நோன்பின் மாண்புகள்

புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே. ரமளான் மாதத்தின் மாண்புகள் எத்தகையது? இதயத்தையும், பார்வையையும், செயல் களையும், ஒட்டுமொத்த வாழ்வையும் தூய்மைப்படுத்துகின்ற மாதம் தான் ரமளான்!

வான்மறை வழங்கப்பட்ட வளமான மாதம், நன்மைகள் நிறைந்த புனிதமான மாதம், அல்லாஹ்வின் அருளும் மன்னிப்பும் நிறைந்த மாதம்.

எந்த மாதத்தை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஷஹ்ரே அஜீம், ஷஹ்ரே முபாரக் என்று வர்ணித்துச் சொன்னார்களோ அந்த மாதம. உண்மையில் இந்த மாதத்தின் ஒவ்வொரு நாளும் புனிதமான தூய்மையான நாளாகும். இந்த மாதத்தின் ஒவ்வொரு இரவும் அருள் நிறைந்த, பாக்கியம் நிறைந்த இரவாகும்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்:

ரமளான் மாதம் வருகிறது. வானத்துக் கதவுகள் திறக்கப்பட்டு விடுகின்றன.

அருள் வளங்கள் மழையாய் பொழிகின்றன. சுவனத்தின் கதவுகள் திறக்கப்பட்டு விடுகின்றன.

நற்செயல்கள் நன்மைகளுக்கான பாதைகள் எளிதாக்கப்பட்டு விடுகின்றன.

எல்லோருக்குமே நன்மை செய்வதற்கான வாய்ப்பும், அருளும் கிட்டுகிறது. நரகத்தின் கதவுகள் மூடப்பட்டு விடுகின்றன.

தீமைகளின் பாதையில் முட்டுக்கட்டையாக நோன்பு வழி மறித்து நிற்கின்றது.

ஷைத்தான்கள் விளங்குகளால் பூட்டப்பட்டு விடுகிறார்கள். தீமைகளைப் பரப்புவதற்கான வாய்ப்புகள் வெகுவாகக் குறைக்கப்பட்டு விடுகின்றன’ என்று நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிச் சென்றுள்ளார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)

இத்துனை அருள் வளங்கள் நிறைந்த புனித ரமளான் மாதம் நம்மை நோக்கி இதோ வந்து விட்டது. இறை கருணையும், அருள் வளங்களும், கிருபைகளும், இறை திருப்தியும், இறை மன்னிப்பும் பொதிந்து கிடக்கும் இந்த மாதத்தில் நாம் என்ன செய்ய வேண்டும். எனதருமை சகோதரர்களே நம்முடைய பாத்திரம் காலியாக இருக்கிறதே ! இந்த நிலை நமக்கு வேண்டாம். ஏதாவது நாம் செய்ய வேண்டும் நமக்குரிய இறையருள் பங்கை சேகரித்துக் கொள்ள நாம் உறுதியான எண்ணம் கொண்டு எழ வேண்டும் அப்பொழுதுதான் அதன் முழுப்பயனை அடைய முடியும்.

நபித்தோழர் அபூதர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்: முஸ்லீம் ஷரீஃபில் பதிவு செய்யப்பட்டதை கவனித்தீர்களா? இறைவன் என்ன சொல்கிறான் அவனை நோக்கி ஓர் அடி முன்னேறினால் அவன் உங்களை நோக்கி இரண்டு அடி எடுத்து வைக்கிறான். நீங்கள் அவனை (இறைவனை) நோக்கி நடந்து சென்றால் அவன் உங்களிடன் ஓடோடி வருகிறான் என்று இறைவனே சொல்கிறான். எனவே நாம் ஒவ்வொருவரும் இப்புனித ரமளானை சிறப்பாகவும் சரியாகவும் பயன்படுத்துவேன் என்ற திடமான (நிய்யத்) எண்ணம் கொள்ள வேண்டும். அது தொழுகையாக இருக்கட்டும் அல்லது நோன்பாக இருக்கட்டும் அல்லது இதர ஏனைய வணக்க வழிபாடுகளாக இருக்கட்டும் எல்லாவற்றுக்கும் தொடக்கமாக (நிய்யத்) என்ற எண்ணம் அவசியமானதாக இருக்க வேண்டும். இந்த நிய்யத்துக்கான வாசகங்களை மனதால் நினைத்து நாவால் சொல்லாதவரை எந்த நற்செயலும் நிறைவேறுவதில்லை.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள் செயல்கள் அனைத்தின் விளைவுகளும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. (புகாரி உமர் பின் கத்தாப்) அந்த எண்ணம் சரியானதாகவும் இருக்க வேண்டும். வாய்மையானதாகவும் இறைவனின் உவப்பை மட்டுமே ஆதரவு வைத்து ஒரே எண்ணத்திலேயே அனைத்து நற்செயல்களும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் இறைவனின் அருள்வளங்களை அள்ளி நமது பாத்திரங்களை நிரப்ப முடியும். மேலும் நற்செயல்களில் (அமல்) ஈடுபட முனைந்து விட்ட பின் இந்த மாதத்தில் நாள்தோறும் என்ன செய்ய வேண்டும் எவையெல்லாம் இறைவனால் கடமையாக்கப்பட்டுள்ளது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த மாதத்தில் எப்படி அமல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சொன்னார்களோ செய்தும் காட்டினார்களோ அதை அப்படியே கூடுதல் குறைவின்றி நானும் செய்வேன் என்றும் உறுதி பூண வேண்டும். அப்பொழுதுதான் நோன்பின் மாண்புகளை முழுமையாக அடைய முடியும்.

நோன்பின் மாண்பும் அதன் சிறப்பும் ஏராளம் அதைச் சொல்லிக் கொண்டே போகலாம். வாருங்கள் மேலும் சில நபிமொழிகளை பார்ப்போம். எல்லா நற்செயல்களுக்கும் கூலி தருபவன் அல்லாஹ் தான் என்றாலும் நோன்பை குறிப்பிட்டுச் சொல்லும் போது நோன்பு எனக்குரியது என இறைவனே கூறுகின்றான்.

நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும்! நிச்சயமாக நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன் என்று அல்லாஹ் கூறினான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்! எனவே உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுக்கள் பேச வேண்டாம்! கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்! யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால் நான் நோன்பாளி! என்று அவர் சொல்லட்டும். முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ! அவன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடையாகிறது அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட விருப்பமானதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன.

1 நோன்பு திறக்கும் பொழுது அவன் மகிழ்ச்சியடைகிறான்

2 தன் இறைவனைச் சந்திக்கும் பொழுது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகிறான் (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)

மேலும் இம்மாதத்தின் மகத்துவம் குறித்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ரமளான் மாதம் ஆகிவிட்டால் அருளின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. (அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்) மற்றொரு நபிமொழி திர்மிதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது ஒவ்வொரு நற்காரியத்திற்கும் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படுகிறது என்பதை அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

எனவே இந்த அருள்வளம் மிக்க ரமளான் மாதத்தில் ஒரு நொடி பொழுதையும் தவறவிடாமல் மிகுந்த பேணுதலுடன் நோன்பு நோற்று ஐந்து வேளை பர்ளு தொழுகையை ஜமாத்துடன் தொழுது, மேலும் சுன்னத்தான தராவீஹ் தொழுகையை முழுமையாகத் தொழுது, நஃபில், தஸ்பீஹ் போன்ற நற்செயல்களில் அதிகம் கவனம் செலுத்தி நோன்பின் மாண்புகளை முழுமையாக பெற்று அல்லாஹ்வின் அருள் வளங்களை அள்ளி நமது பாத்திரங்களை நிரப்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் நோன்பின் முழுப் பயனையும் தந்தருள்வானாக! ஆமீன்

– மெளலவீ J.S.S. அலிபாதுஷா மன்பயீ ஃபாஜில் ரஷாதி

நன்றி- Nidur இனையதளம்

தங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்..

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s