பாதுகாக்கப்படும ஃபிர்அவ்னின் உடல்! சிந்திக்கும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி!

1898 ல் எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட அதிசய மம்மி 3000 ஆண்டு பழமை மிக்க அன்றைய எகிப்தை ஆண்டு வந்த இரண்டாம் ரம்சீஸ் என்ற ஃபிர்அவ்னின் உடல் என்று அடையாளம் காணப்பட்டது. தொல் பொருள் ஆராய்ச்சிக்கு தனி முக்கியத்துவம் அளித்து வந்த ஃப்ரான்சு நாடு அந்த உடலை ஆராய்ச்சி செய்வதற்காக எகிப்திடம் கேட்டு வாங்கியது. மருத்துவ அறிவியல் துறை ஆய்வாளரான டாக்டர் மோரிஸ் புகை தலைமையிலான குழு அவ்வுடலை ஆய்வுக்கு உட்படுத்தியது. உடலில் படிந்திருந்த உப்பின் துணிக்கைகளை வைத்து இது கடலில் மூழ்கி இறந்தது என்ற முடிவுக்கு வந்தனர். ஆய்வின் முடிவில் அவ்வுடல் மூவாயிரம் ஆண்டு பழமையான எகிப்தை ஆண்ட மன்னனின் உடல் என்று கண்டறியப்பட்டது! அந்நேரம் பாதுகாக்கப்படுவதாக இறைவன் வாக்களித்திருக்கும் ஃபிர்அவ்னின் உடல் பற்றிய பேச்சு சிந்தனையாளர்கள் மத்தியில் எழ ஆரம்பித்தது. இது பற்றிய செய்தி மோரிஸ் புகையின் கவனத்துக்கும் வந்தது. 1898 ல் கண்டெடுக்கப்பட்ட மம்மியைக் குறித்து 1400 வருடங்களுக்கு முன்பே கூறப்பட்டதா? இது எப்படி சாத்தியமாகும்? என்று சிந்தனை செய்தார் மோரிஸ் புகை. 

சிந்தனையில் மோரிஸ் புகை!

திருக்குர்ஆன் கடலில் மூழ்கி இறந்த பின்னர் ஃபிர்அவ்னின் உடல் பாதுகாக்கப்படும் என்று பிரகடனம் செய்கிறது. தோரா மற்றும் பைபிளின் பழய ஏற்பாடும் மோசேயின் காலத்தில் இஸ்ரவேலர்களைக் கொடுமைப் படுத்திய பர்வோன் மன்னனைப் பற்றியும் இறுதியில் அவன் கடலில் மூழ்கி இறந்தான் என்றும் கூறுகிறது. இதோ என் முன்னாலிருப்பது அக்காலத்தில் இறந்து விட்ட உடல் அல்லவா? என் ஆராய்ச்சியின் மூலம் நான் அறிந்திருக்கும் முடிவை 1400 ஆண்டுகளுக்கு முன் முஹம்மது (ஸல்) எவ்வாறு அறிந்து கொண்டார்கள்? பைபிளில் தேடினார் மோரிஸ் புகை. பர்வோன் மன்னனின் முடிவைப் பற்றி யாத்திராகமம் இவ்வாறு கூறுகிறது.

ஜலம் திரும்பிவந்து, இரதங்களையும் குதிரைவீரரையும் அவர்கள் பின்னாக சமுத்திரத்தில் பிரவேசித்திருந்த பார்வோனுடைய இராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை. (யாத்திராகமம் 14 :28)

இவ்வுடல் பாதுகாக்கப்படும் என்பதற்கான எந்தக் குறிப்பையும் பைபிள் வழங்கவில்லை. 

ஆய்வுக்குப் பின்னர் பர்வோன் மன்னனின் உடல் விலை உயர்ந்த கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டு தனி மரியாதையுடன் எகிப்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் மோரிஸ் புகை சிந்தனையில் ஆழந்தார்! இவ்வுடல் பாதுகாக்கப்படும் என்ற குர்ஆனின் செய்தி அவரை சிந்திக்கத் தூண்டியது.. இதே வேளையில் தான் சவூதி அரேபியாவில் மருத்துவ அறிவியல் சம்மந்தமான ஒரு மாநாடு நடை பெற்றது. மோரிஸ் புகை அதில் கலந்து கொண்ட போது தான் கண்டு பிடித்த உண்மையையும் தண்ணீரில் மூழ்கி இறந்த பின்னர் பாதுகாக்கப்பட்ட உடலைக் குறித்தும் இஸ்லாமிய அறிஞர்களிடம் கலந்துரையாடினார். அப்போது அங்கிருந்த அறிஞர்களில் ஒருவர் திருக்குர்ஆனைத் திறந்து கடலைக் கடந்து செல்லும் இஸ்ரவேலர்களைப் பின் தொடர்ந்து விரட்டிச் சென்ற ஃபிர்அவ்ன் மன்னன் மூழ்கடிக்கப்பட்டதையும் அவனது உடல் பின்வரும் தலைமுறைக்கு ஓர் அத்தாட்சி என்ற நிலையில் பாதுகாக்கப்படும் என்ற இறைவனின் பிரகடனத்தை வாசித்துக் காட்டினார். அவ்வசனம்

எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உன் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்”
(அல்-குர்ஆன் 10: 92)

இவ்வசனம் மோரிஸ் புகை அவர்களிடம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அங்கு கூடியிருந்தவார்களுக்கு முன்னால் அவர் அறிக்கையிட்டார்! அஷ்ஹது அன் லாஇலாஹ இல்லல்லாஹ்! வ அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்! 

கெய்ரோ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட மம்மிகளில் ஃபிர்அவ்னின் உடல் மட்டும் வித்தியாசமானதாக உள்ளது. மற்றவை ரசாயன திரவங்களைக் கொண்டும் துணிகளில் பொதிந்தும் வைக்கப்பட்டிருக்கும் போது ஃபிர்அவ்னின் உடல் மட்டும் அப்படியே பாதுகாக்கப்படுகிறது! திருக்குர்ஆனின் அறைகூவலை உண்மைப் படுத்திக் கொண்டிருக்கும் இந்த சாட்சியைக் கண்கூடாகக் கண்ட பின்னரும் மக்களில் பெரும்பாலோர் இன்னும் உறங்கிக் கொண்டுதான் உள்ளனர். திருக்குர்ஆனின் கூற்று எவ்வளவு உண்மை!

நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்” (அல்-குர்ஆன் 10:92

சீர்குலையாத பகுத்தறிவுக் கொள்கை!

அனஸ் இப்னு மாலிக் (ரழி) அறிவிக்கின்றார்கள்: (நபி (ஸல்) அவர்களை நோக்கி) ஒரு மனிதர் முஹம்மதே! எங்களின் தலைவரே! எங்கள் தலைவரின் மகனே! எங்களில் சிறந்தவரே! எங்களில் சிறந்தவரின் மகனே! என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மக்களே அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள், மேலும் ஷைத்தான் உங்களைக் கெடுத்துவிட வேண்டாம். அல்லாஹ்வின் மீது ஆணை! எனக்கு அல்லாஹ் வழங்கிய தகுதியை விட என்னை உயர்த்துவதை நான் விரும்ப மாட்டேன்” (அஹ்மது : ஹதீஸ் எண்: 12141)

இஸ்லாம் நடுநிலையையும் நீதியையும் பேணும் மார்க்கமாகும். ஆன்மீகத்தின் பெயரால் வரம்பு மீறுதலை ஒருபோதும் இஸ்லாம் அங்கீகரிப்பதில்லை. இதனால் தெளிவான ஏகத்துவக் கொள்கையில் சிறிதும் பிறழாமல் மேலோங்கி நிற்கிறது. அதன் இறைக் கொள்கைக்குக் களங்கம் விளைவிக்கும் சிறு செயலைக் குறித்தும் அது எச்சரிக்காமல் விட்டதில்லை.

இஸ்லாமிலிருந்து வழிதவறிச் சென்ற மதங்கள் மகான்கள் மற்றும் புண்ணிய புருஷர்கள் மீது கொண்ட வரம்பு மீறிய பக்தியால் அவர்களை இறைவனின் தன்மைக்கு உயர்த்தின. இதனால் இறைவனின் தன்மைக்குக் களங்கம் கற்பித்து இணைவைப்புக் கொள்கையில் சென்றுவிட்டன. மனிதர்களை இறை அவதாரங்களாகவும் இறைவனின் புதல்வர்கள் எனவும் நம்பிக்கை கொண்டு அவர்களை வணக்கத்துக்குரியவர்களாகவும் ஆக்கிக்கொண்டனர். உண்மையில் இத்தகைய நம்பிக்கை இறைவனின் மேன்மைக்கும் மகத்துவத்திற்கும் களங்கம் கற்பிக்கும் நம்பிக்கையாகும்.


சிலைவணக்கத்தை எதிர்த்த பகுத்தறிவுத் தலைவர்களுக்குக் கூட அவர்களின் தொண்டர்கள் சிலைகளை ஏற்படுத்தி அதற்கு மாலை மரியாதை செய்து கொள்வதை நவீன உலகில் கூட நாம் கண்டு வருகிறோம். கல்லுக்கு மரியாதை கூடாது என்றவர்களே கல்லுக்கு மாலை இட்டு மரியாதை வழங்கும் அவலம்!
தெளிவான ஏகத்துவக் கொள்கையை உலகுக்கு போதித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்குப் பின்னால் தன் சமுதாயம் சிஞ்சிற்றும் வழிதவறாத வண்ணம் சீரிய வழிகாட்டுதலை விட்டுச் சென்றார்கள். ஏகத்துவக் கொள்கைக்கு களங்கம் ஏற்படும் சிறிய காரியங்களைக் கூட அவர்கள் சமூகத்துக்கு எச்சரிக்காமல் விட்டதில்லை. மக்கள் தம்மை வரம்பு மீறிப் புகழ்வதால் இறைவனின் தன்மைக்கு தம்மை உயர்த்தி அதனால் இறைவனின் மகத்துவத்துக்குக் களங்கம் கற்பிக்கும் படுபாதகச் செயலில் அது அவர்களைக் கொண்டு சேர்த்து விடும் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். அதனால் தான் இத்தகைய வரம்பு மீறிய புகழ்ச்சிகளை மக்கள் செய்யும் போது அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள், சாத்தான் உங்களைக் கெடுத்துவிட வேண்டாம் என்று கூறி எச்சரித்தார்கள்.

இதனால் தான் இன்றளவும் மதத் தலைவர்களும் ஏன் அரசியல் தலைவர்களுக்குக் கூட சித்திரங்களும் சிலைகளும் செய்யப்பட்டு மாலை மரியாதைகளுடன் வணங்கப்படும் போது ஒரு கற்பனை உருவம் கூட முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு கொடுக்காமல் அதன் ஏகத்துவக் கொள்கையில் இஸ்லாம் சிறந்து விளங்குகிறது. இதனால் தான் முஹம்மத் (ஸல்) அவர்கள் கற்பனையாக வரையப்படுவதைக்கூட முஸ்லிம் சமுதாயம் ஏற்றுக்கொள்வதில்லை.

நிச்சயமாக நான் உங்களைப் போன்ற மனிதனே! திண்ணமாக உங்கள் இறைவன் ஒரே இறைவன் என எனக்கு (இறைவனிடமிருந்து) வெளிப்பாடு வருகின்றது, யார் தன் இறைவனின் சந்திப்பை ஆதரவு வைக்கிறாரோ அவர் அறச்செயல்களைச் செய்து தன் இறைவனை வணங்குவதில் எவரையும் இணையாக்காமல் இருக்கட்டும் என்று (நபியே!) நீர் கூறும்!” (திருக்குர்ஆன் 18: 110)

%d bloggers like this: