அல்லாஹ் போதுமானவன்!

விடிந்தால் நோன்பு இருபத்தேழு.

ஆமினாவுககுத் தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தாள். இந்தப் பெருநாளைக்கு எப்படியும் ஒரு பவுனில் ஒரு சங்கிலிக்கொத்து போடுவதாக அத்தா வாக்குக் கொடுத்திருந்தார். இந்த வருஷம் 27ஆம் கிழமையில் கிடைக்கும் மொத்தத் தொகையையும் அதற்காகவே செலவழிக்க வேண்டும் என்பது அவரது முடிவு.

வயதுக்கு வந்து ஏழு வருடங்களாகியும் இன்னும் வரன் வரவில்லை. எவ்வளவு பரம ஏழையாக இருந்தாலும் ஐந்து பவுனும் ஐயாயிரமும் எதிர்பார்க்கும் இந்தக் காலத்தில் மகளை மணமுடித்துக் கொடுக்கும் அவர் முயற்சி தோற்றுக் கொண்டே போகிறது.

பேட்டை மஸ்தான் தான் சொன்னார். ‘வருஷத்துக்கு ஒரு பவுன், இரண்டு பவுனாச்சும் சேர்துக்க ஜக்கரியா’ என்று – ஆமினாவும் அப்போது உடனிருந்தாள். அவர் சென்றதும் ஆமினாவிடம் ஆலோசித்தார் அத்தா. இந்த வருஷத்தில் மொத்தமாக சில ஆயிரங்களை பார்க்க வேண்டுமென்றால் ரமளானைவிட்டால் வேறு வழியில்லை.

பள்ளியில் படிக்கும் ஆமினாவின் தம்பி ஹமீத் காலையில் அத்தாவிடம் ஏதோ கேட்டான்.

அத்தா சொல்லிவிட்டார் ” அக்காவுக்கு சங்கிலி வாங்கிட்டு பாக்கியிருந்தாத்தான் நமக்கு துணிமணி வாங்கனும் ஹமீது. அக்காவை சீக்கிரமே கட்டிக் கொடுத்துடனும் பாரு” என்றார் அவர்.

தம்பி ஒப்புக் கொண்டான். விவரம் தெரிந்தவன். ஆமினாவுக்கு அவன் நடந்து கொண்ட விதம் பிடித்து இருந்தது. அத்தாவிடம் சொல்லி எப்படியாவது அவன் கேட்டதை வாங்கிக் கொடுத்துவிடச் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

பக்கீர்சா தப்ஸ் அடித்துக் கொண்டு ஊருக்குள் நுழையும் சப்தம் கேட்டது. ஒரு மணியாகி விட்டது. ஸஹருக்கு சோறு பொங்கி சுடச்சுட அத்தாவுக்குக் கொடுக்க எண்ணியிருந்தாள் படுக்கையிலிருந்து எழுந்து மளமளவென்று காரியமாற்றினாள். ரசம், துவையலோடு சாப்பாடு ரெடி.

மெல்ல ஹாலுககுள் நுழையம் போதே விழித்துக் கொள்ளும் அத்தா, அருகில் சென்று “அத்தா” என்று அழைத்தும் அசையாமல் கிடப்பது ஆச்சரியமாக இருந்தது. மெல்ல உட்கார்ந்து முதுகைத் தொட்டாள்.

“அம்மாடி” என்று கத்தி விட்டாள். உடலில் அவ்வளவு வெப்பம். ஜக்கரியா ராவுத்தரால் பேசக்கூட முடியவில்லை.

“சும்மா சாதாரண காய்ச்சல்தாம்மா சத்தம் போடாதே” என்றார். “தொழுதுட்டு சும்மாதானே அத்தா படுத்தீங்க?” அதுக்குள்ளே என்னாச்சுத்தா?” – அவள் அரற்றினாள்.

‘வியாதி வர்ரதுக்கு நேரங்காலம் ஏதும்மா?’ என்றவர் எழுந்து உட்கார்ந்தார்.

தலையணைக்கடியில் வைத்திருந்த காய்ச்சல் மாத்திரையை எடுத்து, தண்ணீர் வாங்கி போட்டார். ஏற்கனவே உடல் வலி காய்ச்சல் இருந்திருக்க வேண்டும்.

மாத்திரை போட்டுப் பத்து நிமிடம் ஆகியிருக்காது: திடீரென வாந்தி எடுத்தார்.

பரபரப்பில் ஹமீதும் எழுந்து கொண்டான்.

“அத்தா, டாக்டர்கிட்ட போவமா?” என்றான். “என்னால எழுந்திருக்க முடியலை ஹமீது. போயி தையூப்கான் டாக்டரை கூட்டிக்கிட்டு வா” என்றார்.

ஹமீது ஓடினான்.

அரைமணி நேரத்தில் டாக்டர் வந்து விட்டார். அதற்குள் இரண்டு முறை வாந்தி – மூன்று வயிற்றுப் போக்கு ஏற்பட்டிருந்தது.

உள்ளே நுழைந்ததுமே அந்த அனுபவ டாக்டர் சொல்லி விட்டார். “சீக்கிரம் டவுனுக்கு போயி குளுக்கோஸ் ஏத்துங்கப்பா. உடம்புல தண்ணிச் சத்தே இல்லாமப் போச்சு. எந்த ஊசி மருந்துக்கும் இது கேக்காது”

ஆமினா அழுதாள். ஹமீது குழம்பிப் போய் நின்றான். ஜக்கரியா உடைய ஆரம்பித்தார்.

“யா அல்லாஹ் இது என்ன சோதனை? இன்னக்கிப் பார்த்து இப்படியாச்சே. புள்ளக்கி எப்படியாச்சும் இந்த வருஷ ஜக்காத்துக் காசுல நகை பண்ணிடனும்னு நெனச்சிட்டிருந்தேனே. இந்த நெலமையில் நான் எங்கே போயி காசு கேக்கறது? அவர் உள்ளளுக்குள் மருகினார்.

டாக்டர் திரும்பவும சொன்னார். ” என்ன அத்தாவும் பிள்ளைகளும் மலைச்சுப் போயி நிக்கிறீங்க? சொன்னது காதுல விழுகலயா?”

ஜக்கரியா ஒரு நிலைக்கு வந்தார். ” இப்படிச் சொன்னா எப்படி டாக்டர்? டவுனுக்கு இந்த நேரத்துல டாக்ஸி பிடிச்சு போறதுக்கு வசதியில்லாதவங்க நாங்கன்னு உங்களுக்குத் தெரியாதா?” என்றார் பலகீனமான குரலில்.

அதுக்கில்லேப்பா – நாளைக்கு எம்மேல கொற வரப்படாதுல்ல? அதுக்குத்தான் முன்கூட்டியே சொல்லிக்கறேன்” என்றார்.

ஊசி போட்டு மருந்து கொடுத்தார்.

கவலையும் கண்ணீருமாய் பொழுது ஓடியது.

விடியற்காலையிலேயே தெருக்களில் பரபரப்புத் தெரிய ஆரம்பித்து விட்டது. கூட்டங்கூட்டமாக ஜக்காத்து வாங்கும் வெளியயூர்காரர்கள் படையெடுப்பு.

ஏதோ வாந்தி, வயிற்றுப்போக்கு டாக்டர் செய்த வைத்தியத்தில் நின்றிருந்தது. ஆனால், நாவறட்சி – சோர்வு இருந்தது. காய்ச்சலும் குறையவில்லை.

“ஆமினா.. ஆமினாம்மா” என்றழைத்தார் ஜக்கரியா.

என்னத்தா? இங்கேதானே இருக்கேன்” என்றாள் அழுது அழுது சோர்ந்து போயிருந்த ஆமினா.

“சீக்கிரமா கொஞ்சம் வெந்நீர் போடும்மா. குளிச்சிட்டு ஒரு ரவுண்ட் போயிட்டு வந்துடறேன்” என்றார்.

ஆமினா பதறினாள். “இந்த நெலமயில நீங்க வெளியில போக முடியாது அத்தா! சும்மா படுத்துக்கெடங்க..”

“ஸஹருக்கு ஆக்குன சோறு அப்படியே இருக்கு மறு உலைப்பாச்சி கஞ்சியாக்கித் தாரேன்” என்றாள்.

ஜக்கரியா மறுத்து விட்டு எழ முயன்றார். மடாரென்று சரிந்தார்.

“அத்தா!” என்ற பிள்ளைகளின் கதறலில் தெருவே கூடி விட்டது.

வேறு வழியில்லை! இந்த 27ஆம் கிழமை வருமானம் ஒன்றுமில்லாமல் போய்விட்டது! தன்னுடைய ஆசையில் – திட்டத்தில் விழுந்த பேரிடியின் வலியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தினறினார் ஜக்கரியா.

பிள்ளைகள் அருகிலிருந்து மெளனமாய் அழுது கொண்டிருந்தார்கள்.

அப்போது வீட்டின் வெளியே கார் நிற்கும் சத்தம்.

ஹமீது அவசரமாகக் கதவைத் திறந்து கொண்டு வெளியே போனான்.

காரிலிருந்து இறங்கிய அவ்வூரின் பெருந்தனக்காரர் மஹ்மூது ஹாஜியார்” ஏம்பா தம்பி! ஜக்கரிய்யா ராவுத்தர் வீடு இது தானே?” என்றார்.

“ஆமாங்க” என்றான் – இவ்வளவு பெரிய பணக்காரர் தங்கள் வீடுதேடி வந்ததை அவனால் ஜீரணிக்க முடியவில்லை.

இலேசான பயமும் கூட! “உள்ளே வாங்க” என்று பவ்யமாக அழைத்தான்.

உள்ளே வந்த ஹாஜியார், “அஸ்ஸலாமு அலைக்கும் பாய்” என்றார்.

ஆயாசத்துடன் படுத்திருந்த ராவுத்தர் அவசரமாக பதில் சொல்லி எழுந்து உட்கார முயன்றார்.

பரவாயில்லே. படுத்துக்கோங்க. இப்பத்தான் டாக்டர் தையூப்கான் நம்ம வீட்டுக்கு ஊசி போட வந்தாரு. ராத்திரி நடந்ததை சொன்னாரு. ஒவ்வொரு வருஷமும் உங்களுக்குத் தந்துட்டுத்தான் மத்தப்பேருக்கு ஜக்காத்து கொடுக்குறது வழக்கமாச்சே.

அதான் நேர்ல வந்து தந்துடலாம்னு வந்தேன். என்றவர் சற்றும் முற்றும் பார்த்தார்.

வறுமையின் கோலமாய் நின்ற அந்த வீடு. வாடி வதங்கிய பிள்ளைகள். ஓரமாய் நின்ற ஆமினா.

“ஏன் பாய். பிள்ளைக்கு கல்யாண ஏற்பாடு ஏதாச்சும் செஞ்சிருக்கீங்களா?” என்று கேட்டார் திடீரென்று.

ஜக்கரியாவுக்கு அழுகையே வந்து விட்டது.

மனதில் இருந்த அனைத்தையும் கொட்டித் தீர்த்தார்.

எழுந்து கொண்ட ஹாஜியார் “ஒன்றுக்கும் கவலைப்படாதீங்க பாய்! இன்ஷா அல்லாஹ் பெருநாள் கழிச்சி என்ன வந்து பாருங்க. கலியாணத்தை முடிச்சுப் போடுவோம். என்ன?” என்றவாறு சலாம் சொல்லி விடை பெற்றார்.

அவர் ராவுத்திரின் கையில் திணித்து விட்டுச் சொன்ற புதிய பணக்கட்டு அந்த வீட்டை பிரகாசமாக்கியது,

“அல்ஹம்துலில்லாஹ்” என்ற ராவுத்தரின் குரல் வீடெல்லாம் நிறைந்து பரவியது.

– நன்றி : சித்தார்கோட்டை இனையதளம்

Advertisements

தங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்..

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s