நம்முடைய வாழ்வில் வெற்றியடைய மூன்று சக்திகள் ..!

உங்களையே நீங்கள் கேட்டுப் பார்க்க வேண்டிய கேள்வி இதுதான். உங்களால் ஆளுமைமிக்க மனிதராக விளங்க முடிகிறதா?

இந்தக் கேள்வியைப் படித்தவுடனேயே உங்கள் நண்பர்கள் – உங்களுக்கு வேண்டியவர்கள் – உங்களைப் பற்றிச் சொல்லும் பாராட்டு மொழிகளும், உங்களுக்குக் கீழே பணிபுரிபவர்கள் உங்களிடம் காட்டும் பணிவும் உங்கள் நினைவுக்கு வரும்.

“ஆமாம்! நான் ஆளுமைமிக்க மனிதர்”தான் என்று ஒரு குரல் உள்ளே எழும். இவை, உங்களுக்குள் இருக்கும் ஆளுமைப்பண்பின் ஆரம்ப அறிகுறிகள்தான்.

இதுவரை சந்தித்திராத ஒரு மனிதரைப் பார்க்க நேர்கையில், பழகத்தொடங்கி பத்து நிமிஷங்களுக்குள் அவரை உங்களால் ஈர்க்க முடிகிறதென்றால், உங்கள் ஆளுமைப்பண்பு தீர்க்கமாக இருப்பதாய்ப் பொருள்.

அறிமுகமான வட்டத்தில் மட்டுமன்றி, உங்களுடன் பழக நேர்கிற மூன்றாம் மனிதருக்கோ, உங்கள் பணிகளைப் பற்றிக் கேள்விப்படுகிற புதியவர் ஒருவருக்கோ, உங்கள் மீது வியப்பு கலந்த பிரியமோ – மரியாதையோ தோன்றுமேயானால், அதுதான் உங்கள் ஆளுமைப் பண்பின் அழுத்தமான அடையாளம்.

இந்த ஆளுமைப்பண்பு வளர்கிறபோது, உங்கள் வருகை எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. உங்கள் வார்த்தைகள் மற்றவர்களால் ஏற்கப்படுகின்றன. உங்களைத் தவிர்க்க நினைப்பவரும், உங்கள்பால் ஈர்க்கப்படுகிறார்.

“அப்படியா! இதற்கு மந்திர சக்தி எதுவும் வேண்டுமா?” என்று நீங்கள் கேட்கலாம். இது மந்திர சக்தியல்ல. இதற்குத்தான் மனித சக்தி என்று பெயர்.

இந்த அபரிதமான சக்தியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்றால், என்னென்ன வேண்டும் என்பதைப் போலவே, என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதும் முக்கியம்.

பலபேர் ஆர்ப்பாட்டமாகப் பேசுவதும் ஆரவாரமாக நடந்து கொள்வதும் ஆளுமை என்று நினைத்துக் கொள்கிறார்கள். உண்மை என்னவென்றால், அப்படி நடந்துகொள்ளக்கூடிய மனிதருக்கு ஒரேயொரு ரசிகர்தான் இருப்பார். அந்த ரசிகர் அவரேதான்.

பொருத்தமில்லாமல் துருத்திக்கொண்டிருக்கும் காரணத்தாலேயே விலையுயர்ந்த முந்திரிகூட, “முந்திரிக்கொட்டை” என்ற வசவுச்சொல்லை வாங்கிக் கட்டிக்கொள்கிறது.

உங்கள் செல்வமோ – செல்வாக்கோ – சிறப்புப் பட்டங்களோ – பொது இடங்களில் உங்களாலேயே வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டால், அவற்றுக்கும் மதிப்பிருக்காது. நீங்களும் மதிப்பிழக்க நேரிடும்.

உங்கள் ஆளுமையை வலிமையாக வெளிக்காட்டப் போவது, உங்கள் பணிகளும் பணிவும் மட்டும்தான். வலிமைமிக்க மனிதர் எளிமை மிக்கவராய் விளங்கும்போதுதான் அவர் இருக்கும் இடமே அவரின் தாக்கத்தை உணர்கிறது. அவரைக் கூர்ந்து கவனிக்கிறது.

ஆர்ப்பரித்து வருகிற காட்டு யானையைக் கண்டால் மிரண்டு விலகுகிற மனிதன், கோவில் யானையைக் கண்டால் அருகில் சென்று ஆசீர்வாதம் வாங்குகிறானே….. இது ஏன்?

வலிமை மிகுந்த யானை பணிவின் வடிவமாய் கட்டுப்பட்டு நிற்பதுதான் காரணம். இதற்கு உளவியல் பூர்வமான காரணம் ஒன்றும் இருக்கிறது.

தன்னுடைய நிலையில் மனிதன் உயர்கிறபோது, அவனிடம் இனிமையான இயல்பான பண்புகள் இருக்காது என்கிற கணிப்போடுதான், சராசரி மனிதன் சாதனையாளர்களை நெருங்குகிறார். விறைப்பான முகம், புதைந்து போன புன்னகை – அதைவிட வேகமாய் சில சமயம் வெளிப்படும் செயற்கைப் புன்னகை – உயிர்ப்பில்லாத ஓரிரண்டு சொற்கள், கம்பீரம் என்று நினைத்து கடுகடுப்பாய் இருக்கிற முகம் – இவையெல்லாம் உங்களை மேலும் அந்நியப்படுத்துவதோடு, இனந்தெரியாத எதிர்ப்புணர்வை ஏற்படுத்துகிறது.

எனவே மனிதர்கள் உங்களிடமிருந்து தள்ளி நிற்பதோடு உங்களைப்பற்றிய எதிர்மறை எண்ணங்களையும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். உங்களிடம் பயன்கருதிப் பழகுபவர்கள் மட்டுமே பணிந்தும் குழைந்தும் பேசுகிறார்கள்.

“பெருக்கத்து வேண்டும் பணிவு” என்கிறார் திருவள்ளுவர்.

 “நிலை உயரும்போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்” என்கிறார் கண்ணதாசன்.

வாழ்க்கையைப் பற்றி ஆழமாக யோசித்தால், உங்களை சக்திமிக்க மனிதராக ஆக்கக்கூடிய அம்சங்கள் மூன்று என்று சொல்லத் தோன்றுகிறது. நமது நம்பிக்கை மாத இதழின் மனிதவள மேம்பாட்டு இயக்கமாகிய ‘சிகரம் உங்கள் உயரம்’ தொடங்கப்பட்ட போது, ஒவ்வொருவருக்கும் வேண்டிய அந்த மூன்று அம்சங்களையே அமைப்பின் நோக்கமாய் ஆக்கினோம்.

அந்த மூன்று அம்சங்கள் இவைதான்:

பணம், பரிவு, பக்குவம்.

உங்களுக்கு வருகிற பணம், அடுத்தவர்களின் பொறாமையைத் தானே அதிகரிக்க முடியும்? உங்கள் ஆளுமையை எப்படி அதிகரிக்கும்? என்ற கேள்வி உங்களில் சிலருக்கு எழலாம்.

பணம் என்கிற முதல் விஷயத்தை நீங்கள் புத்திசாலித்தனமாக அணுகினாலேயே பரிவு – பக்குவம் ஆகியவற்றை நீங்கள் அடைந்துவிடுவீர்கள்.

ஓரளவு பணம் சேர்க்கத் தொடங்குகிறீர்கள். அந்தப் பணம் உங்களை நம்பிக்கைமிக்கவராக ஆக்குகிறது. வாழ்வின் அடிப்படைத் தேவைகளையும் தாண்டி அதிகமான சில தேவைகளையும் உங்களால் எளிதில் நிறைவேற்றிக் கொள்ள முடிகிறது.

இந்தப் பணம், வாழ்க்கை மீதான நம்பிக்கையை அதிகரிக்கக்கூடிய ஒரு கருவி என்ற அளவில் அதற்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுத்தால் போதும். சிலபேர், பணம் சம்பாதிப்பதற்கு வாழ்க்கை ஒரு கருவி என்று கருதிவிடுகிறபோது அவர்கள் கண்களைப் பணம் மறைக்கிறது. வாழ்க்கையில் உறவுகளை, உற்சாகத்தை, உணர்வுகளை எல்லாம் அடகுவைத்துவிடுகிறார்கள். அவர்களை அண்டிப் பிழைக்கும் சிலரைத் தவிர மற்றவர்கள் விலகி நிற்கிறார்கள். வெறுப்பாகப் பார்க்கிறார்கள்.

ஆனால், சில செல்வந்தர்களைப் பாருங்கள் – சமூகத்தின் எல்லாத் தரப்பினரும் அவர்களை ஆர்வமாய் நெருங்குகிறார்கள் – அன்பு செலுத்துகிறார்கள். என்ன காரணம்? அந்தப் பணக்காரர்கள், தங்களிடம் சேர்ந்த பணத்தை ஒன்றும் பார்ப்பவர்களுக்கெல்லாம் பகிர்ந்து கொடுப்பதில்லை. ஆனால், அந்தப் பணத்தால் தங்களுக்கு வாழ்க்கை மேல் ஏற்பட்ட நம்பிக்கையை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுக்கிறார்கள்.

தங்களால் முடிந்த அளவு பணத்தை பிறர் நலனுக்கு உதவினாலும், எல்லையே இல்லாத அளவுக்கு அடுத்தவர்கள்மேல் அக்கறை கொள்கிறார்கள். மனிதர்களை, அவர்களின் இப்போதைய நிலையை வைத்து எடைபோடாமல், மதித்துப் பழகுகிற பக்குவத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

பணம் சம்பாதிப்பதற்கு வாழ்க்கை ஒரு கருவியல்ல – வாழ்க்கையை வாழ்வதற்குத் தான் பணம் ஒரு கருவி என்று அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

இது பணத்திற்கு மட்டுமல்ல. உங்களிடம் இருக்கும் கூடுதல் திறமை எதற்கும் இது பொருந்தும்.

அறிஞர்கள், நம்மிடையே நிறைய உண்டு. சில அறிஞர்கள் அரங்கத்தில் பேசுகையில் அவர்களின் அபாரமான அறிவால் ஈர்க்கப்பட்டு, அருகே செல்பவர்கள், பழகிப்பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் விலகி வருவதுண்டு, என்ன காரணம்?

தங்கள் தனித்தன்மையான ஆற்றலைக் காரணமாக வைத்து மற்ற மனிதர்களிடமிருந்து விலகியிருக்கிற விசித்திரமான எண்ணம் அவர்களைத் தனிமைப்படுத்துகிறது.

சில அறிஞர்களோ, உரை நிகழ்த்தும்போது காட்டும் அதே அக்கறையையும், பக்குவத்தையும் தங்களிடமும் நெருங்கி வருபவர்களிடம் வெளிப்படுத்துவார்கள்.

பணம் என்பது உங்களிடம் இருக்கிற கூடுதல் சிறப்பம்சத்தின் குறியீடு. எல்லோரிடமும் நெருங்கிப் பழகினால், அவர்கள் கேட்கும் உதவிகளை எல்லாம் செய்ய வேண்டி வருமோ என்ற கவலையாலேயே சிலர் விலகி நிற்பதுண்டு. அதற்கு அவசியமில்லை. ஒருவர் உதவி கேட்கிறார் என்றால், அது நியாயமென்று பட்டு நீங்கள் உதவுகிற நிலையிலிருந்தால் உதவலாம். அல்லது நாசூக்காக மறுத்துச் சொல்லிவிடலாம்.

உங்களை ஆளுமைமிக்க மனிதராக செதுக்கிக்கொள்ள என்ன வழியென்று இப்போது வரைபடம் ஒன்றைப் போடலாம். முதல் விஷயம், உங்களை தனிப்பட்ட முறையில் தகுதிமிக்கவர் ஆக்கிக் கொள்வது. அது பொருளாதாரம் – சமூக மதிப்பு – செல்வாக்கு என்று எந்தத் தகுதியாகவும் இருக்கலாம். அதனை உங்கள் முயற்சியால் பெருக்கிக்கொள்வது.

இரண்டாவதாக, சக மனிதர்களிடமிருந்து உங்கள் தகுதிகளே உங்களை பிரித்துவிடாமல் பார்த்துக்கொள்வது. இதற்குத்தான் பரிவு என்கிற அம்சத்தைப் பற்றிப் பேசுகிறோம். அடுத்த மனிதரிடம் நீங்கள் பரிவு காட்டும்போது உங்களை நீங்களே கொஞ்சம் விரிவுபடுத்திக் கொள்கிறீர்கள். உங்கள் அடிப்படையான சக்தியின் எல்லை இன்னும் விரிவடைகிறது. எத்தனை எத்தனை மனிதர்களிடம் நீங்கள் பரிவு காட்டுகிறீர்களோ அந்த அளவுக்கு உங்கள் சக்தி விரிவடைந்து கொண்டே போகிறது.

இதன் விளைவாக உங்களுக்கு ஏற்படும் தன்மைக்குப் பக்குவம் என்று பெயர் சொல்கிறார்கள். உங்கள் செல்வம் – கல்வித்தகுதி – சமூகத்தில் உங்களுக்கிருக்கும் சிறப்பு நிலை எவற்றோடும் உங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாமல், மேலும் பணிவுடன் எளிய மனிதராய் நடந்துகொள்கையில் நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு – இந்தக் கட்டுரையில்கூட எழுதமுடியாத அளவுக்கு சூட்சுமமான உள்நிலை வளர்ச்சிகள் உங்களுக்கு உருவாகின்றன.

நீங்கள் பகட்டாக இருப்பதைவிட பணிவாக இருப்பது வசதியானது என்பதற்கு நகைச்சுவையான காரணம் ஒன்றை நான் சொல்வதுண்டு. உங்கள் பெருமைகளைப் பற்றி உங்களுக்கு ஒருபெருமித உணர்ச்சி இருக்குமானால் அதில் ஓர் அடிப்படை சிரமம் இருக்கிறது. சந்திக்கிற ஒவ்வொருவரிடமும் உங்களைப் பற்றி நீங்களே பேசவேண்டியிருக்கும். ஆனால் பலம் பொருந்திய நிலையில் இருந்தும் நீங்கள் பணிவோடும் பக்குவத்தோடும் நடந்துகொண்டால் ஒரு வசதி இருக்கிறது. உங்கள் பெருமைகளை, உங்களைத் தவிர எல்லோரும் பேசுவார்கள்.

பணம் என்கிற ஒரு பலத்தை எப்படி விழிப்புணர்வோடும் விருப்பத்தோடும் சம்பாதிக்கிறீர்களோ, அதே விழிப்புணர்வோடும் விருப்பத்தோடும் பரிவு – பக்குவம் ஆகிய அருங்குணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் இருக்கிற இடத்தில் உங்களைச் சுற்றி அபரிதமான ஈர்ப்பு சக்தி உருவாகும். நீங்கள் நடமாடும் இடங்களில் உங்களைப் பற்றிய நல்லெண்ண அலைகள் தோன்றும். அவையே கவசமாய் இருந்து உங்களைக் காக்கும்.

உங்களையும் அறியாமல், உங்கள் செல்வாக்கு வட்டம் விரிவடைந்து கொண்டே போகும். உங்களைப் பற்றி யாரோ எங்கோ பேசிக் கொண்டார்கள் என்று உங்கள் காதுக்கு வருகிற செய்திகளில் பெரும்பான்மையானவை, உங்களைப் பற்றிய நல்ல விஷயங்களாகவே இருக்கும்.

மீண்டும் சொல்கிறேன். இது மந்திர சக்தியல்ல, மனித சக்தி.

பணம் – பரிவு – பக்குவம் ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பதை யார் உணர்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் வெற்றி!!

– ஆசிரியர்: மரபின் மைந்தன் ம. முத்தையா

Thank & Source : http://vanjoor-vanjoor.blogspot.com/2010/10/blog-post.html

தங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்..

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s