நாளைக்கு நீ உயிரோடு இருப்பியா..?

சகோதரர் முஹம்மத் ஆஷிக் தன்னுடைய தளத்தில் அழுதிய அற்புதமான பதிவு நம்முடய பார்வைக்காக..

முன் கதைச்சுருக்கம் : நான் அப்போது தூத்துக்குடியில்உள்ள ஒரு தனியார் உரத்தொழிற்சாலையில் பணியாற்றிக்கொண்டு இருந்தேன். அங்கே, அடுத்த மாத சம்பளத்தை இம்மாதமே சேர்த்து எடுத்துக்கொள்ளும், pay advance என்ற ஒரு வசதி இருந்தது. ஒரே நாளில் கையில் இரண்டு மாத சம்பளம்..! பின்னர், அடுத்த மாத சம்பளத்தில் இருந்து மாதாமாதம் ஒரு சிறுதொகை நம் வசதிப்படி பிடித்துக்கொள்வார்கள். அது முடிந்து விட்டால் மீண்டும் pay advance எடுப்போம். இதற்கு வட்டி கிடையாது.
மற்ற வாகனக்கடன், வீட்டுக்கடன் இவற்றுக்கெல்லாம் குறைந்த அளவில் வட்டி உண்டு. வட்டி என்பதால் நான் இவற்றை வாங்கியதில்லை. வட்டி இல்லாத கடன் என்பதால் pay advance-ஐ நான் இரண்டு முறை எடுத்திருக்கிறேன்.

1 – என்னுடன் சேர்ந்த என் பேட்ச் ஊழியர்கள் ஏறக்குறைய எல்லாருமே ஒரு கையில் appointment order மறுகையில் vehicle loan என்று வாங்கி புது பைக்கில் ஊரை கலக்கிக்கொண்டு இருக்க… நான் மட்டும் அப்போது இன்னும் என் ஓட்டை சைக்கிளில்… ம்ம்ம்… மாதாமாதம் சிறிது சிறிதாக சேமித்த தொகையில் அதீத ஆவல் கொண்டு விரைவாக பைக் வாங்க வேண்டும் என்று, எட்டாவது மாதம் முதல் முறையாக pay advance எடுத்தேன்..! அப்போதைய அறிமுகமான, 1999-YAMAHA-YBX பைக் வாங்கினேன்.

2 – பின்னர், சில வருடங்கள் கழித்து, அன்றைய முதல்வர் ஜெயலலிதாவால் அரசு ஊழியர்களுக்கு பல மாதங்கள் வெட்டி வீம்புக்கு அக்கிரமமாக ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்பட்டபோது… (இந்த காயம் இன்னும் பலருக்கு ஆறவில்லை… பின்னே, அரசு ஊழியர்கள் ஜெ.க்கு ஏன் ஓட்டளிப்பதில்லை என்பதற்குறிய பல காரணங்களில் இதுவும் ஒன்று…) வீட்டு செலவுக்காக தேவைப்பட்டபோது மற்றொரு முறை pay advance எடுத்தேன்..!

3 – அதன் பிறகு, அப்போது மூன்றாவது முறை… pay advance எடுக்க வேண்டி இருந்தது. காரணம் ஒரு Sony DVD பிளேயர் வாங்க வேண்டும்..!

‘முன் கதைச்சுருக்கம்’ முடிந்தது..!

இனி பதிவிற்கான சம்பவம் : அன்று……….. ஒருநாள் நைட் ஷிஃப்ட்……!

உரத்தொழிற்சாலையின் Time office-ல் card punching பண்ணிவிட்டு, pay advance படிவத்தை மறக்காமல் வாங்கிக்கொண்டு, அதை கூடவே எடுத்துச்சென்ற ஒரு நூலக புத்தகத்தில் பத்திரமாக வைத்துக்கொண்டு பணிக்கு விரைந்தேன். என் area operator-ஐ relieve செய்து விட்டு area charge எடுத்துக்கொண்ட பின்னர் முதல் வேலையாக… (log report படிப்பதெல்லாம் அப்புறம்தாங்க…) கொண்டுவந்த pay advance படிவத்தை பொறுமையாக பிழையின்றி அழகாக நிரப்பி கையொப்பமிட்டேன். மறுநாள் மறக்காமல், finance department-ல் சேர்ப்பிக்க வேண்டி, பத்திரமாக வைத்துவிட்டு… பின்னர் area round-up, equipment checking, reading எல்லாம் போட்டுவிட்டு… ம்ம்ம்… இனி, கொண்டு போன புத்தகத்தை திறந்து படிக்க வேண்டியதுதான்..!

பொதுவாக இரவுப்பணியில் புத்தகம்தான் நம் உற்ற நண்பன்..! அன்று எடுத்துப்போன நூலக புத்தகம்… இஸ்லாமிய கலீஃபாக்கள் வரலாறு..!

அதில், கலீஃபா உமர்(ரலி) அவர்களைப்பற்றி படிக்க ஆரம்பித்தேன்..! அவர் அப்போது, முழு பாரசீக பேரரசுப்பகுதி, எகிப்து, பாலஸ்தீனம், சிரியா, வட ஆபிரிக்க பகுதி, ஆர்மீனியா மற்றும் ரோமப்பேரரசின் ஒரு சிறு பகுதி என்று அப்போது மிகப்பெரிய இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் அதிபராக இருந்தார்.

இருந்தும்…, மிகவும் எளிமையாக தன்னுடைய, (சேனம் கட்டினால் சொகுசாகிவிடுமே என்று வெறும்) கழுதை மீது சவாரி செய்வதும், இரவில் ஒவ்வோர் தெருவாக சென்று மக்கள் குறைகளை காணுவதும், அதில் ஒரு பால்காரம்மா வீட்டில், மிக வறுமையாக இருந்தும் பாலில் தண்ணீர் கலக்குமாறு தாய் சொல்ல, அந்த மகள்… ‘கலீஃபா பார்க்காவிட்டால் என்ன அல்லாஹ் பார்த்துக்கொண்டு இருக்கிறானே’ என்று நேர்மையாக அந்த பாவத்தை மறுக்க, இந்த இளம்பெண் பின்னர் தன் இறைஅச்சத்திற்கு பரிசாக கலீஃபா உமர்(ரலி)-ன் மருமகள் ஆனார் என்பதும்… “பாரசீக யூப்ரடீஸ் நதிக்கரையில் ஒரு நாய் உணவில்லாமல் செத்துக்கிடந்தாலும், உமர் சரியாக ஆட்சி புரியவில்லை என்று அர்த்தம்”–என்று சூளுரையிட்டு அவ்வளவு நேர்மையாக யாருக்காகவும் வளையாத வாளுடன் நல்லாட்சி புரிந்தார் எனவும், இன்னும் பலவும் படித்தேன். ஆனால்… அதற்குப்பிறகுதான்… ஒரு சம்பவம்….! இந்த பதிவிற்கான சம்பவம்..! என்னை உலுக்கியது..!

கலீஃபா உமர்(ரலி)-யின் மகன் ஒரு பாடசாலையில் படிக்க அவரின் கிழிந்த நைந்த பலமுறை ஒட்டுப்போட்ட சட்டை மேலும் கிழிந்து தொங்க, அவரின் சக மாணவர்கள்… ” ஹே… இங்கே பாரப்பா… கலீஃபாவின் மகனின் சட்டையை…! இது சட்டையா…? இல்லை சல்லடையா…?” –என்பது போல கிண்டல் கேலி பண்ண… அவமானம் தாங்காத மகன், தன் தந்தை உமர்(ரலி) அவர்களிடம் வந்து… ” இனி புது சட்டை வாங்கித்தந்தால்தால் பள்ளிக்கு செல்வேன் ” –என அடம்பிடிக்க… அந்த சாம்ராஜ்ஜிய சக்ரவர்த்தியிடமோ மகனுக்கு ஒரு புது சட்டை வாங்கக்கூட பைசா இல்லை..! மகனிடம் தன்னுடைய பல சமாளிப்புகளும் பலன் தராமல் போகவே… இறுதியாக… அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.

பிறரிடம் கடன் கேட்பதிலிருந்தும் தன்னை தேவையற்றவனாக்கி பாதுகாக்குமாறு தினம் ஐவேளை தொழுகையில் இறைவனிடம் துவா கேட்டவர்களாய் கடன் கேட்பதை தவிர்த்திருந்தனர் நபித்தோழர்கள். அதனால், ‘கடன் கேட்பதற்கு பதிலாக, தன் உரிமையை கேட்கலாமே’ என்று எண்ணியவராய், கலிஃபா உமர்(ரலி), நேரே கருவூல அதிகாரியிடம் (அவரின் finance minister..!) செல்கிறார். தனக்குரிய–கலிஃபா என்ற ஊழியத்திற்கு உரிய– அடுத்த மாத சம்பளத்தை மாத இறுதிக்கு பதில் அன்றே தருமாறு கேட்கிறார்..!

கருவூல அதிகாரி யார்..? அமீருல் மூமினீன் உமர் ஃபாரூக் (ரலி) அவர்களின் நேர்முகத்தேர்வு அல்லவா…? விடுவாரா அவர்..? “ ஓ..! கலிஃபா அவர்களே, அடுத்த மாதம் முடிய நீங்கள் தான் கலிஃபாவாக இருப்பீர்கள் என்பதற்கும், உங்கள் உயிருக்கும் அல்லாஹ் உத்தரவாதம் அளித்து விட்டானா..? ஆகையால் உங்களுக்கான சம்பளத்தை இப்போது என்னால் கொடுக்க முடியாது..! ” –என்று ஒரே போடாக போடுகிறார்…!

உடனே, அதிர்ச்சி அடைந்து நிலைகுலைந்து போன, கலிஃபா உமர்(ரலி) அவர்கள் தன் கருவூல அதிகாரியை கட்டித்தழுவி, ” சகோதரரே..! அடுத்த நொடி என் உயிர் என் உடலில் இருப்பதும், இல்லாது போவதும் அல்லாஹ் வசம்..! அவ்வாறிருக்க, எவ்வளவு பெரிய தவறை செய்யத்துணிந்து விட்டேன் நான்..! நாளை இந்த உமர் இறுதித்தீர்ப்பு நாளில், உலக மக்கள் எல்லாம் பார்க்கையில், அல்லாஹ்வின் கேள்விக்கு பதிலில்லாமல் ஒரு கேவலப்பட்ட கடனாளியாக கூனிக்குறுகி அசிங்கப்பட்டு அவன் முன்னே நிற்பதை விட்டும் அந்த கருணையாளன் உங்கள் மூலம் என்னை பாதுகாத்து விட்டான்..! அல்ஹம்துலில்லாஹ்..! தக்க சமயத்தில் என்னை ஒரு பாவத்திலிருந்து உங்களின் உயர்ந்த இறையச்சம் மூலம் காப்பாற்றினீர்கள்..! மிக்க நன்றி..! இறைவன் தங்களுக்கு அருள்புரிவானாக..!” –என்று அழுது கொண்டே நன்றி தெரிவித்துவிட்டு திரும்புகிறார்கள்..!

இதை படித்ததும், நானும்தான் நிலை குலைந்தேன்..! துக்கம் என் தொண்டையை அடைத்தது. கண்களிலிருந்து மாலை மாலையாய் கண்ணீர் வழிந்தோடியது. என்னை அறியாமல் அழுதே விட்டேன்..! இப்படியும் ஒரு எளிய பேரரசர் ஒரு மனிதராக வாழ்ந்திருக்கிறாரே..? அவருக்கு கீழே பணிபுரியும் ஒருத்தர் ஜால்ராவாக இல்லாமல் கலீஃபாவையே எதிர்கேள்வி கேட்பதும், அவரின் தவறை சுட்டி உணர்த்துவதும்… என்னவொரு அழகிய அரசாட்சி…!?

‘ஹே ராம்… ஹே ராம்…’ என்று அனுதினமும் முனகும் மகாத்மா காந்தியடிகள் கூட, ராம ராஜ்ஜியம் வேண்டுவோரிடம், நம் நாட்டிற்கு உமர் போல ஒரு ஆட்சியாளர் வாய்க்க வேண்டும் என்றல்லாவா கூறினார்..!

சரி… இதை விடுங்க… சகோ…! கலீஃபா உமர்(ரலி) தன் கருவூல அதிகாரியிடம் கேட்டது என்ன..? சிம்பிள்… அதாவது… after-all… just அடுத்த மாத pay advance தானே..!!!

இப்போது…. “உனக்கு DVD முக்கியமாடா..? இல்லை, மறுமை முக்கியமாடா..? முதலில், நாளைக்கு நீ உயிரோடு இருப்பியாடா..? என்னடா கியாரண்டி..? அதற்குள்ளே, அடுத்த மாச சம்பளத்தை இப்போதே கேட்கிறானாம்..!”—என்று என் மனசாட்சி என்னிடம் கேட்டுக்கொண்டு இருக்கும் போதே… என் கைகள் தானாகவே… அந்த pay advance application form-ஐ கிழித்து குப்பைத்தொட்டியில் வீசிக்கொண்டு இருந்தன..!

சில முக்கியகுறிப்புகள் :-

பெயர்தான் pay advance என்றாலும், அது இஸ்லாமிய முறையிலான (self signed application form என்ற…) கடன் பத்திரம் எழுதி ஒரு வட்டியில்லா தவணை முறையில் திருப்பி செலுத்தும் பொருட்டு கடன் பெறுவது போலத்தான். உமர்(ரலி) கேட்டது போல actual pay advance இல்லைதான். வாங்கலாம்தான்.

எனினும், அத்தியாவசிய தேவை அல்லாத… போயும் போயும்… ஒரு அற்ப DVD-க்காகவா கடன் வாங்கி கடனாளியாக இறப்பது..?

அப்புறம், “இறைவா..! கடனைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்..!” என்று தினம் ஐவேளை தொழுகை-கடைசி இருப்பில் பிரார்த்தனை பண்ணுவதற்கு என்ன அர்த்தம்..?

பெற்றோர் இறந்தால் மகனுக்கு அல்லது அவரின் நெருங்கிய உறவினருக்கு இறந்தவரின் கடனை அடைப்பதுதானே இஸ்லாத்தில் தலையாய பொறுப்பு..?

அப்படி கடனை அடைக்க யாரும் முன்வரவில்லை எனில், அவருக்கான இறுதி ஜனாஸா தொழுகை கூட நபி(ஸல்) அவர்கள் நடத்த மறுத்து விடுவார்களே..!

இணைவைக்காத நிலையில், இஸ்லாத்தில் உச்ச அந்தஸ்தை பெறுபவரான ஒரு ஷஹீதுக்கு அவரின் கடனைத்தவிர அல்லவா மற்ற அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன..?

அழகிய முறையில் தேவையுடையோருக்கு வட்டியின்றி கடன்கொடுக்க சொல்லும் இஸ்லாம், கடன் வாங்குவதை வெறுக்கவும் சொல்கிறது..!

“தர்மம் செய்..! யாசிக்காதே..!” என்று எனது முந்தைய ‘தர்மம்’ பற்றிய பதிவுகளில் இஸ்லாம் எடுத்த அதே நடுநிலை தான், இங்கே கடனிலும்..!

இஸ்லாம்…! இடது சார்பாகவும் போகாது…! வலது சார்பாகவும் போகாது…! இரண்டுக்கும் நடுவில் சம நீதியுடன் ராஜநடை போடும்…!    -pinnoottavaathi

Advertisements

One thought on “நாளைக்கு நீ உயிரோடு இருப்பியா..?

  1. shaik June 18, 2013 / 12:28 pm

    what to say about our present stand. we are nothing . ulahayadha sindhaniyil moolhi veliye varamal
    varamudiyamal thavitthukkondu therithe narahatthukku thayarahikkondu irukkirome nammai
    vida kaisedhappadubavarhal yarah irukkamudiyum.
    allah can only forgive us

தங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்..

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s