பதிமூன்று வருட (பாலை) வன வாசத்துக்குப் பின்….

அரபுநாட்டு வேலை என்னும் மாயைக்குப் பதிமூன்று வருடங்களைப் பலி கொடுத்த அப்பாவியின் (உண்மைக்) கதை.

தமிழர் தான் அவர். சுப்ரமணியம் என்று பெயர். 38 வயதில் வாயைக் கட்டி வயித்தைக் கட்டி விசாவுக்குப் பணமும் கட்டினார். அது ஃப்ரீ விசா எனப்படும் திறந்த வேலைவாய்ப்பை வழங்கும் விசா. அரபுநாட்டில் இறங்கியதும், அரசாங்க சம்பிரதாயங்களை மட்டும் விசா கொடுத்தவர் முடித்துக் கொடுப்பார். எங்கும், எவ்வித வேலையும் தேடிக்கொள்ளலாம் என்பது இதன் வசதி. ஆனால், மாதந்தோறும் ஒரு தொகை கப்பம் கட்டியாக வேண்டும் – விசா கொடுத்த அரபியருக்கு.

முதலிரு வருடங்கள் சுப்ரமணியனுக்கு எவ்விதப் பிரச்னையும் இருக்கவில்லை. கஃபீல் எனப்படும் அந்தப் பொறுப்பாளர் எல்லா சம்பிரதாயங்களையும் ஒழுங்குறவே செய்திருந்தார். அதன் பிறகு தான் சிரமங்கள் அவரைச் சூழத் தொடங்கின. அந்த இரண்டு வருடங்களுக்குப் பின்னர் அந்தப் பொறுப்பாளரை காணவில்லை. எங்கு போனாரோ தெரியவில்லை. தேடி அடையவும், விவரம் பெறவும் இயலாமல் போனது. சுப்ரமணியம் படித்தவரல்லர். மேலும், சவூதி சட்டதிட்டங்கள் பற்றியும் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.

வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்தை வயிறு உணர்த்த, அந்த உந்துதலில் கிடைத்த சிறு சிறு வேலைகளில் ஈட்டிய சிறுதொகை வேளைதோறும் வயிற்றுக்கே போதும் போதாது என்று போய்க்கொண்டிருந்த நிலையில், மெல்ல மெல்ல குடும்பத் தொடர்பும் அறுந்துப் போனது.

முடியாத நிலையில் சுப்ரமணியம் கிடந்தபோது, சில வருடங்களாகத் தொடர்பு இல்லாததால் இவர் கதை முடிந்திருக்கும்; இறந்துவிட்டார் என்றே முடிவு கட்டிவிட்டார்கள் குடும்பத்தார். மனைவி, இரு பிள்ளைகள் என்ற சிறு குடும்பம். கைக்குழந்தையாய் விட்டுவந்த மகளுக்கு இப்போது 13 வயது. வறுமை துரத்தியதால் மகனும் பள்ளிப்படிப்பை கைவிட்டு பண்ணைக் கூலியாளாகப் போய் விட்டான்.

முடக்கு வாதம், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றால் நலிவுற்று நோயுற்ற சுப்ரமணியம் பற்றி தபூக் இந்தியன் கம்யூனிட்டி என்னும் நற்பணி அமைப்பினர்க்குத் தெரிய வந்தது. அதன் பிரதான உறுப்பினரான அலீ மாஸ்டர் உடனடியாக ஜெத்தாவிலுள்ள இந்தியத் துணை தூதரகத்தின் கதவுகளைத் தட்டினார். துணை தூதரக மூத்த அதிகாரி எஸ்.டி. மூர்த்தி உடனடியாகச் செயலில் இறங்கினார். ஜெத்தா தமிழ்ச்சங்கத்தின் சிராஜ் போன்ற நல்லுள்ளங்கள் நிதிஉதவி திரட்டித் தர, மருத்துவமனையில் உடல் தேறிவந்தார் சுப்ரமணியம்.

உடனடியாக அவரை ஊருக்கு அனுப்பி வைக்கும் பொறுப்பை ஏற்று, சம்பந்தப்பட்ட சவூதி குடிபுகல்துறை, தடுப்புக்காவல் துறை அதிகாரிகளின் முழு ஒத்துழைப்பைப் பெற்று செயற்பட்ட தூதரக மூத்த அதிகாரி மூர்த்தி பாராட்டுக்குரியவர்.

ஒருவழியாக சுப்ரமணியம் ஊருக்கு அனுப்பப்பட்டார்.

ஆனால் இப்படி எத்தனை எத்தனையோ சுப்ரமணியங்கள் வெளிநாட்டு மோகம் கொண்டு, வந்து கொண்டும் (கஷ்டப்பட்டுப்) போய்க்கொண்டும் தான் இருக்கிறார்கள்.

கடன் கடக்கவே கடல் கடக்கும் சுப்ரமணியங்களுக்கிடையே வாழ்வில் நல்லதொரு இடம் கிடைப்பின் மட்டுமே கடல் கடக்கும் கொள்கையுடைய மணியானவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். என்ன வேறுபாடு என்றால் கல்வியறிவு.

ஆம். கற்றாரே கண்ணுடையார்.       – நன்றி : இந்நேரம்

Advertisements

தங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்..

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s