போதைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்..!

போதை என்பதை குடிப்பழக்கத்தோடு மட்டும் நாம் சம்பந்தப்படுத்தி மிகையாக பார்ப்பதற்கு நமது வாழ்க்கை முறை நமக்கு போதித்திருக்கிறது. நாமறியாத எவ்வளவோ விசயங்களில் நமக்குத் தெரியாமலேயே நாம் போதைக்குட்பட்டு அடிமையாகிக் கிடப்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்..?

வாழ்க்கை சுழற்சியில் அறியாமல் நம்மை அழிக்கும் போதைகளைப் பற்றி எடுத்தியம்பும் இக்கட்டுரையை வாசியுங்கள் விபரமறிவீர்கள்.

வெகு நாள் கழித்து, அவரை சந்தித்தேன். “அண்ணே, எப்படி இருக்கீங்க. இப்போ நல்லா கண் பார்வை தெரியுதா” என்று கேட்டேன். “பரவாயில்லே” என்றார் கண்களை குறுக்கி பார்த்தப்படி. உண்மையிலேயே, அவர் அவ்விதம் பார்ப்பது மனதை பிசைவதாகவும், மிக மிக வருத்தமாகவும் இருந்தது. எல்லாமே நாமே தேடி கொள்கிற சிக்கல்கள் தான். நாற்பதை கூட அவர் தொடவில்லை. சுயதொழிலில் நிறைய சம்பாதித்தார். நிறைய மது அருந்தினார். “என்னை போல ஒருத்தனாலும் குடிக்க முடியாது” என்பது போல் குடிப்பார்.

குடிக்கு முழுமையாக அடிமையானார். அவருக்கு சர்க்கரை நோயும் இருந்தது. விளைவு. கண் பார்வையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருந்தார். உடனடியாக சித்த மருத்துவத்தை நாடினார். பல வித சிகிச்சைக்கு பிறகு மெல்ல, மெல்ல பார்வை இழப்பு தடுக்கப்பட்டது. போதைக்கு அடிமையானதன் விளைவு, அவர் மிக பெரிய அனர்த்தங்களை எல்லாம் சந்திக்க நேர்ந்தது.

இன்னுமொரு நண்பர் இருக்கிறார். லட்சாதிபதி கனவில், லாட்டரி சீட்டாக வாங்கி குவிக்கிறார். லாட்டரி சீட்டு தடை செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டாலும், அவருக்கு லாட்டரி சீட்டு கிடைப்பதில் எந்த தடையும் இல்லை. எப்போதோ கிடைக்கும் ஆயிரம் ரூபாய் பணத்திற்காக – அன்றாடம் ஐம்பது, நூறு இழக்கிறார்.

தெரிந்தோ, தெரியாமலோ பெரும்பாலோனோர் ஏதேனும் ஒரு பழக்கத்திற்கு அடிமையாகி விடுகின்றனர். அதிலிருந்து மீளவும் முடியாமல் தவிக்கின்றனர். “நீங்கள் எதற்கு அடிமை” என்ற கேள்வியுடன் யூத்புல் விகடனில் வந்த ஒரு கட்டுரையை வாசித்தேன். அதை வாசித்த பாதிப்பிலும், அனுபவம் தந்த பாதிப்பிலும் இந்த பதிவை எழுதுகிறேன்.

இன்றைய சூழலில் எதற்கும் அடிமையாகாமல் வாழுதல் என்பது மிக, மிக கஷ்டமோ என்று தோன்றுகிறது. அதீத பக்தி கூட ஒரு வித போதை, அது கூட ஒருவனது வாழ்வுக்கு, வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்க கூடும் என்று சொல்லலாம். யோசிக்கையில் அது உண்மையானதாகவும் இருக்கலாம் என்றே தோன்றுகிறது. மொபைல், கணிப்பொறி, தொலைக்காட்சி என்று நம்மால் கையாளப்படும் பொருட்களே, ஒரு கட்டத்தில் எஜமானனாகி அவை – நம்மை அடிமைகளாக்கி விடுகின்றன.

ஒரு சமயத்தில், தினசரி சினிமா பார்க்க வேண்டும் என்கிற உந்துதல் பலருக்கு போதையாக இருந்தது. அன்று சினிமா என்கிற ஒரே ஒரு பொழுதுபோக்கு போதை. இன்று பல பொழுதுபோக்கு போதை. பலர் இறைச்சி உணவுக்கு அடிமைகளாகி விடுகிறார்கள். தினசரி உணவில் இறைச்சி இல்லை என்றால் எதையோ இழந்தது போல் ஆகி விடுவார்கள். எப்போதும் அழகான, ஆடம்பரமான உடை உடுத்தி கொள்ள வேண்டும் என்பது கூட ஒரு பழக்க போதை.

கண்ணுக்கு தெரிந்து, மனிதர்களை அடிமைப்படுத்தும் பழக்கம் சிலவென்றால், கண்ணுக்கு புலப்படாத பல பழக்கத்திற்கு நாம் அடிமைகளாக தான் இருக்கிறோம். நவீன உலகம், புதிய புதிய வசதிகளை தருவதோடு நில்லாமல், புது விதமான போதைகளையும் மனிதனுக்கு தந்து, அவனை ஏதாவது ஒன்றுக்கு அடிமைப்படுத்துவதில் முனைப்பாய் உள்ளன என்றால் மிகையில்லை. நாம் பொழுதுபோக்குக்கு அடிமையாகி கொண்டிருக்கிறோம்… நம் குழந்தைகள் இந்த விஷயத்தில் – நாம் எட்டடி பாய்ந்தால் அவர்கள் பதினாறடி பாய்கிறார்கள்.

எனது நண்பரின் மனைவி, தன் குழந்தைக்கு டி.வி பார்த்தப்படியே பாடம் சொல்லி கொடுப்பாராம். அவர் டி.விக்கு அடிமை. அப்படி இருக்கையில் குழந்தைக்கு நல்லது, கெட்டது சொல்லும் தகுதியையே நாம் இழந்து விடுகிறோமே. எப்படி அடிமைகள், சுயமாக சிந்திக்காதவரை அடிமைத்தனத்திலிருந்து மீள முடியாதோ, அதே போல் போதை அடிமைகளுக்கும் பொருந்தும்.

நம் பழக்கங்களை இரண்டு விதமாக பார்க்கலாம். ஒன்று, பிறரை பாதிக்காத நம் பழக்க வழக்கங்கள். நம்மை மட்டுமே பலவீனப்படுத்தக் கூடியவை. மற்றது. நம்மோடு சேர்ந்து பிறரையும். குடியை போன்ற சில பழக்கங்கள், சம்பந்தப்பட்டவரை தாண்டி அவரை சார்ந்துள்ளவரை யும் பலவீனப்படுத்துகின்றன. இம் மாதிரியான பல அம்சங்கள் நிம்மதியை தொலைக்க காரணமாகின்றன.

எந்த பழக்கங்களாலும்- செலவும், நிம்மதியும் போகாத வரை பிரச்சனை இல்லை. ஒரு பழக்கம் நம்மை நான்கு படி மேலேற்றும் என்றால், அப்பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதில் தவறில்லை. அதே நேரம், அந்த பழக்கம் குப்புற தள்ளும் என்றால், குறைந்த பட்ச இழப்புகளுடனாவது வெளியே வந்து விடுவது தானே நல்லது.

கழுகு 

Advertisements

தங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்..

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s