பிரதானமாகக் கொண்டுள்ளதால், இதில் உருவாகும் ஆசிரியர்களின் தரம் எப்படியிருக்கும் என சொல்ல வேண்டியதில்லை. இந்த முறைகேடுகளைத் தடுக்க முன் வருமா அரசு?

நன்றி: தினமலர்

Advertisements

தங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்..

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s