அறிவே ஒழுக்கமிழந்து தவிக்கிறதா!

[ பிறரது நல்லம்சங்களை அங்கீகரிக்காதவனும் தனது பலவீனங்கள், தவறுகளை ஒப்புக் கொள்ளாதவனும் தனது அறிவை மழுங்கச் செய்கிறான்; அறிவின் வாசலை மூடி விடுகிறான்.

அறிவு தன்னிடம் இருக்கிறது என்ற நினைப்போடு அறியாமை இருளில் மூழ்கிப் போகிறான். இத்தகைய அறிவுக் குருடர்களை அவர்களது மயக்கத்திலிருந்து விழிப்படையச் செய்வது சிரமமாகும்.

நேரிய, சீரிய அறிவு கொண்ட ஒரு மனிதனுக்கு நல்லம்சங்கள் யாரிடமிருந்தாலும் அவை நல்லம்சங்களாகவே தோன்றும். தவறு தன்னிடமிருந்தாலும் அது அவனுக்கு தவறாகவே தென்படும்.

அறிவு கெட்டுப்போன பின் எத்தனை முறை பார்த்தாலும் அந்தப் பார்வைகளுக்கு இந்த உண்மைகள் விளங்கப் போவதில்லை. ]

நற்குணங்கள். நல்லொழுக்கங்கள் இல்லாத கல்வி பயனற்றது என்று கூறுவார்கள். ”கல்வியோடு ஒழுக்கம் தேவை” என்ற கோட்பாட்டைவிட கல்விக்கு சில ஒழுக்கங்கள் தேவைப்படுகின்றன.

01. ஒரு விஷயத்தை விளங்கும்போது அல்லது பிறருக்கு விளக்கும்போது குறித்த விஷயம் தொடர்பான விளக்கம் ஒர் ”அமானிதம்” என்ற உணர்வு இருக்க வேண்டும். அந்த அமானிதத்தைப் பெறுவதிலும் கொடுப்பதிலும் மிகுந்த பொறுப்புணர்வு இருக்க வேண்டும். அரைகுறையாகவோ, ஆதாரமின்றியோ, விஷயத்தை பற்றிய பின்னணிகள் இல்லாத நிலையிலோ அதனைப் பேச முற்படலாகாது. இதுபற்றி அல்குர்ஆன் கூறுகையில்.

”உங்களிடம் ஒரு கெட்டவன் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் அதனை ஆதாரத்தோடு விளங்கிக் கொள்ளுங்கள். (அவ்வாறு செய்யாதபோது அந்த செய்தியை நம்பி) நீங்கள் ஒரு சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுதிவிட்டுப் பின்னர் நீங்கள் செய்த காரியத்திற்காகக் கவலைப்படுவீர்கள்.” (அல்ஹுஜுராத்: 49)

”நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் அறிவுடையோரிடம் கேட்டுப் பாருங்கள்” (அல்நஹல்: 43) என்றும்;

”சொல்வதை தெளிவாக சொல்லுங்கள்” (அல்ஸஜதா: 70) என்றும்;

”உமக்கு அறிவு இல்லாத ஒரு விஷயத்தை நீர் பின்தொடராதீர். நிச்சயமாக கேள்வி, பார்வை, உள்ளம் என்பன விசாரணைக்குட்படுத்தப்படும்” (பனூஇஸ்ராயீல்: 36) என்றும் அல்குர்ஆன் பலவாறாகப் பேசுகின்றது.

ஈராக்கில் நாசகார ஆயுதங்கள் இருக்கின்றன என்ற செய்தியை நம்பி ஈராக் மக்களுக்கு அமெரிக்கா இழைத்த கொடுமைகள் முதல், ”ஒரு சகோதரன் தன்னைப் பற்றிக் குறை கூறினான்” என்ற செய்தியை நம்பி அவனுக்கு ”ஸலாம்” கூறாமல் இருப்பது வரையிலான அத்தனை அறிவுகெட்ட தீர்மானங்களும் அறிவுக்கு இழைக்கப்படும் அநீதிகளே!

ஒரு நபிமொழியை யாராவது கூறினால் அது எந்தக் கிரந்தத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது என்று ஆதாரம் கேட்பதுபோல எந்த ஒரு செய்தியாயினும் அதனை ஆதாரத்தோடு அறிந்து கொள்வதும் பேசுவதும் அறிவில் பேணவேண்டிய அமானிதங்களாகும்.

இந்த அமானிதத்தை ”தாஇகள்” பேணாதபோது அவர்கள் சமூகத்தை பிழையான திசைகளில் வழிநடத்துவார்கள்; நடத்திக் கொண்டும் இருக்கிறார்கள். இதனை நாம் இன்று வெளிப்படையாகவே பார்க்கிறோம்.

02. அறிவோடு இணைந்திருக்க வேண்டிய அடுத்த பண்பொழுக்கம் ஆதாரப்பூர்வமாக ஒரு விஷயத்தை விளங்கிவிட்டால் அதனை ஏற்று, அங்கீகரித்து அதற்கேற்ப தனது நடத்தைகளை மாற்றியமைத்துக் கொள்வதாகும். அல்லாஹ் அதனை பின் வருமாறு கூறுகிறான்:

”அவர்கள் சொல்வதைக் கேட்டு சிறந்ததைப் பின்பற்றுவார்கள். அவர்களுக்கு அல்லாஹ் வழிகாட்டிவிட்டான். அவர்களே அறிவுள்ளவர்களாவார்கள்.” (அஸ்ஸுமர்:18)

பிறர் சொல்வதையெல்லாம் செவிமடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் சிலபோது ஏற்பட்டாலும் அவற்றில் சிறந்ததை, ஆதாரபூர்வமானதை ஏற்று, ஏனையவற்றைப் புறந்தள்ளி, நல்லனவற்றின் அடிப்படையில் செயற்படுகின்றவர்களை அல்லாஹ் பாராட்டுகிறான். இது அறிவுடையோரின் பண்பு என்றும் இந்த வசனம் கூறுகின்றது. இன்று இந்தப் பண்பு மிகவும் அரிதாக இருப்பதையே பார்க்கிறோம். இன்று கேட்பதைக் கேட்டு, வேண்டாதவற்றைப் புறந்தள்ளுவது எப்படிப் போனாலும் கேட்காதவற்றையும் கேட்டதாகக் கூறும் ஷைத்தானியப் பண்புகளல்லவா மலிந்து கிடக்கின்றன!

ஒரு மனிதனுக்கோ அல்லது ஒரு குழுவுக்கோ எதிராக முன்வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களோடு பதில் கூறப்பட்ட பின்னரும், அவற்றை நன்கு செவிமடுத்தவர்கள் மீண்டும் மீண்டும் அதே குற்றச்சாட்டை முன்வைத்துப் பிரசாரம் செய்யும் கீழ்த்தரமான பண்பு இன்றைய தஃவாக் களத்தில் ஆதிக்கம் செலுத்துவதைப் பார்க்க வேதனையாக இருக்கிறது. அறிவே பண்பிழந்து போன கதைதான் இது.

அறிவோடு சார்ந்த ஒழுக்கம், இத்தகைய பண்பை இயல்பிலேயே வெறுக்கிறது. அவ்வாறிருக்க, இந்தப் பண்பு தஃவாவில் ஆதிக்கம் செலுத்தினால் சத்தியத்திற்கு சான்றுபகர வேண்டியவர்கள் சத்தியத்தைக் கொலை செய்கின்றவர்களாகவல்லவா மாறுவார்கள்?

03. அறிவோடு இணைந்திருக்க வேண்டிய மற்றொரு பண்பு, பிறரிடம் இருக்கின்ற நல்லம்சங்களைத் தெரிந்து கொண்டால் அவற்றை அங்கீகரிப்பதும் தங்களிடம் இருக்கின்ற குறைகள் தெரிய வந்தால் அவற்றை ஒப்புக் கொள்வதுமாகும்.

எனினும், இந்தப் பண்பு தலைகீழாக மாறி இருப்பதனையே களம் சுட்டிக்காட்டுகிறது. பிறரிடம் இருக்கின்ற நல்லம்சம் அவர்களது பலவீனமாகவும்; தங்களிடம் இருக்கின்ற குறை அல்லது தவறு ஒர் உயர்ந்த பண்பு என்றும் நோக்கப்படுகின்ற நிலையை என்னவென்று கூறலாம்?!

உதாரணமாக, அடுத்த மனிதர்களை மதிக்கும் பண்பு ஒரு சிலரிடம் இருக்கிறது. அதனைக் ”கோழைத்தனம்” என்று கருதும் சிலர், தங்களிடம் இருக்கும் ”பிறரை மதிக்காமை” என்ற பண்பை ”வீரம்” எனக் கருதுகின்றார்கள்.

அதேபோன்று பிறரிடமிருக்கும் ”விட்டுக்கொடுத்தல்” என்ற பண்பை அவர்களது பலவீனம் எனக் கருதுவோர், தங்களிடம் இருக்கும் ”பிடிவாதத்தை” ”உறுதி” என்று கருதுகிறார்கள்.

பிறரிடமிருக்கும் ”அமைதியான பேச்சை” நயவஞ்சகம் அல்லது ”முகஸ்துதி” என்று கருதுபவர்கள் தங்களிடம் இருக்கும் வீறாப்புப் பேச்சை ”சத்திய முழக்கம்” என்று கருதுகின்றனர்.

பிறர் ஒர் அறிஞரது கருத்தைக் கூறினால் அது ”கண்மூடித்தனம்” என்று கூறுவோர், தாம் ஒர் அறிஞரது விளக்கத்தைக் கூறினால் அது ”குர்ஆனும் ஸுன்னாவும்” என்கிறார்கள்.

பிறர் எழுந்து நிற்பதைப் ”பகட்டு” என்று கருதுவோர், தாங்கள் வீழ்ந்திருப்பதை ”தியாகம்” என்று நினைக்கின்றனர். பிறரின் ”வெளிப்படைத் தன்மை”யை ஏமாளித்தனம் எனக் கருதுபவகள், தங்களின் ”தந்திரபுத்தி”யை தாங்கள் பெற்ற உளப் பண்பாட்டுப் பயிற்ச்சி எனக் கருதுகிறார்கள். பிறர் செய்யும் பொதுப் பணிகளை ”விரயம்” என்று நினைக்கின்றவர்கள் பிறருக்கு கிடைக்காமல் தடுப்பதையும் தங்களது கட்சிக்குள் முடக்கிவைத்து தாங்கள் மாத்திரம் பயன்பெருவதையும் ”சீர்திருத்தப்பணி” எனக் கருதுகின்றனர்.

பிறரின் அறிவு சார்ந்த பேச்சை ”வேதாந்தம்” எனக் கூறுகின்றவர்கள், தங்களது அறிவு வாசமே இல்லாத பேச்சை ”இதயத்தோடு பேசுகிறோம்” என்கின்றனர். பிறரது சமூக மாற்றக் கருத்துக்களையும் செயற்திட்டங்களையும் லெளகீகம் என்று கருதுகின்றவர்கள் தங்களது ”யார்ஆண்டால் என்ன?” என்ற போக்கை ஆன்மீகம் என்று கூறுகின்றனர்.

உண்மையில் அறிவு கிடைத்த பின்னர் பண்புகள் இல்லாமல் போய்விட்டன என்பதல்ல இதன் பொருள். அறிவே தனது பண்பாட்டை இழந்து தவிக்கிறது என்பதுதான் இந்த அவலத்தின் அர்த்தமாகும்.

பிறரது நல்லம்சங்களை அங்கீகரிக்காதவனும் தனது பலவீனங்கள், தவறுகளை ஒப்புக் கொள்ளாதவனும் தனது அறிவை மழுங்கச் செய்கிறான்; அறிவின் வாசலை மூடி விடுகிறான். அறிவு தன்னிடம் இருக்கிறது என்ற நினைப்போடு அறியாமை இருளில் மூழ்கிப் போகிறான். இத்தகைய அறிவுக் குருடர்களை அவர்களது மயக்கத்திலிருந்து விழிப்படையச் செய்வது சிரமமாகும். நேரிய, சீரிய அறிவு கொண்ட ஒரு மனிதனுக்கு நல்லம்சங்கள் யாரிடமிருந்தாலும் அவை நல்லம்சங்களாகவே தோன்றும். தவறு தன்னிடமிருந்தாலும் அது அவனுக்கு தவறாகவே தென்படும். அறிவு கெட்டுப்போன பின் எத்தனை முறை பார்த்தாலும் அந்தப் பார்வைகளுக்கு இந்த உண்மைகள் விளங்கப் போவதில்லை.

04. அறிவுடன் சார்ந்திருக்க வேண்டிய மற்றுமொரு பண்பு, கண்மூடித்தனமான பின்பற்றுதலுக்கும், தான் கூறுகின்ற கருத்தில் வெறித்தனம் கலந்து விடுவதற்கும் இடம் தராதிருத்தலாகும்.

வெறித்தனம் கொண்டவர்களைத் தவிர உலகில் வாழ்ந்த அனைத்து அறிஞர்களும் ஆலிம்களும் தங்களது கருத்துக்களைப் போலவே பிறர் கருத்துக்களையும் மதித்திருக்கிறார்கள். அதன் பொருள் அவர்கள் தங்களது கருத்தில் உறுதியாக் இருக்கவில்லை என்பதல்ல. எனினும், இன்றைய சமூகத்தில் அதிலும் தாவாக் களத்தில் காணப்படுகின்ற கருத்து வெறிகள் காரணமாக எது ”வெறி” எது ”உறுதி” என்பதை வேறுபடுத்திப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.

ஒருவர் தான் கொண்ட கருத்தை தனது வாழ்வில் கண்டிப்பாக கடைபிடிக்கிறார் என்பது பொருளாகும். அவர் தான் கொண்ட கருத்தை பிறரிடம் திணிக்க முற்படுகிறார் எனில், அவரிடம் ”கருத்து வெறி” இருக்கிறது என்ற பொருளாகும்.

ஒருவர் தனது கருத்தை அறிவுபூர்வமாக் ஆதாரங்களுடன் விளக்கினால் அறிவுள்ளவர்கள் அதனை விளங்கி ஏற்றுக் கொள்வார்கள். திணிக்க முயல்வதற்குக் காரணம், தனது கருத்தில் இருக்கும் அறியாமையும் கண்மூடித்தனமும் வெளிப்பட்டு மக்களது அறிவுக்கு அவை வெளிச்சமாவதற்கு முன்னால் எப்படியாவது தனது கருத்தை பிறரது சிந்தனைக்குள் செலுத்திவிட வேண்டும் என்ற அவசரம்தான்.

எனவே வெறித்தனத்தோடு கண்மூடித்தனமும் எப்போதும் இணைந்திருக்கும். கண்மூடித்தனமாக ஒன்றை ஏற்றுக் கொண்டவர்கள்தாம் வெறித்தனமாக பிறரிடம் திணிக்க முயல்வார்கள். அறிவுபூர்வமாக ஒன்றை ஏற்றுக் கொண்டவர்கள் வெறித்தனமாக் அதனை பிறரிடம் திணிக்க முற்பட மாட்டார்கள். அவர்கள் அமைதியாக் அறிவுபூர்வமாகவே அதனை பிறரிடம் ஒப்புவிப்பார்கள்.

எனவே, அவர்களுக்கு பிறரை சாடவேண்டிய, விமர்சிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படாது. பிறர் மீது வெறுப்புக் கொண்டு, அவதூறு பேசி, பழிசுமத்தி, சந்தேகங்கள் கிளப்பி, குற்றச்சாட்டுக்கள் முன்வைத்து, தந்திரங்கள் கையாண்டு, இரகசியம் ஒன்றாகவும், பரகசியம் வேறொன்றாகவும் நடந்து மக்கள் மத்தியில் கருத்தைப் பரப்பும் தேவை அவர்களுக்கிருக்க மாட்டாது.

காரணம் அவர்கள் அறிவுபூர்வமாகவும் ஆதாரபூர்வமாகவும் ஒன்றை விளங்கியிருக்கிறார்கள். அதே பாணியில் அவர்கள் அமைதியாக அதனைப் பிறருக்கு விளக்குவார்கள், அப்போது கருத்து வாழ்வு பெறுகிறது. அறிவு போற்றப்படுகிறது.

மாறாக வெறித்தனம் வெளிப்படும்போது அறிவு அசிங்கப்படுகிறது. கருத்து அஜிரணமாகிறது. பேச்சு விகாரமடைகிறது. மொத்தத்தில் பேசியவரிடமும் கேட்டவரிடமும் இஸ்லாம் உயிரிழ்ந்து போகிறது. வெறித்தனங்கள் இஸ்லாத்தின் பெயரால் வாழ ஆரம்பிக்கின்றன. அதனால் இஸ்லாம் கொச்சைப்படுத்தப்படுகிறது.

அறிவே ஒழுக்கமிழந்து போனதன் விளைவுகள்தாம் இவை. இவை மட்டுமல்ல, இன்னுமிருக்கின்றன. அறிவுள்ளவர்களுக்கு அந்த அவலங்கள் தென்படாமல் இருக்க மாட்டாது. அறிவு தம்மிடம் இருப்பதாக நினைப்பவர்களே அந்த அவலங்களை தங்களது சிறு சாகசத்தின் விளைவுகளாகவே பார்ப்பர். அப்போது வெளிச்சம் தரவேண்டிய அறிவு மங்கி மாசடைந்து போகிறது. வெளிச்சத்தின் வீடாக இருள் மாறுகிறது.

– உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜீல் அக்பர் – அல் ஹஸனாத் – nidur.info

Advertisements

தங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்..

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s